ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி


rajamkrishnan

ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி

ராஜம் கிருஷ்ணனின் “சூரியக் கதிர்கள்” என்னும் சிறுகதையை முதலில் வாசிப்போம்.

சமூக மாற்றத்துக்கான எழுத்துகள் பன்னெடுங்காலமாகவே குறைவு. சமூகம் புதிய சிந்தனையில், தனிமனித உரிமைகளை மதிக்கும் மனித உறவுகளில் பளிச்சிட வேண்டும் என்னும் கனவு உள்ள எழுத்தாளர்களே மிகக் குறைவு.

ஒரு அனாதையான சிறுவன் ஒரு ஆசிரியையால் வளர்க்கப் படுகிறான். அவன் விரும்பிய பெண்ணையே திருமணமும் செய்து கொள்கிறான். ஏழ்மைச் சூழலில் ஆதரவற்று ஒரு தொண்டு நிறுவனத்தால் அடிப்படைக் கல்வி பெற்ற அந்தப் பெண் நாகரிகமாக ‘பார்ட்டி” போன்ற சங்கமங்களில் கலந்து பழகத் தெரியாதவள் என்று அவன் அவளைக் கை விடுகிறான். அந்த ஆசிரியையும் அப்படிக் கணவனால் கைவிடப் பட்டவரே. அந்தப் பெண்ணைப் பல காலம் கழித்து ஒரு ஊரில் ஏழ்மையில் இருந்தாலும் தன்னை மதிக்கும் நேசிக்கும் கணவனுடுடன் (மறுமணத்துக்குப்பின்) காண்கிறார் அந்த ஆசிரியை. “சூரியக் கதிர்கள்” சிறுகதையின் சுருக்கம் இதுவே.

விவாகரத்துப் பின் ஒரு பெண்ணுக்குத் திருமணம், விதவைக்கு மறுமணம் என்பது இஸ்லாம் மதத்தின் வாழ்க்கை முறையில் நல்ல முறையில் நடத்தப் பட்டு விடுகிறது. பிற மதங்களில் அவர்கள் மறுவாழ்வு கேள்விக்குறியே. இந்த சிறுகதையில் ஒரு பெண் மறுவாழ்வு பெறுவது மையக் கருத்து. இந்தக் கதை 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டது. இன்றும் பெண்களின் மறுவாழ்வுக்கு எதிரான போக்கை உடைய சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம். இந்த லட்சியவாத சிந்தனைக்காக அவர் போற்றுதற்குரியவர். அவர் தமக்குக் குழந்தையில்லையென்றாலும் உறவினர் வழியில் மற்றும் ஏழை எளியோர் எனப் பல குழந்தைகளின் படிப்புக்கு உதவியவர்.

விளிம்பு நிலை மக்கள் பலரையும் மையப் படுத்தியே அவரது எழுத்துகள் இருந்தன. 2009ல் ‘வேருக்கு நீர்’ என்னும் நாவலுக்காக அவர் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

ஒரு படைப்பாளியின் உடலுக்கு மட்டுமே மரணம் உண்டு. அவரது படைப்புகள் வாசகர்களால் வருங்காலங்களிலும் மீண்டும் மீண்டும் வாசிக்கப் பட்டு அவருடன் ஒரு உரையாடலை நிகழ்த்தப் போகிறார்கள்.

அம்மையார் இறுதி நாட்களில் உறவால் நிராகரிக்கப் பட்டு முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார் என்பதைப் பார்க்கும் போது கண்டிப்பாக மனம் வேதனைப் படுகிறது. அதே சமயம் அவரை நிராகரித்தவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியும். மனநிலை பாதிக்கப் பட்டோர், மூப்பெய்தி நடமாட்டமில்லாதோர் ஆகியோருக்கு சமூகத்தில் இடமில்லை. சமூகத்தின் குரூரத்தைத் தாண்டி ஒரு குடும்பம் இவரை கவனித்திருக்க வேண்டும் என்று ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்?

Posted in தனிக் கட்டுரை | Leave a comment

தீபாவளி கொண்டாடுவது என்னும் குழந்தைப் பருவ நீட்சி


images
தீபாவளி கொண்டாடுவது என்னும் குழந்தைப் பருவ நீட்சி

என் குழந்தைப் பருவத்தில் நான் இதைக் கொண்டாடினேன் – நீயும் கொண்டாடு என்று பல பண்டிகைகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நீட்சி பெறுகின்றன. என் குழந்தைப் பருவம் மீண்டும் கொண்டாடப் படுகிறது என்னும் அகந்தையில் ஒரு குடும்பமே சமூகமே கொண்டாடிக் கொண்டே போகிறது.

தீபாவளியின் புகையும் சத்தமும் மழைக்காலத்துக்கு மிக நல்லது என்று விளக்கம் கொடுக்கும் பெரிசுகள் ஏகமாக உண்டு. வணிக நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு தீபாவளிக்கு. நகை, துணிமணி என்னும் அடிப்படைத் தேவைகள் மக்களின் கவனம் மிகவும் பெரும் நாட்கள் தீபாவளிக்கு முன்னுள்ள நாட்கள். அவர்களுக்கு ஒரு வருடம் முழுவதுமுள்ள லாபத்தின் 90%த்தைக் கொடுத்து விடுகின்றன.

பல தொண்டு நிறுவனங்கள் முதியோர் அல்லது அனாதைக் குழந்தைகள் தீபாவளி கொண்டாட வேண்டாமா? என்று ஆரம்பித்து விளம்பரம் செய்கின்றன. அவர்களது 364 நாட்கள் பற்றி அக்கறையில்லாத சமூகம் தீபாவளியைப் பிறருக்கு இணையாகச் சத்தமும் புகையுமாய்க் கொண்டாட வேண்டும் என்பதில் மட்டும் அக்கறை கொள்ளும் என்று நம்புகிறார்கள். அது ஓரளவு நடக்கவும் செய்கிறது.

கொண்டாட்டங்கள் இயந்திரமயமான வாழ்க்கையின் அன்றாடத்திலிருந்து ஒரு தப்பிப்பாக அமைகின்றன என்பதைத் தவிர அந்தக் கொண்டாட்டம் எல்லோருக்குமே கட்டாயம் என்னும் சமூக விதி ஒரு எழுதப் படாத வன்முறைச் சட்டமாக எல்லோரையுமே மிரட்டுகிறது.

மனமுதிர்ச்சியுடன் சமூகம் கூடும் சந்தர்ப்பங்களும் சமூகம் கொண்டாடும் விஷயங்களும் மாறினால் அழகாக இருக்கும். மாறாவிட்டாலும் இந்தக் கொண்டாட்டங்களின் தீவிரங்களையும் பண்டிகைகளுக்கு மிகையாகப் பல பரிமாணங்களில் விளக்கங்கள் கொடுத்து உசுப்பேற்றிக் கொள்வதையாவது குறைத்துக் கொள்ளலாம்.

இன்று ஆந்திராவில் வெடித் தொழிற்சாலையில் பல கூலிகள் இறந்து விட்டார்கள். அனேகமா எந்தப் பாதுகாப்பு உத்தரவாதமில்லாத சூழலில் பெரிதும் குழந்தைத் தொழிலாளிகள் பணிபுரியும் பண்டிகை இது. இவர்களுக்கு விடிவு பிறக்கும் விழிப்புணர்வு பற்றியும் பேசும் வாய்ப்பாக தீபாவளி அமைகிறது. நம்மை ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளப் பண்டிகைகளில் நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.

தீபாவளி கொண்டாடுவது குழந்தைகளின் உலகில் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் அதை மறுக்க வேண்டியதில்லை. மறுபக்கம் நாம் வளர்ந்து விட்டோமா என்றும் பார்க்கத் தான் வேண்டும்.

(image courtesy:freegreatimages.com)

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சிங்களவர் திராவிடர்களா ?


Flag_of_Sri_Lanka.svg
சிங்களவர் திராவிடர்களா ?

ஆம் என்ற கருத்தை முன் வைக்கிறது காலச்சுவடு அக்டோபர் 2014 இதழில் பக்தவத்சல பாரதியின் ‘திராவிடச் சிங்களவர்’ என்னும் கட்டுரை. நெருங்கிய உறவினர் இடையே நிகழும் திருமணங்கள் திராவிடம் என்னும் பகுதியில் உள்ள இனங்களில் பாரம்பரியமான ஒன்று. இதற்கு இராகுவார் முறை என்று பெயர். இதை சிங்கள சமூகம் பிற திராவிட இனங்களைப் போலவே கடைப்பிடிக்கிறது. சிங்களவர்களில் இலங்கையின் மேற்கைச் சேர்ந்தவர்கள் பூர்வ குடிகளான நாகர்கள் மற்றும் பிற பகுதியில் உள்ளோர் வங்காளத்தில் இருந்து தென்னிந்தியா வழியாக இலங்கையை வந்தடைந்தவர்கள். கதகளி போன்ற நடன முறை அவர்களுடையது. கண்ணகியைப் ‘பத்தினித் தெய்யோ, விநாயகரைக் ‘கணபதித் தெய்யோ’ கதிர்காம முருகனைக் ‘கதரகமத் தெய்யோ’ என ஏற்று வழி படுகின்றனர்.

இப்படிப் பல்விதமாகக் கட்டுரை அவர்கள் பண்பாட்டால் திராவிடரே என நிலை நாட்டுகிறது. இலங்கையில் உள்ள நிலையை அதாவது தமிழர் சிங்களவர் இடையே வந்து விட்ட மிகப் பெரிய இடைவெளியை தெலுங்கானாவைச் சுற்றி நடந்த அரசியலே புரிய வைக்கும். ஒரே மொழி பேசும் இரு பகுதி மக்கள் இடையே கடக்க இயலாத இடைவெளி வந்து விட்டது. அரசியல் ரீதியாக அதைப் பயன்படுத்துவது வசதியானது. ஆந்திர-தெலுங்கானாவுக்குக் கூட்டாக நன்மை மற்றும் ஒற்றுமை பற்றி இன்று யாருமே பேச முடியாது. இலங்கையின் நிலையும் அதுவே. ஆனால் இலங்கையில் 70 முதலே வெறுப்பை விதைத்து வெவ்வேறு அரசுகள் தொடர்ந்து அமைதியும் ஒற்றுமையும் இல்லாத நிலையை உறுதி செய்தன. அந்த வெறுப்பு மிகப் பெரிய அழிவுக்கான விதையாய் அமைந்தது. உலகின் மிகப் பெரிய அதிசயம் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களிடம் ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்படுவதாக இருக்கும். அது அரசுகளால் சாதிக்கப் பட முடியாதது.

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

சென்னையில் மழைக்காலம்


2014-10-19 08.28.29
சென்னையில் மழைக்காலம்

ஒரு நபரை நாம் சந்திக்கக் கூடாத தருணங்கள் உண்டு. அவரின் இயல்பைப் பொருத்து அந்த சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஒரு நகரில் இருக்கக் கூடாத காலங்கள் உண்டு. சென்னையில் அது மழைக்காலம்

சென்னை என்னும் நகரத்திலேயே நிரந்தரமாக இருக்க முடிவு செய்தவர்கள் அதற்காகத் தினமும் (குறைந்த பட்சம்) ஒரு முறை வருத்தப் படும் வாய்ப்பை சென்னை கொடுத்துக் கொண்டே தான் இருக்கும். மழைக்காலத்தில் இந்த நகரை எவ்வளவு மோசமாகப் பராமரிக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரியும். எந்த சாலையிலும் நீர் வடியவே வடியாது, அதன் உயரம் அதிகரித்தபடி இருக்கும். மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து வரும்.

வாகனத்துக்கான சுரங்கப் பாதையோ அல்லது பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதையோ இரண்டிலுமே தண்ணீர் நிற்கும். அலுவலகத்தில் நம் உதவியாளர்களின் வருகை ஐயத்துக்குரியது என்னும் ஒரே காரணத்திற்காகவே நாம் கட்டாயம் போக வேண்டி இருக்கும்.

சாலையில் உள்ள பள்ளங்களில் மீது நீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் சாலையில் ஒரு குறுகிய (தண்ணீர் தேங்காத) பகுதியை மட்டும் பயன்படுத்த எல்லா இடத்திலும் போக்குவரத்து நெரிசல். இந்தப் புகைப்படம் வீட்டு பால்கனியில் இருந்து வளாகத்தை ஒட்டியுள்ள ஒரு சிறிய சாலையின் நிலை. இவ்வளவு சுளுவாக எடுக்க முடிந்த காரணம் எல்லா சாலைகளின் நிலையும் அதுவே தான்.

தீபாவளிக்காகவாவது மழைக்காலத்தில் சென்னையை விட்டுச் சில நாட்களேனும் விலகி இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment

“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை


220px-S._K._Pottekkatt

“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை

மொழிபெயர்ப்பாளர்கள் நமக்குச் செய்யும் உதவி மகத்தானது. அவர்கள் இலக்கியத்தை நாடு, கண்டம், மொழி, மதம், இனம் எல்லாம் தாண்டி வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இருந்தாலும் மட்டமான சில படைப்புகளைத் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மொழிபெயர்த்து வாசகர்கள் மனதை வருத்தப் படச் செய்கிறார்கள்.

இனிய உதயம் அக்டோபர் 2014 இதழை மிகவும் தேடியலைந்து திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிரில் எனக்குப் பழக்கமான கடையில் வாங்கினேன். மொழிபெயர்ப்புக் கதை இந்த முறை எது என்று ஆவலுடன் படித்தேன். பொற்றேகாட் மலையாளத்தின் புகழ் பெற்ற படைப்பாளி, ஞானபீட விருது வென்றவர் வேறு.

ஒரே படைப்பை வைத்து அவரை எடை போடக் கூடாது தான். இருந்தாலும் அந்தச் சிறுகதையில் பெண்கள் மீது காட்டப் பட்டிருக்கும் வன்மம் மிகவும் மலிவானதும் மனமுதிர்ச்சியில்லாத ஒருவரிடமும் தென்படுவதாகும்.

சுருக்கமான கதை இது தான்- மும்பையில் வெவ்வேறு வருமானப் பின்னணி உள்ள, மற்றும் கேரளத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நடுவயதுக் குடும்பப் பெண்கள் ஒருவரை ஒருவர் இழிவு படுத்த எவ்வளவு கீழ்த்தரமாகச் செல்லக் கூடியவர்கள் என்பதே மையக் கருத்து. பெண்கள் வம்புக்கு அலைபவர்கள், பொறாமை குணத்தால் ஆட்டுவிக்கப் படுபவர்கள். தான் பொறாமைப் படும் பெண்ணை இழிவுபடுத்தும் வாய்ப்புக்காக ஏங்கித்தவிப்பவர்கள் என்னும் சித்திரத்தை அவர் நிலைநாட்ட நீண்ட சிறுகதையை எழுதி இருக்கிறார். 1943 ஆம் ஆண்டு வந்த கதை இது.

தனது பெண் குழந்தை சுரத்தால் தவிக்கும் போது கூட ஒரு தாய் அவளைச் சுமந்தபடி மருத்துவரைத் தேடுவதைக் கைவிட்டு வம்புக்காக அலைகிறாள். கிடைத்த செய்தி ஒரு பெண் கணவன் அல்லாதவன் மூலம் குழந்தை பெற்ற விஷயம். அவளைத் தேடிப் போய் அதைக் குத்திக் காட்டி வன்மம் தீர சிரித்தபடியே சுரமான குழந்தையைத் தூக்கியபடித் தன் வீட்டுக்குப் போகிறாள். இந்தக் கதையில் விதிவிலக்கில்லாமல் எல்லாப் பெண்களும் மகாமட்டமானவர்களாகவே இருக்கிறார்கள்.

பொறாமை, வம்புக்கு அலைவது, வன்மம் இவை இருபாலாரிடமும் உள்ளன. எழுத்தாளர்களிடமே ஆண் எழுத்தாளர்களிடமே உண்டு. அரசியல்வாதிகளுக்கு உண்டு. பத்திரிக்கைக்காரர்களுக்கு, சினிமாக்காரர்களுக்கு என்று ஆண்களில் மிகவும் கவனம் பெரும் இந்த ஆட்களிடம் இல்லையா?

ஏன் பெண்களையே நாம் இந்தத் துர்குணங்களின் இருப்பிடமாகக் காண்கிறோம்? இது பாரபட்சமானது மட்டும் அல்ல. பெண்களை இழிவு படுத்த ஆண்களாகிய நாம் பயன்படுத்தும் ஆயுதம். தொலைகாட்சித் தொடர்களில் இந்த மனப்பாங்கே மையக் கருக்களை உருவாக்குகிறது.

பாலியல் வன்முறை மட்டும் குற்றமல்ல. இத்தகைய இழிவுபடுத்தும் போக்கும் இணையான வன்மமே.

(image courtesy: wiki)

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தன்னம்பிக்கைக்கு வயதில்லை – காணொளி


தன்னம்பிக்கைக்கு வயதில்லை – காணொளி

89 வயது மூதாட்டி உற்சாகமாக லாகவமாகச “ஜிம்னாஸ்டிக்ஸ்” செய்யும் காணொளிக்கான இணைப்பு இது. தன்னம்பிக்கை எல்லாத் தடைகளையும், முதுமையும் வெல்லும் என்பதையே இது காட்டுகிறது. பகிர்ந்து கொண்ட ஜிமெயில் நண்பர்களுக்கு நன்றி.

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

மலாலாவுக்கு நோபல் பரிசு- பெண் குழந்தைகளுக்கு உலகின் ஆதரவு


Malala_Yousafzai_at_Girl_Summit_2014
மலாலாவுக்கு நோபல் பரிசு- பெண் குழந்தைகளுக்கு உலகின் ஆதரவு

மலாலாவை சிறுமி என்றே குறிப்பிடலாம். அளப்பரிய நெஞ்சுரத்துடன் தாலிபான் களின் தடைகளை மீறிப் பள்ளிக்கூடம் சென்று தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடியவர். உடல் நலம் பெற்றதும் இங்கிலாந்தில் இருந்து உலகக் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடி வருபவர்.இவருடைய நெஞ்சுரம் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப் பட வேண்டிய முன்னுதாரணம்.

மலாலாவின் பணி இஸ்லாமியப் பெண் குழந்தைகளுக்கு மட்டுமானது அல்ல. தாலிபான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் பாதிக்காத இடங்களில் பெண் குழந்தைகள் படிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

கீழை நாடுகளில் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரை விரல் விட்டு எண்ணி விடலாம். மண வாழ்க்கை மற்றும் குடும்ப வேலைக்காகவே பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்னும் விபரீதமான நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது மத வித்தியாசம் இல்லாமல்.

மலாலா இந்தக் குறுகிய மனப்பாங்கை மறுதலிக்கும் தலைமுறையின் பிரதிநிதி அவர். அவரது குரல் கோடிக்கணக்கான குழந்தைகளின் குரல். கல்விக்கும் முன்னேற்றத்துக்கும் வழியில்லாத எல்லா நாட்டுக் குழந்தைகளின் குரல்.

செவ்வாய் கிரகத்தையே எட்டிப்பிடித்த இந்தியாவோ அல்லது பிற வளர்ந்த நாடுகளோ குழந்தைகளின் முன்னேற்றமே மனித குலம் மேம்படும் ஒரே வழி என்பதை இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை.

மொட்டுகளைப் பிடுங்கிக் கசக்கி விட்டெறிந்தால் அவை மலருமா? மணம் வீசுமா? அதே போலத்தான் நாம் படிக்கும் வயதில் கூலிகளாகக் குழந்தைகளை வேலை வாங்குகிறோம். திறனும் கல்வியும் இல்லாதவர்களாக அவர்கள் வாழ்நாள் முழுதும் துயருறுகிறார்கள். சமுதாயத்தில் உழைப்போரின் பெரும்பகுதி திறனற்றோரால் நிரம்புவதால் பொருளாதாரத்தின் மீதும் தாக்கம் இருக்கிறது.

பெண்கள் கல்வி கற்கும் போது அவர்கள் தம் வாரிசுகளை தன்னம்பிக்கையும் மேலான லட்சியங்களும் உள்ளவர்களாக வளர்க்கும் தகுதியையும் சேர்த்துப் பெறுகிறார்கள்.

சமுதாய மாற்றத்தை விரும்புவோர் வெகு அபூர்வமானவர்கள். சமுதாய மாற்றத்துக்காக இடைவிடாது பணி புரிவோர் மிகவும் குறைவு. சமுதாயம் இப்படியே இருக்கட்டும் அதில் எனக்கு ஏகப்பட்ட வசதி என்போரே பெரும்பாலானவர்.

சமுதாயம் மாற முன்னேற விரும்பும் மலாலா மனிதகுலத்தின் வருங்காலத்துக்கு நம்பிக்கை நட்சத்திரம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

(image courtesy:wiki)

Posted in Uncategorized | Tagged | Leave a comment