வாங்க வம்பளப்போம் – அறம் திரைப்படமும் – ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டும்


Image result for aram movie imagesImage result for 20 rupee note images

வாங்க வம்பளப்போம் – அறம் திரைப்படமும் – ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டும்

‘அறம்’ திரைப்படம் பற்றி நிறைய ஆஹா ஓஹோ வந்ததும் நான் திரையரங்கில் இதைப் பார்க்க முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் பொங்கல் வந்து விட்டது. பொங்கலன்று இதை விளம்பரங்களோடு பார்க்க விரும்பாமல் அதை ‘ரெக்கார்ட்’ செய்து , ஒரு வழியாக இன்று தான் பார்த்தேன்.

சற்றே ஏமாற்றம். ஆனால் இரண்டு விஷயங்களை ரசித்தேன். ஒரு நடிகைக்கு வலுவான கதா பாத்திரம் தரவே மாட்டார்கள் தமிழ் இயக்குனர்கள். இந்தப் படத்தில் நயன் தாரா நன்றாகவே தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். மனித நேயமும், பெண்மையும், கண்டிப்பும் நிறைந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அதை மிகவும் நன்றாகவே செய்திருக்கிறார்.

சரி வம்புக்கு வருவோம். நீங்கள் டீக்கடைக்குப் போயிருப்பீர்கள். பத்துக்கு ஒன்பது கடைகளில் டீ கிளாஸைக் கல்லாக்காரரோ அல்லது டீ மாஸ்டரோ கழுவ மாட்டார்கள். அதற்கு என்று ஒரு பையன் இருப்பான். ஏன் அப்படி? இது அவர்கள் வேலை கிடையாது. அரசு அலுவலகத்தில் ஒவ்வொரு வேலைக்கும் ஒருவர் பொறுப்பு. அதிகாரியில் கடை நிலையானவருக்கே மூன்று அல்லது நான்கு வேலை இருக்கும். கலெக்டருக்குத் தலை போகிற வேலை தினசரி நிறையவே இருக்கும். அவர் இரண்டு நாள் ஒரு இடத்தில் டேரா அடிப்பது சாத்தியமே இல்லை. தேவையுமில்லை. தான் இருந்த இடத்தில் இருந்து எல்லாவற்றையும் இயக்குகிற – உறுதி செய்கிற இளைஞர் ஒருவரையே தேடி இந்தக் கடுமையான பரிட்சையை அவர்கள் வைக்கிறார்கள். தானே கண்ணாம்பாள் மனோகராவுக்கு சொன்னது போலச் சொல்லி ஒரு குட்டிப் பையனை உசுப்பி விட வேண்டும் என்பது மிகவும் சினிமாத்தனமானது.

முக்கியமான வம்பு என நான் அளக்க விரும்பது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை என்பதெல்லாம் அரசின் வேலை என்னும் அசட்டுத்தனமான வசனங்கள் பற்றி. சாலையில் பிறரின் பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லாத வாகன ஓட்டிகள். பொது இடங்களில், பள்ளிகளில், தனியார் அலுவலகங்களில், வீடுகளுக்குள் பாதுகாப்பு – அது குறித்த முன்னெச்சரிக்கை, அல்லது அது பற்றிய அறிவு எத்தனை பேருக்கு உண்டு?

திரும்பத் திரும்ப அரை வேக்காட்டு வசனங்களுடன் அரசாங்கத்தை விமர்சிக்கும் படமாய் எடுக்கிறீர்களே? மக்கள் தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ளும் படங்களை எடுக்கவே மாட்டீர்களா?

இந்த சிந்தனை ஓடிய போது தான் ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டு நினைவுக்கு வந்தது. நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து யாருமே காக்க முடியாமல் செய்வது பணம் வாங்கி ஓட்டுப் போடும் மாண்புமிகு மிகவும் மரியாதைக்குரிய வணக்கத்துக்குரிய வாக்களர்களே.

 

 

Advertisements
Posted in Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

என் நூல்களை அமேசானில் வாங்க


என் நூல்களை அமேசானில் வாங்க

எனது ஆறு நூல்கள் அமேசானில் கிடைக்கின்றன. அமேசான் தளத்துக்கு இணைப்பு ————————– இது .

kindle எனப்படும் இணைய நூலாக மட்டும் கிடைப்பவை கீழ்க்காணும் நூல்கள் :
1.வண்டுகளுக்கு முட்கள் இல்லை – கவிதைத் தொகுதி
2. அவன் முக நூலில் இல்லை – கவிதைத் தொகுதி

kindle வடிவிலும் அச்சுப் பிரதியாகவும் அமேசானில் கிடைக்கும் நான்கு நூல்கள் இவை :

1. விக்கிரகம் – சமூக நாவல்
2.முள்வெளி- சமூக நாவல்
3.தோல் பை – சிறுகதைத் தொகுதி
4.போதி மரம் – சரித்திர நாவல்
(இந்த நான்கு நூல்களை கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டும் வாங்கலாம் அவர்களது தொலைபேசி எண் 04442009603)

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி


இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி

பல சந்தர்ப்பங்களில் நாம் தாய் மொழி தமிழாகக் கொண்ட குழந்தைகள் , ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோ பேசுவதையே பார்க்கிறோம். இது சமகாலப் பெரியவர்களுக்கும் பொருந்தும். மூன்று வயதில் கவிதை எழுதி ‘கின்னஸ் ‘ சாதனையாளராயிருக்கும் இந்தக் குழந்தையின் பெயர் அனன்யா என்று மட்டும் அவர் பேசும் போது தெரிந்து கொள்கிறோம். அவர் இணையத்தில் தம்மைப் பற்றி பகிர்ந்து கொண்டாரா என்று தெரியவில்லை. அவர் பற்றிய மேல் விவரம் தெரிந்தவர்கள் என்னுடன் பகிருங்கள்.

திரைப்படங்களில் நல்ல தமிழ் பேசுவது நகைச்சுவைக் காட்சியில் மட்டுமே வரும். இப்போது இந்தக் குழந்தை பேசுவது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது. மொழி வெறி கூடாது. ஆனால் நம் தாய் மொழியை நாமும் நம் பின் வரும் தலைமுறையும் மதிக்க வேண்டும். பிழையின்றி எழுத வேண்டும் பேச வேண்டும்.

பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

ஞாநி – ஜெயமோகன் அஞ்சலி


gnani

ஞாநி பற்றி ஜெயமோகன் அஞ்சலியில் குறிப்பிட்டிருப்பது அவரது ஆளுமை பற்றிய முக்கியமான ஒரு பதிவு. ஞாநி தமது சிந்தனைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களிடம் , தனிப்பட்ட காழ்ப்பு இல்லாமல் இருந்தவர். பெரிய ஆளுமைக் குணம் அது. ஊடக நேர்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்.

ஜெயமோகனின் அஞ்சலிக்காக இணைப்பு ——————இது.

(image courtesy:jeyamohan.in)

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி -ஞாநி


gyani

தெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் நாடக அமைப்பின் வாயிலாக நாடகங்கள் போட்டு வந்தார். பெரியாரால் ஈர்க்கப் பட்ட ஞாநி பெரிதும் பகுத்தறிவு பற்றியே பேசி வந்தார். அவரை இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் ஒரு முறை சந்தித்தேன். கருத்த்துச் சுதந்திரத்துக்காகப் போராடி வழக்கு தொடர்ந்து நாடகங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை என்று தீர்ப்பு வாங்கினார். வாழ்நாள் முழுதும் சமூகப் பணி ஆற்றியவர். மூத்த பத்திரிக்கையாளர். அவரது தீம்தரிகிட என்ப கவிதைகளை வெளியிட்டு என்னை உற்சாகப் படுத்தியது. அன்னாருக்கு என் அஞ்சலி.

அவர் பற்றிய எனது பதிவுகளுக்கான இணைப்புகள்.

கருத்துச் சுதந்திரம்

 

 
ஞானியுடன் நேர்காணல்

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்


Image result for andal images

வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்

ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு வைரமுத்து மற்றும் பெருமாள் முருகன் பற்றியது .

முதலில் ஜெயமோகனின் பதிவை வாசியுங்கள். இணைப்பு ————————— இது.

ஜெயமோகனின் கருத்து சுருக்கமாக இது தான். பக்தி காலத்து இலக்கியங்களை, சம காலத்தில் இருக்கும் மலினமான , காமம் – உடலிச்சை என்னும் அணுகுமுறையில் பார்த்துக் கொச்சைப் படுத்துவதில் வைர முத்துவும் தன் பங்களிப்பை செய்திருக்கிறார்.

நான் வம்பளப்பதெல்லாம் இது தான். வைர முத்து எப்போது ஆராய்ச்சியாளராக மாறினார் ? அதிக ஆதாரம் இல்லாத காலகட்டம் பற்றி நாம் பேசும் போது , எல்லாமே யூகங்கள், எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும். ஆண்டாளின் கவிதையை காணாமல் அவரது ஜாதி பற்றிப் பேசும் தராதரம் வைரமுத்து உடையது என்பது நமக்குத் தெரிந்ததே. தமிழில் ஊர்வசி.. ‘டேக் இட் ஈஸி ‘ என்று சினிமாக் கவிதையை ஒரு படி மேலே கொண்டு போனதும் அவர்தான்.

அரைத்த மாவையே அரைத்து பிழைப்பை ஒரு வர்ணனைக் பாட்டெழுதும் திறமைசாலி. அவ்வளவே. அது அவர் தொழில். பிழைப்பு. அதே போல் கருத்துச் சுதந்திரம் அவருக்கு உண்டு. அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அவர் ஆதாரங்களோ, கல் வெட்டுக்களோ இல்லை. என்று சேர்த்து சொல்லி இருக்க வேண்டும். அவர் மன்னிப்புக் கேட்பதால் அல்லது சொன்னதால் ஆண்டாளின் கவித்துவமும் பக்தியும் மாசு படப் போவதோ, புனிதம் அடையப் போவதோ இல்லை.

பெருமாள் முருகன் முழுக்க முழுக்கக் கற்பனைக் கதையை எழுதியிருந்தார். திறமை போதாது. நுட்பமாகக் கூறாமல் அசட்டுத்தனமாக எழுதி அல்லல் பட்டார். அவரையோ வைரமுத்துவையோ மிரட்டுவது, தெருவுக்கு அழைப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது. மாற்றுக் கருத்தே இல்லை.

அவர்கள் எந்த ஊடகத்தில் கூறினார்களோ அதே ஊடகத்தில் நாம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். கட்டுரை ஒன்று அவர் எழுதினால் நீங்கள் நூறு கட்டுரை எழுதுங்கள். தெருவில் நூறு பேர் நின்று மிரட்டாதீர்கள். ஆனால் திமுக மற்றும் அதன் அடிவருடிகள் இதைச் செய்தார்களோ என்று என்னைக் கேட்காதீர்கள். அவர்கள் தம் எதிர்ப்பை எப்படிக் காட்டினார்கள் என்றெல்லாம் ஆராயாதீர்கள்.

(image courtesy: apnisamskrit.com)

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments

பொறாமை பற்றி ஆர். அபிலாஷ்


41 KB

பொறாமை பற்றி ஆர். அபிலாஷ்

நவீனப் புனை கதை எழுத்தாளர்கள் நுட்பமாக மட்டுமே கதைகளில் நல்லது – தீயது, அறம்- மறம், விழுமியங்கள்- விளங்கிக் கொள்ள முடியாத சுய நலம் என்பவற்றைத் தொட்டுச் செல்வார்கள். ஒரு அபுனைவு வழியே அவர்கள் நேரடியாகப் பேசுவது அபூர்வமே. ஆர். அபிலாஷ் பொறாமை பற்றி ஜனவரி 2018 தீராநதி இதழில் அலசி இருக்கிறார்.

1992 – 93ல் நடந்த மதக் கலவரம் , பின்னர் நிகழ்ந்த குண்டு வெடிப்பு இவை இரண்டுமே வணிக ரீதியான பொறாமையின் பின் விளைவுகளே. சில வணிகர்கள் துவக்கிய ஒன்று ஒரு பெரிய பேரழிவையும் மக்களின் இடையே மன வேற்றுமையையும் உண்டு செய்து விட்டது.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் – என்னும் குறளை மேற்கோள் இடுகிறார் அபிலாஷ். இந்தக் குறளின் சுருக்கமான பொருள் பொறாமை உடையவனைப் பார்த்த திருமகள் தன் தமக்கையிடம் அவனைக் காட்டி விடுவாள் என்பதாகும். பொறாமையால் ஒருவரது மனம் கெடுகிறது, மகிழ்ச்சி கெடுகிறது என்றெல்லாம் நேரடியாக அபிலாஷ் பலவற்றையும் எடுத்து உரைக்கிறார்.

“ஆத்தாமைப் (ஆற்றாமைப்) பட்டவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா?” என்று ஒரு சொலவடை எங்கள் ஊரில் உண்டு.

இதம் சாராம்சம் என்ன? நல்ல விளைச்சல் பக்கத்து வயலில் என்றால் “எனக்கு ஏன் இந்த அளவு விளையவில்லை? எங்கே கோட்டை விட்டேன்?” என்று அங்கலாய்க்கலாம். ஆனால் வயிறு எறியவோ அல்லது பொறாமைப் படவோ கூடாது.

உண்மையில் ஒருவரை ஒப்பிட்டுக் கொள்வது இருக்கும் வரை பொறாமை என்பது இருக்கவே செய்யும். அது மென்மையானதாய் இருக்கலாம். இல்லை மோசமாக இருக்கலாம். ஆனால் அதை விட்டொழிப்பது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து முதிர்ச்சி என்று ஒன்று முளை விட ஆரம்பிக்கும் போதே நாம் முதலில் கற்றுக் கொடுப்பது ஏற்றத் தாழ்வுகள் தான். அதிக உரிமை உள்ளவர்கள் – உரிமையில்லாதவர்கள், கை ஓங்கியவர்கள் – இளப்பமானவர்கள் என்பவற்றை தான்.

பிறரை ஒப்பிடாமல் என் இன்பம் துன்பம், வளம் அல்லது வறுமை எதுவுமே கிடையாது.

உண்மையில் ஒப்பிட்டு வாழும், மகிழும் அல்லது வருந்தும் மாய வலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அது தன்வயமாய் கலை அல்லது இலக்கியம் அல்லது சமூகப் பணி என ஒரு பெரிய கோட்டை வரைந்து அதைச் சின்னக் கோடாக்கினால் மட்டுமே சாத்தியம்.

அது போகாத ஊருக்கு வழி என்றால் வேறு ஒன்றையும் நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம் உள்ளவர்களிடம் அதை நெறிப்படுத்தினால் – அதாவது அந்த வியாதியை ஒரு வரமாகப் பயன்படுத்தினால்- பெரிய சாதனைகள் அவர்களால் சாத்தியம். அதே போல் பொறாமையை நாம் மற்றொரு ஆளின் மீது குவிக்காமல் ‘நாம் இன்னும் முன்னேற வேண்டும்’ என்னும் நெறிப்படுத்துதல் வாயிலாக ஒரு ஆற்றலாக மாற்ற இயலும்.

சுய நலம், பொறாமை, குறுகிய நோக்கு இவையில்லாத மனித வாழ்க்கையும் இல்லை. இவற்றை மையப் படுத்தாத இலக்கியமும் இல்லை.

 

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

கிருஷ்ணா – கோதாவரி நதிகள் இணைப்பு – ஆந்திராவின் சாதனை


கிருஷ்ணா – கோதாவரி நதிகள் இணைப்பு – ஆந்திராவின் சாதனை

திட்டமிட்டு மூன்று வருடங்களுக்குள் கடலுக்குப் போகும் கிருஷ்ணா நதி நீரை, கோதாவரி நதிக்குச் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது ஆந்திர அரசு. அதன் முதல்வர் சந்திர பாபு நாயுடு மிகவும் பாராட்டுக்கு உரியவர். ஒன்று பட்ட ஆந்திராவில் தகவல் தொழில் நுட்பத்தைப் பெருமளவு பயனுக்கு கொண்டு வந்தவர். அரசின் அலுவல்களை கணினி மயமாக்குவதில் முன்னோடி.

நிலத்தைத் தோண்டி, பெரிய அளவில் பூகோள மாற்றம் செய்து நதிகளை இணைப்பது நல்லதல்ல என்னும் ஒரு கருத்து நிபுணர்கள் முன் வைப்பது. இந்தத் திட்டத்தில் பட்டிசீமா என்னும் இடத்தில் கிருஷ்ணா நதி நீரை, இயந்திரங்கள் மூலம் இறைத்து, கோதாவரிக்குச் செல்லும் பொலவரம் என்னும் கால்வாயில் இணைத்து, அதிக மக்கள் இடப்பெயர்ச்சியோ, பூகோள மாறுதல்களோ இல்லாமல் சாதித்திருப்பது கவனிக்கத் தக்கது.

விரிவான செய்திக்கான இணைப்பு ——————- இது.

பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , , | 2 Comments

கை சுத்தமான தமிழ் அல்லாதவர் ஆள வேண்டுமா? திருடும் தமிழன் தான் வேண்டுமா? – காணொளி


கை சுத்தமான தமிழ் அல்லாதவர் ஆள வேண்டுமா? திருடும் தமிழன் தான் வேண்டுமா? – காணொளி

பிரகாசம், குமாரசாமி ராஜா ஆகிய தமிழர் அல்லாத சென்னை (ஒன்று பட்ட சென்னை ராஜதானி) முதல் அமைச்சர்கள் பற்றிக் கூறி அவர்கள் போல கை சுத்தமான, மக்கள் நலன் பேணுவோர் தமிழ் அல்லாதவர் ஆக இருந்தாலும், அவரே முதல்வர் ஆக வேண்டும் என்ற இந்தக் காணொளி நம் சிந்தனைக்கு உரியது. புது வருடத்தில் அநேகமாக வாட்ஸ் அப் காணொளிகளைத் திறப்பதே இல்லை. இதை பகிரும் நண்பர் குழு விவரமானவர்கள். எனவே பார்த்தேன். அவர்களுக்கு என் நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , , | 4 Comments

ஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை


Image result for lovers in a forest images

ஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை

கவிதையின் பெரிய பலம் அபாராமான அதன் சுமக்கும் ஆற்றல். மிகவும் சிக்கலான மனித உறவுப் பரிமாற்றங்கள், நீண்டு விரியும் ஒரு நாலுக்கான கதை, என்றும் விளங்கிக் கொள்ளவே முடியாத கேள்விகளுள் ஒன்று எதையும் சுமக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு. அதன் சாத்தியங்கள் பற்றி அறிந்த கவிஞர் லகுவாய் அதை வாசகனின் ரசனைக்குத் தருவதில் வெற்றி அடைகிறார்.

தடம் ஜனவரி 2018 இதழில் செல்வி ராமச்சந்திரனின் ‘இன்று என் பெயர் ஆரஞ்சு ட்ரீ ‘ என்னும் கவிதை காதலன் தன் காதலிக்கு அடிக்கடி பெயரை மாற்றி அழைப்பதில் உள்ள உளவியலைத் தொடுகிறார்.

உன் அலைபேசியில்
தினமும் ஒரு பெயர் எனக்கு
இன்று ஆரஞ்சு ட்ரீ
நேற்று நான் ப்ளூ ரோஸ்

புதிய பெயரில் என்னை அழைக்கும் போது
புதிய பெண்ணோடு பேசுவது போலவே இருக்கிறது உனக்கு

புதிய பெயரில் எனது பெயர்
அலைபேசியில் ஒளிரும் போது
பழைய துயரங்கள் அழிந்து விடுகின்றன

பெயர்களாலான உலகத்தில்
பெயர்களை மாற்றும் போது
இந்த உலகமும் மாறி விடுகிறது

ஆணின் மனப்பாங்கு தினமும் புதிய பெண் என்னும் தனது அனுமானத்தையும் அதனால் தனக்குள் நிழலாடும் அச்சத்தையும் கவிதையில் காதலி நுட்பமாகப் பதிவு செய்கிறாள். மறுபக்கம் கொஞ்சம் கரிசனத்தோடு புதிய பெயரைப் பார்க்கும் போது பழைய துயர்ங்கள் அழிந்து விடுகின்றன என்கிறாள்.

பெயர்கள் ஒரு பண்பாட்டின் நீட்சியையே சுட்டுகின்றன. பெற்றோரின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் தாங்கும் பெயர் தனது காதலியின் குண நலன்களைக் கட்டிப் போட்டு விடுவதாகக் காதலன் நம்புகிறான். பெண் வெளிப்படுத்தும் நுட்பமான உணர்வுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று. அவை வெளிப்படும் விதங்களும் அவ்வாறானவையே. சமூகத்தில் ஜாதி மற்றும் ஊரின் மற்றும் நகர் அல்லது கிராமப் புறம் என்பதின் அடையாளமாகவே பெயர் இருக்கிறது.

பெயர் தன் இருப்பின் தன் உள்ளின் அடையாளம் இல்லை என்பதாலேயே படைப்பாளி ஒரு புனைப் பெயரில் எழுதுகிறான்.

(image courtesy:renatures.com)

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment