முள்வெளி- அத்தியாயம் -1


http://puthu.thinnai.com/?p=9718

கதைகள்

முள்வெளி

சதயானந்தன்

அத்தியாயம் -1

குளத்தின் வடக்குப் பக்கம் பிரதான சாலை வாகனச் சந்தடியும் நல்ல வெளிச்சமாயிருந்தன. பிற கரைகளில் அதிக வெளிச்சமில்லை.

மேற்குப் பக்கம் சிறிய கோபுரம் ஒன்றின் மீது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குளத்திலிருந்து தவளைகள் தொணப்பிக் கொண்டிருந்தன. கோவிலை விட்டு வெளியே ஓடி வந்த இரு சிறுவர்கள் கோவிலை ஒட்டி இருந்த வீட்டினுள் தடதடவென ஓடினார்கள்.

“அம்மா, செல்வாவுக்கு காலுல அடி பட்டு ரத்தம் வருது” என்றான் உயரமானவன்.

“அடப் பாவி, எங்கேடா?” என்று அவர்களின் தாய் ஓடி வந்து செல்வாவைக் கூடத்தில் நிற்க வைத்துப் பரிசோதித்தாள்.”காலைக் களுவிக்கிட்டு வாடா” என்று மஞ்சப் பொடி டப்பாவை எடுத்து வந்தாள்.

“எப்படிடா அடிபட்டுது?” என்றாள் மஞ்சப்பொடியைக் குழைத்துத் தடவியபடி.

“சேகரு தள்ளி விட்டாம்மா..” என்றான் செல்வா. சேகரை அடிக்கக் கையை ஓங்கினாள். “யம்மா..நம்பாதே” கோவிலுல ஒரு ஆளு இருட்டுல படுத்திருக்காரு. பேண்டு சட்டையெல்லாம் போட்டிருக்காரு. அவுரு மேலே தடுக்கி விளுந்திட்டான்”

“ஆருடா ராத்திரியிலே கோவிலுக்குள்ளே படுத்தது. உங்க அப்பா வரட்டும். விசாரிப்போம்”

அவனைச் சுற்றி நிறைய பேர் நின்றிருந்தார்கள். லாந்தர் விளக்கு ஒளியில் அவர்கள் முகம் சரியாகத் தெரியவில்லை. அவன் எழுந்து அமர்ந்து மலங்க மலங்க விழித்தான். வெளிர் நீல முழுக்கைச் சட்டை அணிந்திருந்தான்.

” உன் பேரு என்னப்பா?” வயதான ஒருவர் ஆரம்பித்தார். அவன் பதிலே பேசவில்லை. தலையை நிமிர்த்தாமல் அமர்ந்திருந்தான். லாந்தர் விளக்கில் அவன் நிழல் நீண்டு தெரிந்தது.”நாப்பது வயது இருக்கும் போல” என்றார் ஒருவர்.

“ஏம் கொஞ்சம் கம்மியா இருந்தா பொண்ணு கொடுக்கலாமின்னு இருந்தியோ?” பலரும் சிரித்தனர்.

“பேசுப்பா. ஊமையா நீ? ” என்றார் மற்றொருவர்.

ஒரு இளைஞன் குந்திட்டு அவன் எதிரே அமர்ந்தான். ‘ உங்க பேரென்ன?’

‘………’

“சொல்லுங்க.உங்க பேரென்ன?

“ரா…ஜே…ந்..தி..ர.ன்” சற்று குழறலாகவே இருந்தது பேச்சு. அவன் தோற்றத்துக்கு இணையான அழுத்தந்திருத்தம் இல்லை.

எந்த ஊரு?” குந்தி இருந்தவன் கிட்டத்தட்ட மிரட்டுவது போல் அவன் முகத்துக்கு அருகில் சென்று வினவினான்.

‘மெட்ராஸு”

“இங்கின ஏன் படுத்து இருக்கிங்கீங்க?” ” எந்த ஊருக்குப் போவணும்?”

ராஜேந்திரன் மறுபடி மௌனமாகி விட்டான்.

“நீங்க எங்கே போவணும்?” கேட்டவர் மறுபடி வினவினார்.

“மென்டலு மாதிரித் தெரியரான்” என்றார் ஒருவர். ராஜேந்திரனிடம் எந்த வித பாதிப்பும் இல்லை.

“பயந்த மாதிரி இருக்கு. செய்வெனை. வசதியான ஆளு தான் ” என்றாள் ஒருத்தி.

“உனக்கு மட்டும் தான் பதிலு சொல்லறான். நீயே கேளப்பா” என்றார் ஒருவர் குந்தி இருந்தவனைப் பார்த்து.

அவன் உற்சாகமாகி கிட்டத்தட்ட ராஜேந்திரனின் முகத்தோது முகம் வைத்து ” மெட் ராஸுல ஆரு இருக்கா?”
.
“ஆரும் இல்லே” குழறினான்

“எங்கே போயிட்டாங்க?”

“தெரியலே”

“ஆருமில்லாம் எப்படி இந்த ஆளு இருந்திருப்பாரு…போக வேண்டிய இடமும் தெரியலே.. போலீசுகிட்டே ஒப்படைக்கலாமா?”

“உடையாரு கிட்டே சொல்லாம போலீசையெல்லாம் கூப்பிடாதீங்க ..காலையிலே உடையாரு வரட்டும்”

” பூச்சி கீச்சி கடிச்சு செத்துரப் போறான்.. ஆரு வீட்டுத் திண்ணையிலேயாச்சும் படுக்க வைங்க”

“செல்லாயி கிழவி ஊருக்குப் போயிருக்கு. அது வீட்டுத் திண்ணையிலே படுக்க வைக்கலாம்”

“எழுப்புங்கைய்யா அந்த ஆளை”

“வாங்க எந்திரிங்க..கோயிலில ராத்தங்கக் கூடாது” , ஒருவன் கையைப் பிடித்து இழுத்தும் ராஜேந்திரன் எழுந்திருப்பதாக இல்லை.

“நான் இப்ப என்ன செய்யறேன் பாரு…” என்று ஒருவன், கருப்பு நிறத் தோல் பை ராஜேந்திரன் தலை மாட்டில் இருந்ததை எடுத்து நகர்ந்தான். ராஜேந்திரன் எழுந்து அவன் பின்னாலேயே நடந்தான்.

வாசலைப் பெருக்கி சாணத் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்த சில பெண்களைத் தவிர புலரும் விடியற்காலையின் மென்மையான பரவலை வரவேற்க யாருமில்லை.

பூட்டே இல்லாமல் வெறுமனே மூடப்பட்டிருந்த இரும்புக் கம்பி (அரைக்) கதவைத் திறந்து செல்லாயி கையிலிருந்த பெரிய பிளாஸ்டிக் நாடாப் பையையும், மஞ்சள் நிறத் துணிப்பையையும் சிறிய திண்ணை மீது வைத்து விட்டு விளக்கைப் போட்டு விட்டு குருக்குப் பையிலிருந்த சாவியை எடுக்கும் போது தான் பெரிய திண்ணையின் மீது ஒரு ஆள் படுத்திருப்பதைப் பார்த்து ஒரு நிமிடம் உடலெல்லாம் வியர்த்தார். ஆரு இது? ” தம்பீ.. தம்பீ..” நல்ல பேன்ட் சட்டையெல்லாம் போட்டு வசதியான ஆளு மாதிரி இருக்குறான். “ஸார்.. ஸார்… , தம்பீ.. தம்பீ..” செல்லாயியின் குரல் கேட்டு அவன் விழித்தெழுவதாகத் தெரியவில்லை. பெரிய கருப்பு நிறத் தோல் பை மீது தலை வைத்துப் படுத்திருந்தான்.

செல்லாயி மரக் கதவைத் திறந்து பைகளுடன் வீட்டிற்குள் சென்றார். மாடத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றினார். இரண்டு பிளாஸ்டிக் குடங்களுடன் வெளியே சென்றார்.

” ஹலோ”

“மஞ்சு.. நான் தான்ம்மா. போலீஸு கிட்டே போனியா?

மஞ்சு அழத் தொடங்கினாள்.

“அழாதே மஞ்சு. போலீசுல என்ன சொன்னாங்க?”

“நான் போவுலம்மா. அவுங்க பார்ட்னர் சுப்பிரமணியம் அண்ணே ஒரு வாரம் களிச்சு எடுக்கலாமின்னாங்க. இந்த நேரம் பாத்து நீ யூ எஸ் போவியாம்மா?”

“தம்பீ… இந்த முறை செல்லாயி அவனைத் தொட்டு எழுப்பினார். ” பல்லு வெளக்குங்க.” எழுந்து அமர்ந்தவன் அப்படியே இருந்தான். செல்லாயி அவனருகில் சென்று அவனது கையைப் பற்றி இழுத்தவராக ” உப்புத்தூள் இருக்கு. விளக்குங்க. “… “வாங்க… எந்திரிங்க..” ..மெதுவாக எழுந்தவன் திண்ணையிலே காலைத் தொங்கப் போட்டு அமர்ந்தான். தொடர்ந்து அவனது கையைப் பிடித்து எழுப்பி நிற்க வைத்தார். வெளி முற்றத்தின் மூலையில் கழிப்பறையை ஒட்டி ஒரு வாளித் தண்ணீரும் ‘பிளாஸ்டிக் மக்’ கும் இருந்தன. முற்றத்து வெய்யிலில் அவன் நல்ல சிவந்த நிறமும் பாதி நரைத்த முடியுமாய் கண்களில் திசையின்றி சலனமற்ற முகத்துடன் தெரிந்தான். இயந்திரமாகப் பல் தேய்த்தான். “பாத் ரூம்புல துப்புங்க” என்றார் செல்லாயி. ‘பாத்ரூம்’ போவணுமின்னாப் போய் வாங்க” என்றார். அப்படியே செய்து அவன் வெளியே வரும் போது ‘இது எம்மவனோட லுங்கி. நல்லாத் துவைச்சது. கட்டிக்கங்க’ என்றார். வீட்டுக்குள் சென்று உடை மாற்றினான். செல்லாயி கொடுத்த தேனீரை அருந்தினான். ‘கவிச்ச சாப்பிடுவீங்க தானே?’ என்றார். மிட மெதுவாகத் தலையை அசைத்தான்.

தொலைக்காட்சி அலுவலகத்தின் வரவேற்பரை மிக நேர்த்தியாயிருந்ததது. செந்தில் சற்று பதட்டமாக அமர்ந்திருந்தான். ‘புரொடக்ஷன் மேனேஜர்’ ஜெய குமார் மிகவும் விரட்டுவார் என்று நேர்முகம் முடிந்து வேலை கிடைத்த உற்சாகத்தில் இருந்த போது ப்யூன் சொன்ன தகவல். முதல் நாளை நல்ல படி ஓட்டி விட்டால் போக போகப் பழகிவிடுவார் என்று பட்டது.

‘மிஸ்டர் செந்தில்’ வரவேற்பரையிலிருந்த பெண்களுள் ஒருத்தி அறிவிப்பது போல அழைத்தாள். எழுந்து அருகில் சென்றான். “புரொடக்ஷன் மேனேஜரைப் பாருங்க”

பவ்யமாகக் கதவைத் தட்டி மன்னிப்புக் கோரியபடி நுழைந்தான். ‘வா.அமர்’ என்று சைகையில் தெரிவித்தார். ‘கம்ப்யூட்டரி’ல் ஏதோ செய்து கொண்டிருந்தார். ” உன்னோட வேலை இங்கே என்னன்னு தெரியுமா? ஏற்கனவே மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்னு தானே சொல்லியிருக்கே?”

“தெரியும் ஸார்”

“நல்லது.” தனது வலது கைப்புறமிருந்த தடிமனான ஒரு ஃபைலை எடுத்துப் போட்டார். “பிரிச்சுப் பாரு”.

கையெழுத்துப் பிரதிகள். சிறுகதைகள். முதல் கதையின் தலைப்பு “போதை” என்று போட்டிருந்தது. அதன் அருகே குறுக்காக ‘அசைந்தாடும் மயில்’ என்று எழுதியிருந்தது. ‘ஸார். ஷார்ட் ஸ்டோரி கல்லெக்ஷன். முதல் ஸ்டோரி தலைப்பு ‘போதை”. அது கிட்டே அசைந்தாடும் மயில்ன்னு எழுதியிருக்கே?”

“அது ஓபனிங்க் ஸாங்க் “அசைந்தாடும் மயில் ஒன்று காணும் – என் அழகன் வந்தானென்று சொல்வது போல் தோணும்” அப்படிங்கற க்ளாஸிகல் ஸாங்க். இந்த ஷார்ட் ஸ்டோரீஸ் எல்லாம் ஒரு ஸீரியலா வரப் போவுது. இது ஒரு வித்தியாசமான பிராஜக்ட். இந்த ஒரு எபிஸோடுக்கு நான் கைடன்ஸ் கொடுப்பேன். அடுத்ததிலேயிருந்து நீ தனியாப் பண்ணணும். ஓகே?”

“கண்டிப்பா ஸார்”

“இதோட ஸ்டோரியை முதல்ல மனசுக்குள்ளே வாசி. பிறகு வாய் விட்டு வாசிக்கணும். ஜெயகுமார் யாருடனோ தொலைபேசியில் உரையாடத் துவங்கி விட்டார். பிறகு எழுந்து வெளியில் சென்றார். வெகு நேரங்கழித்து வந்து “வாய் விட்டுப் படிக்கலாமா?”

தலையை ஆட்டி விட்டுப் படிக்கத் துவங்கினான்.

இரவு மணி பத்து. குடித்து முடித்தவன் ஒவ்வொருவனாக கார்த்திக்கிடம் கைகுலுக்கி விடை பெற்றான்.

ஜெயகுமார் “ஸ்டாப். இது என்ன லொகேஷன்”

“இன் டோர். டாஸ்மாக் பார்”

அப்போ பக்கத்தைப் புரட்டி அடுத்த லொகேஷன்லேயிருந்து படி”

அப்பாவின் இறுதி நாட்களில் அவர் படுத்த படுக்கையாகி விட்டார். பக்கவாதத்தில் வாய் குழறியது. அப்போது தான் அவரின் சக ஊழியர்களில் ஒருவராக சுசீலா மேடத்தை சந்தித்தான். இளவயதில் அவர் நிறையவே அழகாக இருந்திருக்கக் கூடும்.

‘இந்த லொகேஷன்?’

‘இன் டோர். வீடு’

‘குட். அடுத்ததைக் கண்டு பிடி’

வேலைக்குச் சேர்ந்ததும் சுசீலா மேடம்தான் அவனுக்கு ஹெட் க்ளார்க். தினசரி அவனுக்கு எதாவது சாப்பிடக் கொண்டு வருவார்.நாலு பேர் கிண்டலடித்தபின் பொறுக்க முடியாமல் ‘இதெல்லாம் இனிமே தராதீங்க. மறுக்கக் கஷ்டமா இருக்கு’ என்றான்.

செந்தில் படிப்பதை நிறுத்தி லொகேஷன் ஆபீஸ் என்றான்.

“வரிசையா நோட் பண்ணு. அடுத்தது?”

“இன்னிக்கிப் பிறகு நீ என்னைப் பத்தி என்ன வேணுமின்னாலும் நெனெச்சுக்க. போய்க்கிட்டே பேசலாம்” என்று ஆட்டோவில் ஏறினாள் சுசீலா.

“மெயின் ரோடு” என்று குறித்துக் கொண்டே அவரிடம் சொன்னான்.

“மெரினாவில் வட இந்தியர் என பல தலைகள். ஒரு காங்கிரிட் பென்ச்சில் கார்த்திக் உட்காரப் போனான். ‘மணல்ல உட்காரலாம் வா’ என்று கையைப் பிடித்து அழைத்துப் போனாள்.

டே எஃபெக்ட். லொகேஷன் மெரினா.

“ஆஃபீஸ்ல என்னப் பத்தி என்ன பேசிக்கறாங்க?”
கார்த்திக் தலையைக் குனிந்து பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

“பேசு கார்த்தி. சொல்லு. ” அவனிடமிருந்து பதிலில்லை.

“நானே சொல்றேன். தேவிடியான்னு தானே?”

இதும் அதே லொகேஷன் தான் ஸார். பிறகு என்று முனகியபடியே செந்தில் நிறைய பக்கங்களைப் புரட்டினான்.

“ஒன் மினிட்” என்று ஜெய குமார் அவனிடமிருட்ந்த ஃபைலை வாங்கிப் பக்கங்களைப் புரட்டினார். “இதுல நீ ஒண்ணு கவனிக்கணும். அவங்க மெரினாவுக்கு சுமார் ஆறு மணி போல வராங்க. வெகு நேரம் பேசறாங்க. கொஞ்சம் கொஞ்சமா ‘டே எஃபெக்ட்’லேயிருந்து ‘நைட் எப்பெக்ட்’டுக்கு மாறும். இப்பவே குறிச்சு வெச்சுக்கிட்டாத்தான் லைட்டிங்க் அதுக்கு ஏத்த மாதிரிச் செய்வாங்க. டே எஃபெக்ட் எங்கே முடியுதுன்னு பாக்கணும். இந்தப் பக்கத்தைப் படி” என்று ஒரு பக்கத்தை எடுத்துத் தந்தார்.

“இதப்பாரு” என்று தன் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தாள். அதில் வட்ட வடிவ லாகெட் இருந்தது. “அதப் பிரிச்சுப் பாரு” என்றாள். கார்த்திக்கின் கை லாக்கெட்டைத் திறக்கும் போதே நடுங்கியது. உள்ளே அவன் அப்பா படம். சிறிய வட்ட வடிவில்.

இந்த இடத்திலே கண்டிப்பா டே எஃபெக்ட் இருக்கு. அந்த அம்மா காமிக்கற லாக்கெட்ல உள்ள சின்ன போட்டோவை இந்தப் பையனால நைட்ல பாக்க முடியாது. அதுனால குறிப்பா நாம இந்த ஸீனை நோட் பண்ணிக்கணும். இதுக்குப் பிறகு பேசிக்கிட்டிருக்கிற எந்த ஸீனையும் நைட் எஃபெக்ட்ல காட்டலாம். இதைப் படி” என்று மற்றொரு பக்கத்தைக் காட்டினார்.

‘நீ என் பையன் மாதிரி. தெரிஞ்சிக்கிட்டாத் தப்பில்லே.’ அவன் வலது கை விரலைப் பற்றி ரவிக்கையைத் தோள் பட்டைப் பகுதியில் விலக்கி அங்கே அழுத்தி வைத்தாள். ‘தொட்டுப் பாரு’. மரவட்டை போலத் தழும்பு. ‘நான் அழகா இருக்கறதுனாலே என்னைச் சந்தேகப் பட்டு தாலி கட்டினவன் போட்ட சூடு. என்னும் உடம்பு முழுக்க இருக்கு’

இந்த இடத்திலெயிருந்து தொடங்கி ஸீன் முழுக்க நைட் எஃபெக்ட் தான் என்றார்.
அடுத்தது இன்டோர் . டே எஃபெக்ட். ஆபீஸ் கான்டீன் என்றான் செந்தில் பக்கங்களைப் புரட்டிய படி.

“என்னே எதுக்கு மடக்கினே தம்பி. உங்க அப்பா மேலே இருக்கிற மரியாதையிலே உன்னை மதிச்சு அவனுகளை விட்டேன். உங்க அப்பா மாதிரி ஆரும் இப்போ தலைவரு கிடையாது. எல்லாம் சாதி வெறி புடிச்சவனுங்க”

கதையின் மீதிப் பக்கங்களையும் புரட்டிய செந்தில் வேறே லொகேஷன் ஏதுமில்லை ஸார் என்றான்.

‘ஆக்ட்சுவலா நாம இத ஸ்கிர்ப்ட்டை வெச்சுக்கிட்டு செய்திருக்கணும். ராஜேந்திரன்னு ஒரு ரைட்டர். டைரக்டருக்கு ஃப்ரண்டாம். அவர்கிட்டே முடிச்சுக் கொடுத்துட்டாரு. டைரக்டரு ஊரிலேயிருந்து வரும் போது ஸ்கிரிப்ட்டைத் தரேன்னாரு”

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாவல் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s