வௌவால்
சத்யானந்தன்
முதல் மாடி பால்கனியிலிருந்து ‘மெயின் கேட்’ மங்கலாகத் தெரிந்தது. அதிகாலையில் நடைப் பயிற்சி செய்பவர்கள், பால் வாங்குபவர்கள் உதிரியாக வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். டெல்லியின் அக்டோபர் மாதத்து வருடலான குளிருடன் வீசிக் கொண்டிருந்த காற்றை ரசிக்க முடியவில்லை.
வயிறு தொடர்ந்து விடியப் போகிறது என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அதை மறக்க பால்கனிக்கு உள்ளேயே மெதுவாக நடந்தாள். ஒரு ‘ஹாங்கர்’ உள்ளாடைகள் மற்றும் அவற்றைப் பிணைத்த ‘க்ளிப்’ சகிதம் கீழே விழுந்தது. பூ வேலை செய்த, மிருதுவான வெளிநாட்டு ‘ப்ராண்ட்’ உள்ளாடைகள் இரண்டு நாளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அம்மா பழக்கியதாலோ என்னவோ இப்படி உள்ளாடைகளை பால்கனியில் காயப் போடவே தன்னால் முடியாது. இந்த அளவு அதில் பணம் போடவும் தான்.
அதை இருந்த இடத்தில் மாட்டி வைத்தாள். இங்கே வந்து இது இரண்டாவது வாரம். முதல் வாரம் இது போல் கண்ணில் தென்பட்டதை அதற்குரிய இடத்தில் வைத்து ஒற்றை அறை, ஹால், சமையலறை, அத்தனையையும் ஒழுங்கு படுத்தியபடி தான் இருந்தாள். இனி அது தேவையில்லை. தனக்கென ஒரு கட்டில் வாங்கியாகி விட்டது. அதற்குக் கீழே பெட்டியை வைத்துத் தனித்துக் கொண்டாகி விட்டது.
அம்மா கொடுத்தனுப்பிய சத்து மாவுக் கஞ்சி காலையில், மதியம் ஆபீஸ் கான்டீன், இரவில் தயிர் சாதம், ஆம்லேட், பிரெட் என ஒப்பேற்றியாகிறது.
வயிறு தொடர்ந்து பிடிவாதம் பிடித்தது. தைரியம் அனைத்தையும் ஒன்று கூட்டி பாத்ரூம் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். ‘வெஸ்டர்ன் க்ளோஸட்’டின் மேற்பக்கம் மட்டுந்தான் தெரிந்தது. ஒரு கையால் பாத்ரூம் நிலையைப் பிடித்தபடி ஒரு எட்டு எடுத்து வைத்து ‘க்ளோஸட்’டின் உட்பக்கம் பள்ளத்தைப் பார்த்தாள். வௌவால் ஒரு பனிப்பாறை போலத் தலையை நீட்டிக் கொண்டு தான் இருந்தது. க்ளோஸட்’டின் உட்புறம் மீது ஒட்ட முயன்று மற்றுமொரு முறை வழுக்கியது. நனைந்த சிறகுகளை விரிக்க முயன்று ஈரம் தாங்காது தோற்று ஆனால் உயிரை விடாது போராடிக் கொண்டிருந்தது.
கழிவு நீர் வெளியேறும் குழாய்கள் தென்படாதவாறு ஒரு கட்டிடத் திட்டம். அறு கோணமாய் அமைந்த வளாகத்தின் இரண்டு குடியிருப்பு சந்திக்கும் இடமும் அறு கோணத்தில் ஒரு முனையும் ஒன்றே. ‘சிமெண்ட் க்ரில்’ வைத்து கழிவு நீர்க் குழாய்களை மறைத்திருந்தார்கள். அரையிருட்டும் நான்கு மாடி வரை உட்குழிவான குழாய் தவிர்த்த வெற்றிடம் வௌவாலுக்கு வசதியாய் இருந்தது. அதே ‘சிமெண்ட் க்ரில்’ கழிப்பறை மற்றும் குளியலறை மூலையில் சாளரமாயும் அமைய வௌவால் இரவு இருளில் உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.
விடியற்காலை பாத்ரூம் விளக்கைப் போட்டதும் வீல் என்று அலறி விட்டாள். இன்னும் கொஞ்சம் பலமாகக் கத்தியிருந்தால் காலனியிலுள்ள அக்கம்பக்கத்தவர் எழுந்து வந்திருப்பார்கள். ஹாலுக்கு வந்து கட்டிலில் விழுந்தாள். வியர்வை அடங்க, இதயத் துடிப்பு சீர் பட அரை மணி ஆனது. ‘சிபிடபள்யூடி’யின் ‘சர்வீஸ் சென்டர்’ திறக்க காலை மணி பத்தாகும். ஏதேனும் செய்தே ஆக வேண்டும். கழிப்பிடக் குழாயைத் தவிர்த்து குளியல் குழாயில் ஒரு வாளி தண்ணீர் பிடித்துத் தள்ளி நின்றபடி பலத்தைத் திரட்டித் தண்ணீரை ‘க்ளோஸட்’டின் மீது ஊற்றினாள். வௌவால் தண்ணீரில் மிதந்து மேலெழும்பி வந்து சுவாசித்துப் போராடி தலையை நீட்டித் தத்தளித்துக் கொண்டிருந்தது. என்ன செய்ய? தன்னையுமறியாமல் வீட்டுக்கு மொபைலில் போன் செய்தாள். பிரபாகர் மொபைலை ஆஃப் செய்திருந்தான். குழந்தை ஸ்கூலுக்குப் போகும் நாட்களிலேயே அவன் தன் வசதிப்படி தான் எழுந்திருப்பான். நவராத்திரி லீவு இப்போது. இவனும் பையனும் இரவு ‘ஏஎக்ஸென்’ அல்லது ‘ஈஎஸ்பிஎன்’ பார்த்து விட்டு வெகு நேரம் கழித்துத் தூங்கப் போயிருக்கலாம். டெல்லி வந்ததுமே ஒரு ‘ப்ரீ பெய்ட்’ கனெக்ஷன் எடுத்தாள். பெரிதும் இவள் தான் சென்னைக்கு போன் செய்கிறாள். ஒரே ஒரு முறை பிரபாகர் போன் செய்து ‘எலெக்ட்ரிஸிடி கார்ட்’ எங்கே என்று கேட்டான்.
‘லேப் டாப்’ பை எடுத்து ‘ப்ராஜக்ட்’டில் கவனத்தைத் திருப்பினால் என்ன? ஒப்பந்தம் செய்த கம்பெனியிடம் அவர்கள் கேட்டதை ஒட்டியும் நீட்டியும் வேறு மென்பொருள் என்னென்ன தேவைப்படும் என ஒரு தூண்டில் போடச் சொல்லியிருந்தான் பவன் குமார். இயந்திரம் களை கட்டிய போது நேற்று கிளம்பிய அவசரத்தில் அலுவலக ‘சர்வர்’ கணிப்பொறியிலிருந்து ‘லேப் டாப்’புக்கு ‘அப் டேட்’ செய்யாமல் விட்டது நினைவுக்கு வந்தது. இனி அலுவலகம் போய் தான் எதுவும் செய்ய முடியும்.
“நேற்று மாலை கிளம்பும் போது ‘எங்கே போக வேண்டும்?’ என்றான் பவன் குமார். “முனிர்காவில் ஒரு மடக்குக் கட்டில் வாங்க” என்றாள்.
“நான் உடன் வரவா?” திட்டவட்டமாக மறுத்ததும் கை குலுக்கிக் கிளம்பி விட்டான். டெல்லியில் கை குலுக்குவதும் தட்டிக் கொடுப்பதும் சகஜம் தான். ஆனால் அவன் நெருங்க முயலும் பிற கணங்கள் இந்த செய்கைகளில் அவளுக்கு அச்சம் தந்தன. ஆள் உஷாரானவன். இன்னும் காத்திருக்கத் தயார் என்பது போல் ஒதுங்குவான். நிறைய டெலிபோன் அழைப்புக்கள் வருகின்றன. காத்திருப்பது பழக்கமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம்.
இரண்டு நாள் முன்னால் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த போது அறையில் தனதென்று ஒதுக்கிய கட்டில் மற்றதுடன் சேர்ந்து விரிப்புகள் கசங்கி இருந்த போது அருவருப்பு குமட்டி மேலெழுந்தது.
காலி செய்யலாம் என்று கண நேரம் தோன்றியது. அரை மணி நேர தூரத்தில் ஆபீஸ். ‘ப்ராஜக்ட்’ முடியும் வரை சகித்தால் திரும்பி சென்னை போய் விடலாம்.
அரசாங்க ஊழியர் என்று குடியிருப்புக் கிடைத்ததில் பெருமிதமா? இல்லை நான் குடியிருக்க வந்தவள் என்பதால் இளப்பமா? கொஞ்சமாவது நாசூக்கு வேண்டாமா? வாரக் கடைசியில் வெளியே தங்குவது போதாது என்று வீட்டுக்குள்ளேயே பகலில்! திட்டவட்டமான எதிர்ப்பைக் காட்டாவிட்டால் தான் வீட்டில் இருக்கும் போதே அது நிகழலாம்.
‘முனிர்கா’வில் மடக்குக் கட்டில் சல்லிசாகக் கிடைக்கும் என்று கேட்டறிந்தாள். ஒரு பெரிய ‘ப்ளைவுட்’ ஆறடி இருக்கக் கூடியதை இரண்டாக வெட்டி நாடாக் கட்டிலில் வருவது போல, மடக்கக் கூடிய வளைந்த இரும்புக் குழாய் கால்கள். அறுநூறு என்று ஆரம்பித்து நானூற்று ஐம்பதுக்கு விலை படிந்தது. மூணு சக்கர தட்டு வண்டிக் காரன் இரவுக்குள் கொண்டு வர முப்பது ரூபாய் கேட்டான். வயதானவன். பதினோரு மணிக்கு மேல் வந்தவன் அதை ஹாலில் மூலையில் பிரித்துப் போட்டு மெத்தையை அறையிலிருந்து மாற்றிக் கொடுத்தான். இரண்டு மாடி எப்படித்தான் தூக்கினானோ? இரவு பத்து மணிக்கு மேல் ‘லிஃப்ட்’ கிடையாது.
நன்றாக வெளுக்க ஆரம்பித்து விட்டது. பறவைகளின் கதம்பமான ஒரிகள் டெல்லியில் மரம் நிறைய என்பதைச் சுட்டுவது போல அடர்த்தியான சத்தமான பறவைச் சீழ்கைகள்.
‘சொத்’ என்று வந்து விழுந்தது செய்தித்தாள். ஒரு உருட்டுக் கட்டை போல சுருட்டி ‘ரப்பர் பேண்ட்’ போட்டு மூன்று மாடி நான்கு மாடி வரை பால்கனியில் விழுகிற மாதிரி குறி வைத்து எறிகிறார்கள். அனேகமாகக் குறி தப்பாது.
வயிற்று சங்கடம் ஒரு வலியாக நின்று விரட்டுவதைக் குறைத்திருந்தது. ஆபீஸ் பஸ் வர இன்னும் ஒரு மணி நேரந்தான் இருக்கிறது. அதுவரை எப்படியாவது சமாளிக்கலாம். ஆனால் ஆபீஸில் நுழைந்த உடன் ஒரு நிமிட அவகாசம் கிடைப்பது அரிது.
கீழே நடைபாதை தளத்தில் யாரோ நகர்வது தெரிந்தது. நேற்று கட்டில் கொண்டு வந்த ஆள். தள்ளு வண்டியை ஓட்டாமல் தள்ளியபடி அவளது மாடிப்படி பக்கத்திலிருந்து மெயின் கேட் நோக்கி நகர்கிறான். நியூஸ் பேப்பரை கட்டோடு அவன் பக்கம் வீசினாள். அவனுக்கு முன்பே அது விழுந்தாலும் அவன் கவனத்தை ஈர்த்தது. ‘ஒரு நிமிடம் மேலே வா’ என்று சைகை செய்தாள். அவன் கதவைத் தட்டி உள்ளே வந்ததும் ஹிந்தியில் எதையும் முயற்சிக்காமல் நேரே பாத் ரூமுக்கு அழைத்துப் போனாள். ஓடி வந்து ஹாலில் அமர்ந்தாள். அவன் கைப்பிடியில் அது வீச் வீச் என கத்தியபடி இருக்க அவன் அதனுடன் வெளியேறினான். எதாவது பணம் தரலாம் என எண்ணிய போது இரண்டு மூன்று நிமிடமாகியும் ஆளைக் காணவில்லை. பால்கனியிலிருந்து பார்த்த போது தன் வண்டியோடு நகர்ந்து கொண்டிருந்தான்.
முதல் காரியமாக நிறையத் தண்ணீரை ஊற்றினாள். பயன் படுத்தி நிம்மதியாக வெளியே வந்ததும் சென்னைக்கு போன் செய்யலாமா என்று எண்ணினாள். நேரமின்மையை மனதில் கொண்டு அதைக் கை விட்டாள்.
வென்னீர் தயாராவதற்குள் கஞ்சி கொதித்து முடிந்தது.
சோப் வைக்கும் இடத்தில் தினமும் எரிச்சலூட்டும் அந்த புதிய சோப் டப்பா கண்ணில் பட்டது. ஆண்கள் பயன்படுத்தும் சோப். முழு கட்டி மீது முடிகள் அழுந்தி ஒட்டியிருந்தன.
அதை எடுத்து ஒரு முறை முகர்ந்து, இருந்த இடத்தில் வைத்து விட்டுத் தனது சோப்பில் குளிக்கத் துவங்கினாள்.