பார்வை


 

சிறுகதை

பார்வை

சத்யானந்தன்

(நடவு இலக்கிய இதழ் மார்ச் 2005ல் வெளியானது)

அடையாரின் பிரசித்தி பெற்ற உணவகங்களுள் ஒன்று அது. எனது நான்கு சக்கர வாகனத்தை, அனுமதிக்கப்பட்ட் இடங்களுள் ஒன்றைக் கண்டுபிடித்து நிறுத்தி விட்டு வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. உணவகத்தில் நான் நுழைந்த போது வாயில் வரை காத்திருப்போர் வரிசை நீண்டிருந்தது. ஒரு கணம் உள்ளே நுழையாமல் திரும்பி விடலாம் போல இருந்தது. வாரக் கடைசியை ஆசுவாசமாகக் கழிக்கப் போட்டி போட்டு, நம் இருக்கையின் பின்னே, கிரிக்கெட்டின் கடைசி விக்கெட்டைப் பிடிக்க, பேட்ஸ் மேனைச் சுற்றி நான்கு பேர் போல நிற்பவர் நடுவே உண்டு முடிப்பது இம்சை. இதை முன்னமே என் மனைவியிடம் (சத்தமாகச்) சொல்லியிருக்கிறேன். இன்று குழந்தைகள் வெளியே சாப்பிடலாம் என்றதும் அவள் நடுநிலை வகித்து விட்டாள். என் (பெண்) குழந்தைகள் இருவருக்குமே ஏதேனும் ஒரு சிறு நோய் அல்லது விபத்து ஏற்பட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் சுமார் ஆறு மாதமாக சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அவர்களின் சிறப்புகள் பலவற்றைப் பட்டியலிட்டதோடு யார் யார் திருஷ்டி பட்டிருக்க வாய்ப்பிருந்தது என் மனைவியும் மாமியாரும் யூகித்திருந்தனர். பல முறை திருஷ்டி கழித்த பின் அது சம்பந்தமான அங்கலாய்ப்புகளும் நின்றிருந்தன. ஆனால் இதே கால கட்டத்தில் என் குழந்தைகள் உடைகள் வெளியே உணவு என்னும் நடுத்தர வர்க்கத்து குறைந்த பட்ச ஆடம்பரங்களில் பிடிவாதமாக ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களால் அணிய முடியாத படி சிறிதான உடைகளையும் அவர்கள் விட மனமின்றி அலமாரி வழிய வழிய வைத்திருக்கிறார்கள்.

கீழ்த்தளத்தில் உள்ள பகுதியில் என் குடும்பத்தினரைக் காணவில்லை. படிகளிலும் நின்றிருந்தவர்களிடம் செயற்கையான மன்னிப்புக் கோரி முதல் தளத்தை அடைந்தேன். நான்கு நாற்காலிகளால் சூழப்பட்டிருந்த ஒரு மேசையில் நான்காவதாக ஒருவர் தன் பணியில் ஒன்றியிருந்தார். அவர் எதிரே இருந்து என் மனைவி ‘நீங்கள் வரலாம்’ என்று சிறியவளை எழுப்பி சைகை செய்தாள். வேண்டாம் என்று பதில் சைகை செய்து படியேறி திரும்பியதும் படிக்கட்டை ஒட்டி சாய்ந்த படி நின்றேன். சீருடை அணிந்த பரிசகர்கள் சுறுசுறுப்பாயிருந்தனர். உணவு அட்டவணையை என் குடும்பம் பரிசீலித்துக் கொண்டிருந்தது. சுவரில் அந்த உணவகத்தின் சென்னைக் கிளைகளின் புகைப்படங்கள் சட்டமிட்டுத் தொங்கின. ‘மகிழ்ச்சி மனிதன்’ என்று வயிறு பெருத்து அமர்ந்த நிலையில் உள்ள தலை வழுக்கையான உருவத்தின் பொம்மை. பல இடங்களில் மண் நிறத்தில் பார்த்திருக்கிறேன். இந்த தளத்தில் ஒரு பெரிய கருமை வடிவ இரண்டடி உயர பொம்மையாய் ஒரு மூலையில் அமர்ந்திருந்தது. பல இடங்களில் மண் நிறத்தில் பார்த்திருக்கிறேன். திருஷ்டி வராமலிருக்கத் தான் வைத்திருக்க வேண்டும்.

விலையுயர்ந்த நறுமணத்துடன் ஒரு இளம் பெண் உயர்ரக பருத்திச் சேலையில் என்னைக் கடந்து சென்றாள். தோளுக்கு சற்று கீழ் வரை தலைமுடி புடவை அணிவதில் வருத்தப்பட ஏதுமில்லை என்பது போல அமரும் போது அதிக சலனமின்றி புடவைத் தலைப்பு தரையில் படாமல் அமர்ந்தாள். நீளமான முகம். அளவில் குறைந்த பொட்டு. அளவான உதட்டுச் சாயமும் முக அலங்காரமும். அவல் கணவன் ‘செல் போனில்’ ஆழ்ந்த உரையாடலில் இருந்தான்.

இன்று காலை பதினோரு மணியளவில் நான் சந்தித்த பெண்மணி நினைவுக்கு வந்தார். நடு வயது. அவர் உடையலங்காரத்தில் ஓர் உடல் மொழியே பொதிந்திருந்தது.

டெல்லியிலிருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை நான் மீனம்பாக்கத்தில் காலை பத்து மணிக்கு வரவேற்றேன். என்னுடைய நிறுவனத்துக்கு அவர் அதிகாரியாய் பணியாற்றும் அமைச்சகம் மிகவும் வேண்டியது. எங்கள் நிர்வாகம் எங்கள் பணியாட்களில் ஒருவர் பெயரில் அவருக்கு ‘செல்போன்’ கொடுத்திருந்தது. அதிலும் கூட ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலிருந்து பேசுவார். யார் பெயரையாவது குறிப்பிட்டு ‘அவர் உடல் நலம் தேவலாம். இன்னும் ஒரு வாரத்தில் டிஸ் சார்ஜ் ஆகி விடுவார்’ என்பார். இதன் சமாச்சாரம் எங்களுக்குப் புரியும். ஒரு முறை ‘கிரகணம் விலகி நிலவு பார்வையில் வந்து விட்டது. எனவே வெளிச்சம் தென்படும்’ என்று எஸ் எம் எஸ் கொடுத்தார்.

நான் அவரை இன்று தான் முதன் முதலாக சந்தித்தேன். மீசை, தலை முடி இரண்டுமே சாயக் கருமையுடன் நேர்த்தியான உடையில் இருந்தார். பூங்கொத்தை வாங்கிக் கை குலுக்கியவர் பெட்டியைத் தானே எடுத்து வர விரும்பினார். எங்கள் ‘கெஸ்ட் ஹவுஸ்’ நுங்கம்பாக்கத்தில் இருந்தது. செல்போனில் பேசிய பின் ‘எஸ்.ஐ.ஏ.டி’ பஸ் ஸ்டாப்பில ஒருத்தரைப் பிக் அப் பண்ணிக்கலாமா?’ என்றார். சாலையில் கவனத்துடன் ‘ஓகே என்றபடி தலையசைத்தேன்.

நந்தனத்தில் என் காரில் ஏறியவர் தான் அந்த நீள முகமான பெண்மணி. அவர் சென்னையில் இதே அமைச்சகத்தில் பணி புரிபவர். அவருக்கு வெளி நாட்டுப் பயணம் கிடைக்கத் தான் எடுத்து வரும் முயற்சியைப் பற்றியும், வட நாட்டு மந்திரியுடன் தனது நம்பிக்கைக்குரிய அலுவல் பிணைப்பு பற்றியும் விவரித்தபடி வந்தார் கிருஷ்ணமூர்த்தி. ‘கெஸ்ட் ஹவுஸி’ல் விட்டதும் எனக்கு போன் செய்வதாகக் கூறி என் எண்ணைத் தன் செல்போன் நினைவில் ஏற்றி அந்த அம்மாளுடன் உள்ளே சென்றார். இறங்கும் போதும் என் கண்களைச் சந்திக்காமல் விடைபெறாமல் அந்த அம்மாள் உள்ளே சென்றார். அவருடைய முகத்தில் அவரை அலுவகத்தில் சந்திக்கும் போது தென்படும் கண்டிப்பு தென்படவில்லை. ஒரு உறுதியும் முனைப்பும் தென்பட்டன. உணவகத்தில் இப்போது நான் பார்க்கும் இந்த இளம் பெண் வசதியும் எளிமையும் நன்னம்பிக்கையும் பொதிந்தவளாய் இருக்கிறாள்.

ஒரு பணியாளர் என் தோளில் தட்டினார். என் கடைக்குட்டி அப்பா என்று அழைப்பதும் கேட்டது. எனக்கான இடம் காலியாகியிருந்தது. என் மனைவியின் முகத்தில் ஆழ்ந்த பார்வையும் ஈரமில்லாத புன்னகையும். என் கவனம் அவள் கவனத்தில் பட்டிருக்கலாம்.

நாங்கள் இருவரும் மௌனமாக சாப்பிட்டோம். குழந்தைகள் உற்சாகமிழந்தனர். உணவு முடிந்து, வண்டியை நான் எடுத்து வந்ததும் குழந்தைகளைப் பின் இருக்கைக்கு அனுப்பி என் அருகே அமர்ந்தாள் மனையாள். ஏதேனும் சொல்ல ஆரம்பிப்பாளோ என்னவோ? ‘டாடி, இது என்ன கிஃப்ட்?’என்று குரல் கொடுத்தாள் மூத்தவள். பின் பக்கத்தின் இருக்கைக்கு மேற் பக்கம் வண்ணக் காகிதம் சுற்றிய பரிசுப் பெட்டி. அது கிருஷ்ண மூர்த்தியை ‘கெஸ்ட் ஹவுஸி’ல் அவரது அறையில் அமர்த்தியவுடன் தரச் சொல்லி என் மேலாளர் கொடுத்தது. இப்போது என்ன செய்ய? நல்ல வேளை. அவரது ‘பொபைல் எண்’ என்னிடம் இருந்தது. உடனே டயல் செய்தேன். வண்டி ஓட்டும் போது இது தவறு என்றாள் என் மனைவி ஆங்கிலத்தில். கிருஷ்ணமூர்த்தியிடம் என் மறதியைக் குறிப்பிடாமல் ‘தங்களைச் சந்திக்க வேண்டும்’ என்றேன். அபிராமபுரத்தில் ஒரு திருமண மண்டபத்தின் பெயரைச் சொன்னார். நல்ல வேளை அருகாமையில் தான். குடும்பத்தை வீட்டில் விட்டு விரைந்தேன்.

ஒரு அதிர்ஷ்டம். மண்டப வாயிலில் என் வண்டிக்கு நிறுத்த இடம் கிடைத்தது. வாயில் நுழைவில் விளக்குத் தோரண அலங்காரத்துடன் வளைவு. அதைத் தாண்டியதும் ஆறடி உயர பனிக்கட்டியில் செதுக்கிய பிள்ளையார். தும்பிக்கை, முகம் இரண்டும் இறுக்கம் இழந்து ஒளி ஊடுருவும் அளவு பனிக்கட்டி உருகி இருந்தது. காதுகள் ஏற்கனவே உருகி இருக்க வேண்டும்.

காதைப் பிளக்கும் சினிமா இசையில் இரண்டு மூன்று பேரிடம் நான் தேடி வந்தவர் பற்றி விசாரிப்பது எளிதாக இல்லை. நாற்காலிகள் வரிசை குலைந்து நடக்கத் தடை செய்தன. வட்டமாகப் பேசியபடி நிற்கும் மூன்று நான்கு குழுக்களைத் தாண்டி சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தேன். ‘பஃபே’ வரிசையில் ‘கோட்-சூட்’ அணிந்த கிருஷ்ணமூர்த்தி தென்பட்டார். வெளியே காத்திருக்க முடிவு செய்து வரவேற்பு ஹாலுக்கு வந்தேன். யாரோ ஒரு குளிர்பானக் கோப்பையை என் கையில் தந்து விட்டுப் போனார். பருவப் பெண்கள் அதிகமாக நடமாடுவதாகவும் சிரிப்பதாகவும் தோன்றியது. நான் நின்ற இடத்தின் அருகே பரங்கிக்காயில் வருக என்ற சோளக் கொல்லை பொம்மை போல உருவம். அதன் உடைகள் முட்டைக் கோஸ் தோல், பீட்ரூட் துண்டுகள் மற்றும் ரோஜா இதழ்களில். பக்கத்து மேசையில் வெற்றிலை, பாக்கு, பெருஞ்சீரகம், வாசனைப் பாக்கு இத்யாதி.

வயதான ஒருவருடன் பேசியபடி வந்தார் கிருஷ்ணமூர்த்தி. ‘ரிலேடிவ்ஸ் எல்லாம் இங்கே. நான் டெல்லியிலே. மனசுல அடிக்கடி தோணும் ரிடையர் ஆன பின்னாடி இங்கே வரணுமின்னு.’ இருவரும் என்னை கவனிக்காமல் கடந்து சென்றனர்.

மெதுவாக அவர் அருகே சென்று கவனத்தை ஈர்த்தேன். உடனே என் கையைப் பற்றி மண்டபத்துக்கு வெளியே இட்டு வந்தார். என் மறதிக்கு மன்னிப்புக் கேட்டு வண்ணப் பொட்டலத்தை நீட்டினேன். ‘இது தவிர்த்திருக்கப் பட வேண்டியது.’ என்றார். ‘ நிர்வாகத்திடம் சொல்லி திருப்பி விடுகிறேன் என்று பதிலளித்தேன். ‘நோ நோ உன் நிர்வாகம் நான் பெற்றுக் கொண்டதாகவே எண்ணட்டும். என் பரிசாக நீ இதை வைத்துக் கொள். யாருக்கும் இது தெரிய வேண்டிய அவசியமில்லை’ என்று தோளில் தட்டி விட்டுப் போனார்.

தெருவில் இறங்கும் முன் என்னையுமறியாமல் திரும்பிப் பார்த்தேன். பனிக்கட்டியிலிருந்து வினாயகர் நீங்கி ஒரு மைல் கல் போலத் தோற்றமளித்தது பனிக்கட்டி.

பொட்டலத்தை என் மனைவி கவனமாகப் பிரித்த போது கண்ணாடியில் செய்த ஒரு யானை. அதன் மீது பாகன். பாகனின் பச்சை முண்டாசு, சட்டை, யானை மீது ஜரிகை வேலைப்பாடு செய்த தங்க நிறத் துணி தவிர ஏனைய பகுதிகள் வழியே ஊடுருவிப் பின்புலம் தெரிந்தது. யானைப் பாகன் கையில் அங்குசம் வெள்ளியில் மின்னியது. என் மனைவி முகத்தில் மகிழ்ச்சி. ‘க்ரிஸ்டல் பீஸ். ஷோ கேஸ்ல வெச்சாப் பார்வையா இருக்கும்’ என்றாள்.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s