http://puthu.thinnai.com/?p=12356
(1) நடப்பு நிலவரம் +2 வரை
எப்போது பார்த்தாலும் ஊடகங்களின் பொறுப்பின்மையையும், வெகு ஜனங்களின் விழிப்பின்மையையும் குறிப்பிட்டு அவர்களை கரித்துப் கொட்டி, சபித்துத் தீர்ப்பது சரியா? அவர்களிடம் நல்ல அம்சம் எதுவுமே கிடையாதா?
கட்டாயமாக இருக்கிறது. கல்வி (குறிப்பாகத் தமிழகத்தில்) பெறும் கவனம் ஊடகம், வெகு ஜனம் இருவர் தரப்பிலுமே பாராட்டுக்குரியது. மூன்றாமவராக அரசாங்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆட்சிகள் மாறினாலும் கல்வித்துறை அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பது நல்ல அம்சம்.
குழந்தைகளின் கல்வி என்றதும் சினிமாவிலாகட்டும், தனிப்பட்ட உரையாடல்களிலாகட்டும் ஒரே சித்திரமே வரையப்படும். வசதியான குடும்பப் பிள்ளைகள் நல்ல கல்வி பெறுவதாகவும், கீழ்த்தட்டு, ஏழைக் குழந்தைகள் ஏதிலிகளாகக் கல்விக் கடலில் கரை சேராமற் போவதான சித்திரமே அது. மறுபக்கம் அரசாங்கமோ அரசியல்வாதிகளோ நிதிப் பற்றாக்குறையே காரணம் என்பர்.
பெற்றோரோ அரசாங்கமோ இன்னும் தாராளமாகச் செலவழித்தால் எல்லாம் சரியாகி விடுமா? உண்மையான நிலவரம் என்ன?
அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளாகட்டும், இலவசக் கல்வி தரும் அரசுப் பள்ளிகளாகட்டும் ஆசிரியரின் முனைப்பு அல்லது ஈடுபாடு மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது. பெரும்பான்மையானவர் (90%) இதை ஒரு வேலையாக எண்ணிச் செய்கிறார்களே ஒழிய சேவையாக அல்ல. மாணவர்களை நோக்கி சில விஷயங்களை விட்டெறிகிறார்கள். அவ்வளவே. மற்றபடி அவர்கள் மனதில் அது பதிந்ததா, அவர்களுக்கு விளங்கியதா, இதன் தொடர்ச்சியாக அடுத்த வகுப்பிலோ, அடுத்த பாடத்திலோ நாம் மேற் கொண்டு விளக்கும் போது மாணவர் நம்மோடு வருமளவு விளங்கிக் கொண்டாரா என்பது ஆசிரியரின் அக்கறை விளிம்புக்குள் இல்லை. தேர்வில் மாணவன் விடையளிப்பது அதற்கு அடுத்த கட்டம்.
ஆசிரியரின் இந்த “ரோபோ” மனப்பாங்கில் அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால், தனியார் பள்ளிகளை ஒப்பிட அரசு வேலை என்று நல்ல தகுதி உள்ள ஆசிரியர் அரசுப் பள்ளியையே தேர்ந்தெடுக்கிறார்.
தனியார் பள்ளி அரசுப் பள்ளி இரண்டிலுமே மாணவரின் தேர்ச்சி சதவிகிதம் என்பதே ஒரு ஆசிரியரின் பணிச்சிறப்பின் உறைகல்லாக இருக்கிறது.
இந்த அளவு கோலை வைத்துப் பார்க்கும் போது, வகுப்பு ஆசிரியரை மட்டுமே நம்பி வரும் மாணவர் மிகுந்த அரசுப் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் குறைகிறது.
தனியார் பள்ளி மாணவன் ‘ட்யூஷன்’ என்னும் தனி வகுப்பையே நம்பி இருப்பதால் அவனுக்கு சிக்கலேதும் இல்லை.
இரண்டு சூழலிலுமே ஆசிரியர் அவர்களாகவே ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவராய் இல்லாவிடில், அவரிடமிருந்து மாணவருக்கு அறிவுப் பரிமாற்றம் ஏதும் நிகழ்வதில்லை.
மற்றொரு எதிர்மறையான விஷயம் தனியார் பள்ளிகளின் மிதமிஞ்சிய நிர்வாகமும் , அரசுப் பள்ளிகளின் அதீதமான மெத்தனமும். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் அடிமை போல நடத்தப் படுவது வெளிப்படையான உண்மை. நேர்மாறாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை முறையாக நிர்வகிக்கும் இயந்திரம் கிடையாது. அடாவடி ஆசிரியர்களையோ, வழிதவறும் மாணவர்களையோ கண்டிப்பது கிடையாது என்பது ஒரு புறம். மறு புறம் குமாஸ்தா வேலை , ப்யூன் வேலை எல்லாவற்றையும் ஆசிரியர்களைச் செய்யச் சொல்லி அவர்களை விரக்திக்குத் தள்ளுவது தான். அரசுப் பள்ளிகளின் இந்த நிலையின் தாக்கம் +2 நடத்தும் முதுகலைப் பட்டப் படிப்பு ஆசிரியர்களிடம் தென்படும். அவர்கள் பல சமயம் ஆனது ஆகட்டும் என்னும் கையறு நிலைக்குப் போய் விடுவர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் ஒரு பாடத்தில் குறைந்தால் அந்த ஆசிரியரிடம் விளக்கம் கேட்பதில் துவங்கி ஓரிரு வருடம் அதே நிலை நீடித்தால் ஒழுங்கு நடவடிக்கை வரை போகும் அபாயம் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் தேர்ச்சி சதவிகிதம் 100% தான். (வருட நடுவிலேயே தேற மாட்டார் எனக் காணும் மாணவர்களை அனுப்பி விடும் நிறுவனங்கள் பல).
இதில் ஒரு திடுக்கிடும் தகவலும் உள்ளடங்கி இருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் +1 என்ற பாடத் திட்டத்தை நடத்துவதே கிடையாது. ஏனெனில் +2 அரசுத் தேர்வில் கேள்விகள் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தை ஒட்டித்தான் வரப் போகின்றன. இதன் பின் விளைவு என்ன? இதனால் என்ன பாதிப்பு? அடுத்த பகுதியில் காண்போம்.