பழைய துணி- சிறுகதை


சிறுகதை

பழைய துணி (கனவு இதழில் வெளி வந்தது)

சத்யானந்தன்

சுருதி பிசகிய நாதஸ்வரம் போல் அந்தக் குழந்தை அழுதது. அழ ஆரம்பித்து வெகு நேரம் ஆகி இருக்க வேண்டும். மொபைலின் நான் பேசி முடித்ததும் என் கவனத்தை ஈர்த்தது. நேற்றே வரவேற்பு முடிந்து விட்டது. திருமண மண்டபத்தில் எங்களைப் போன்ற நெருங்கிய சொந்தங்களே எஞ்சி இருந்தோம். ‘இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பலாங்க’ என்ற சுமதியை வெகு நேரமாய்க் காணவில்லை. என்னுடைய ‘ஏடிஎம்’ கார்டைப் பயன் படுத்தி பணம் எடுக்க வேண்டும். என்னிடம் இருந்த பணத்தை என் மகன் வாங்கிக் கொண்டு பெங்களூருக்குப் போய் விட்டான். வெளி நாட்டிலிருந்து சுமதியின் தம்பி அவளது மொபைலில் அழைத்துப் பேசினான். அதன் பிறகு அவளைக் காணவில்லை என்பதே உண்மை. மண்டபத்தில் பிளாஸ்டிக் நாற்காலிகளை அடுக்க ஆரம்பித்து விட்டார்கள். எங்கே போய் விட்டாள் சுமதி? ‘ஏடிஎம்’மில் பணம் எடுப்பது சுளுவான வேலை இல்லை என்பது தேவையான போது பணம் எடுத்து நொந்தவர்களுக்குத் தெரியும். அதனால் நான் எப்போதும் இரண்டு ஏடிஎம்களை மனதில் வைத்து முயலுவேன். ஒன்றில்லையென்றாலும் முயற்சியில் மனம் தளராமல் அடுத்ததற்குப் போய் விடலாம். சுமதியைத் தேட ஆரம்பிக்காமல் முதலில் பணம் எடுக்க முடிவு செய்தேன். மண்டபத்தின் அருகே ஒரு ‘ஏடிஎம்’ இருந்தது. நல்ல நேரம். பணம் எடுக்க இயன்றது.

மாடியில் எங்களுக்குத் தங்குவதற்கு ஒதுக்கியிருந்த ஹாலில் எங்களது பெரிய துணிப் பெட்டி திறந்து கிடந்தது. அதன் அருகில் உட்கார்ந்தபடி எதையோ தேடிக் கொண்டிருந்தாள். ‘மொபைலை பெட்டிக்குள்ளே எங்கேயோ வெச்சேன்’. என் மொபைலில் இருந்து அவள் எண்ணை இணைத்தேன். ஒரு ஹிந்திப் பாட்டின் வாத்திய ஒலி கேட்டது. உடனே ஒலி வந்த இடத்தின் மேலே இருந்த புடவைகள் பாலிதீன் பைகள் இவற்றை விலக்கி மொபைலை எடுத்து மலர்ந்தாள்.

மண்டபத்தை விட்டு எங்கள் கார் புறப்பட மேலும் ஒரு மணி நேரம் ஆனது.

இன்னும் அரை நாள் பாட்டுக்கு அலுவலகம் போக மனமில்லை. மதிய நேரத்தில் கூட போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. விருகம் பாக்கத்திலிருந்து பாலவாக்கத்தில் எங்கள் வீட்டுக்குப் போகவே ஒரு மணி நேரம் கண்டிப்பாக ஆகி விடும். வீடு சென்றதும் குளிர் சாதனத்தை இயக்கி கண் அயர வேண்டும். இரண்டு நாளாக சரியான தூக்கமில்லை. வீட்டிற்குள் நுழையும் முன் கார் டிக்கியிலிருந்த எல்லா பொருட்களையும் நினைவாக எடுத்துக் கொண்டேன். இல்லையேல் நான் தான் மாடிக்கும் கீழ் தளத்திற்கும் ஓட வேண்டும்.

மாலை ஐந்து மணி சுமாருக்கு என்னை சுமதி தூக்கத்திலிருந்து எழுப்பினாள். ‘வேலைக்காரி இன்னும் வரவே இல்லை’ என்றாள். ‘என்னை எழுப்பிச் சொல்லுற அளவுக்கு அது முக்கியமா?’ என்றேன். “நாலைந்து நாளாவே வரல” என்றாள். என் எரிச்சலைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். “வண்டி சாவி எங்கே?” என்றாள். ‘என் சட்டைப் பையிலிருக்கும் ‘ என்று திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

அரை மணி நேரத்துக்கு மேல் எழுந்து விட்டேன். சுமதி வண்டியில் எங்கேயோ போயிருக்க வேண்டும். காலை செய்தித்தாள் இப்போது தான் கண்ணில் பட்டது. ஆழ்ந்தேன்.

திடீரென நினைவு வந்து மொபைலை எடுத்துப் பார்த்தேன். நான்கு அழைப்புக்கள். அதில் கடைசியாய் இருந்தது என் மனைவியினுடையது. அழைத்தேன்.

“இப்போ எங்கே இருக்கே?”

“மைலாப்பூர்ல”

“என்னாச்சு?”

“பிறகு சொல்றேன். வேலைக்காரி வந்தாளா?”

“இல்லை”

“இன்னும் அரை மணியில வரேன்”. இணைப்பைத் துண்டித்து விட்டாள். எனக்குக் கொஞ்சம் கலவரமாயிருந்தது. சுமதிக்கு உடம்பு சுகமில்லையோ? வேலைக்காரி வருவதும் வராததும் ஏன் இவ்வளவு முக்கியமானது? ஐந்து நிமிடம் கழித்து மறுபடி சுமதி மொபைலில் வந்தாள். “உங்க சொந்தக் காரங்க யாராவது ஒரு மாசத்துக்குள்ளே யூஎஸ் போவாங்களா? ”

“கேட்டுப் பாக்கறேன்”. யூ எஸ் சென்று வரும் உறவினர் எனக்கு சென்னையில் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அனேகரிடம் தொடர்பில்லை. ஆனால் என் தங்கை அவர்களிடம் மிகவும் புகழ் பெற்றிருந்தாள். அவளிடம் நான் கேட்டு சுமதிக்கு பதில் சொல்ல இயலும். என் தங்கையை போனில் அழைத்தேன் “எப்படிம்மா இருக்கே?” என் உடல் நலம் பற்றி அவள் விவரமாக விசாரித்தும் “சமீபத்தில யாராவது யூஎஸ் போவாங்களாம்மா?”

“சரவணன் அண்ணன் போறாரு”

“என் மச்சானா?”

“ஏண்ணே..நம்ம பெரிய மாமா பையனும் சரவணன் தானே. அண்ணி வழி சொந்தம் மட்டுந்தான் நினைவில இருக்கா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. எப்பப் போறாரு?”

” ஒரு மாசதுக்குள்ளேதான். கேட்டுச் சொல்றேன்”. அழைப்பு அத்துடன் முடிந்தது.

சுமதி எதற்காக யூஎஸ் போகும் ஆளைத் தேடுகிறாள் என்பது இன்னும் பிடிபடாமலேயே இருந்தது.

அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்தேன். வேலைக்காரி. ‘அம்மாகிட்டே இதைக் கொடுக்கணும்’ என்று ஒரு பாலிதின் பையை நீட்டினாள். உள்ளே ஏதோ துணி. வேலையை முடித்து அவள் கிளம்பும் வரை நான் காத்திருக்கவில்லை. அவளிடம் சாவி இருந்தது. வெளியில் போகும் வேலை நினைவுக்கு வர கிளம்பினேன். இரண்டு கார்கள் இருந்ததால் நானோ என் மனைவியோ வெளியில் சென்று வருவது அவ்வளவு பிரச்சனையானதாக இருக்கவில்லை. போகும் வழியில் ‘இன்னும் இரண்டு வாரத்தில் சரவணன் யூஎஸ் செல்கிறார்’ என்று என் தங்கை ‘எஸ் எம் எஸ்’ அனுப்பியிருந்தாள். அதை அப்படியே என் மனைவிக்கு ‘ஃபார்வர்ட்’ செய்தேன். சுமதி மறுபடியும் இதைப் பற்றிப் பேசும் இடைவெளியில் நான் இதை மறந்தே போய் விடவோ இல்லை சமீபத்தில் இருவருமே பேசாமல் இருக்கவோ வாய்ப்பிருந்தது.

அதே தான் நடந்தது. இரவு நான் திரும்புவதற்குள் கதவை உள் பக்கம் பூட்டிவிட்டு சுமதி தூங்கி இருந்தாள். உணவு மேசையில் எனக்கான உணவு தவிர ‘கந்தர் சஷ்டிக் கவசம், சண்முக கவசம், வினாயகர் அகவல் என்னும் ‘சிடி’க்கள் இருந்தன. இவையும் இன்னும் பல பக்தி சிடிக்களும் எங்கள் வீட்டில் ஏற்கனவே இருப்பவை அனேகமாக இதெல்லாம் சுமதியின் தம்பிக்காகத் தான் வாங்கப் பட்டிருக்க வேண்டும்.

காலையில் நான் எழுந்த போது உணவு மேசையில் ‘கோயிலுக்குப் போகிறேன்’ என்ற குறிப்பு இருந்தது. அருகே அவள் தம்பி பெயர் எழுதிய ஒரு பெரிய ‘பேப்பர் பிரவுன் கவர்’ இருந்தது. அதற்குள் அந்த மூன்று சாமி ‘சிடி’க்களும் வேலைக்காரி கொடுத்த பாலிதீன் பையும் இருந்தன. பாலிதீன் பைக்குள் கைக்குழந்தைக்குப் பொருந்துமளவிலான பொத்தான் ஏதுமில்லாத நாடாவில் முடி போடும் சின்னஞ் சிறிய சட்டைகள். அலுவலகத்திலிருந்து தங்கையை அழைத்து சரவணனிடம் ஒப்படைக்க எண்ணி எடுத்துச் சென்றவன் பிற வேலைப்பளுவில் இந்த வேலையை மறந்து விட்டேன். காலை மணி பதினொன்று இருக்கும். சுமதிக்கு என நான் சேமித்து வைத்திருந்த இசையொலியில் மொபைல் ஒலித்தது. “யாருக்கு ‘பேக்கிங்’னு கண்டுபிடிச்சீங்களா?” “அதான் மேலேயே பேரை எழுதி இருக்கியே” “அவனுக்கு அடுத்த மாசம் குளந்தை பொறக்குது. முதலா போடறப்போ பளைய துணிதானே போடணும்” . சுமதியின் அண்ணனை ஒப்பிட அவள் தம்பி மிகவும் பாரம்பரியத்தில் ஈடுபாடு உள்ளவன். “யாரு கிட்டே பளைய துணி கிடைச்சிது?” “நம்ப சொந்தம் யாருக்கும் இப்போதைக்கிக் குழந்தை பிறக்கல. கடைசியிலே வேலைக்காரி தான் கை கொடுத்தா. ” இப்போதுதான் அவள் வேலைக்காரியை விடாப்பிடியாகத் தேடிய காரணம் புரிந்தது. “உடனே உங்க பியூன் கிட்டே கொடுத்து சரவணன் கிட்டே அனுப்பி வையிங்க. மறந்திடாதீங்க.” தேடிய போதுதான் ப்யூன் ‘பாரிஸ் கார்னர்’ வரை ஆபீஸ் வேலையாகப் போயிருப்பது தெரிந்தது. மறுபடி வேலைப் பளுவில் அவனைத் தேடாமல் விட்டு விட்டேன்.

மாலை காபியைக் கையில் கொடுத்த படி “சரவணனுக்கு போன் பண்ணினேன். அவன் யூஎஸ்ஸே போகலியாமே? துணியும் வரலையின்னான். கொடுத்து அனுப்பலியா நீங்க?”

“எங்க மாமா பையன் சரவணனைத்தானே நான் சொன்னேன்”

“அனுப்பி வெச்சிட்டீங்களா அவுரு கிட்டே?”

“இல்லம்மா. இன்னிக்கி நடக்கல. நாளைக்கி அனுப்பிடறேன்.”

“வேணாஞ்சாமி. அனுப்பிடாதீங்க. உங்க சரவணன் பெண்டாட்டி மலடி. வேற யாரையாவது நானே பாத்துக்கறேன்”

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பழைய துணி- சிறுகதை

  1. ramya says:

    veri nice story sathyanandhan

  2. கடைசி வரி கொஞ்சம் கொடுமை:(
    மற்றபடி கதை நல்லா இருக்கு. ஆமாம்….. எந்த வீட்டில் வேலைக்காரி கொடுக்கும் துணிகளைப் பயன்படுத்திக்கறாங்க??!!!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s