மீன் தொட்டி -சிறுகதை


சிறுகதை

மீன் தொட்டி

சத்யானந்தன்

“உனக்கு கால் பந்தாட்டத்தில் ஆர்வமில்லையா?” என்றான் ரமேஷ் ஆங்கிலத்தில்

காரை ஓட்டியபடியே அவ்வப்போது தலைக்கு மேலே ஓடும் ‘யூரோ கப்’ ஆட்டத்தை அவன் அவதானித்து வந்த போதும் நான் வெளியே பார்த்தபடி இருந்ததே கேள்விக்குக் காரணம். “உன்னளவு ஆர்வம் இல்லை” என்றேன்.

“நான் கல்லூரியில் நான்கு வருடங்களும் விளையாடி பெயர் பெற்றேன். ரமேஷ் அகர்வால் பெயர் இடம் பெறாத குழு இருந்ததே இல்லை. அலுவலகத்தில் என்னைத் தவிர எல்லோருமே அவன் அளப்புக்களை புறக்கணிப்பார்கள். நானும அவனும் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். நான்கு சக்கர வாகனத்தை மாற்றி மாற்றி உபயோகிக்கும் எண்ணம் உதித்தது அவனுக்கு.

“எங்கே போக வேண்டும் என்றாய் கஸ்தூரிபாய் நகரா?”

“இல்லை. சாஸ்திரி நகர்”

“பழைய மகாபலிபுரம் சாலையில் இப்போது வாகனங்கள் மிகுந்து விட்டன. இந்த ஒரு வருடத்துக்குள் நானே காண்கிறேன்”

பல தருணங்களில் நான் என்னுடைய நான்கு சக்கரத்தை எடுத்து வருவதே நல்லது என நினைத்திருக்கிறேன். மது அருந்திய பின் அவனுக்குப் பெற்றோரை எதிர் கொள்ளும் அவசியமில்லாதவன். அதனாலேயே நான் இரவு வெகு நேரம் கழித்தே நான் செல்ல நேருகிறது. வழியில் இன்று நான் முடிக்க வேண்டிய வேலை அவனுக்குப் பிடித்திருக்க வாய்ப்பில்லை.

“நேராகவா இல்லை இடது புறமா?” என்றான். திருவான்மியூர் நாற்சந்தியில் வலது திருப்பம் தடை செய்யப் பட்டது.

என் சைகையை ஒட்டி வண்டி நகர்ந்தது. சாஸ்திரி நகரில் அந்தக் குடியிருப்பு ஐந்தாவது குறுக்குத் தெருவா? ஆறாவதா? என் சட்டைப் பையில் துழாவி குறித்து வைத்திருந்த சீட்டை எடுத்தேன். அவனோ வண்டியை ஓரமாக நிறுத்தி ‘மொபைலி’ல் யாரோடோ பேச ஆரம்பித்து விட்டான்.

சற்றே இருட்டியிருந்தது. நடந்து சென்று அது ஆறாவது குறுக்குத் தெரு தான் என்று உறுதி செய்து கொண்டேன். கையசைத்து அவனை அழைக்க எண்ணினால் அவன் என் பக்கம் திரும்பாமலேயே பேசிக் கொண்டிருந்தான்.

ஒரு இடத்துக்கு வேறு ஒருவர் , நன்கு வழி தெரிந்தவருடன் முதல் முறை வந்திருந்தால் மறுபடி அங்கே வரும் போது தடுமாற வேண்டி வருகிறது. நான் தெருவின் இந்த முனையில் அந்தக் குடியிருப்பைத் தேட வேண்டுமா இல்லை மறு முனையிலா? ரமேஷ் அடித்த ‘ஹாரன்’ சத்தம் என்னை ஈர்த்தது. ‘அருகில் வா’ என கையசைத்தான். நெருங்கியதும் “வண்டியில் ஏறு . உன்னை இறக்கி விடும் இடத்தைப் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு உள்ளாடை வாங்க இந்த அளவு நேரம் தேவை. நான் வாங்கி விட்டு உன்னை மொபைலில் அழைக்கிறேன்”

நான் மறுபடி காரில் அமர்ந்து இருமருங்கும் நோட்டம் விட்டபடி இருந்தேன். மஞ்சள் நிற இரண்டுமாடிக் கட்டிடம் கண்ணில் பட்டு விட்டது. “இதன் வாயிலில் இறங்கிக் கொள்கிறேன்.”

ரமேஷ் அந்தக் குடியிருப்பின் வாயிலைத் தாண்டி நிற்பதற்குள் அதிலிருந்து வெளியே வந்த லாரி நான் வந்த காரின் பின்பக்கத்தை உரசி பேரிரைச்சலுடன் நின்றது.

கதவைத் திறந்து இறங்கி கதவை அறைந்து சார்த்தி விட்டு காரின் பின்பக்கம் ஓடினான் ரமேஷ். நானும் பரபரப்புடன் பின் தொடர்ந்தேன். காரின் பின் பகுதியில் பெரிய கீறல் விழுந்திருந்தது. லாரியின் டிரைவர் அருகிலுள்ள கதவை ஓங்கிக் குத்தியபடி ஆங்கிலத்தில் “இறங்கு கீழே” என்று கத்தினான் ரமேஷ்.

“டேய் இன்னா? நான் ஹெட் லைட் சிக்னலு குடுத்துக்கினுதானே வரேன்? அவ்ளோ அவசரமா ஓட்டி உசுரோட வர்றியே அத்தே பெர்சு” என டிரைவர் கத்தினான்.

அந்த வளாகத்தின் ஐம்பது வயது மதிக்கத் தக்க சீருடை அணிந்த காவலாளி சட்டென ரமேஷின் தோளைத் திருப்பி ஹிந்தியில் “நகரு. லாரியைப் போக விடு “ என்றார். அவர் கையை ஓங்கித் தள்ளிய ரமேஷ் அவருடைய சட்டையைப் பிடித்து “ இந்தக் காரின் விலை என்ன தெரியுமா உனக்கு?” என்று கத்தினான்.

“நாயே. மிலிட்டிரிக் காரன் சட்டையையா பிடிக்கிறே? உங்க அக்காளை…” ஹிந்தியில் அவர் பதிலுக்குக் கத்தினார்.

நான் சுதாரித்துக் கொண்டு அவனுடைய கையைப் பிடித்து இழுத்தேன். அவன் என்னை ஒதுக்கி விட்டு லாரியின் முன் போய் நின்றான். அதன் வெளிச்சம் அவனது ஆக்ரோஷத்தை அதிகப் படுத்திக் காட்டுவது போல இருந்தது. “வாட்ச் மேன்” அவனைப் பிடித்துத் தள்ளிய வேகத்தில் அவன் காரின் மீது இடிந்து சரிந்து விழுந்தான். லாரி முன் நகர்ந்து திரும்பியது. ஹிந்தியில் பல வசவுகளுடன் ரமேஷ் எழுந்த போது, பிச்சுவா கத்தியை உருவி எச்சரிக்கை செய்யும் விதமாக அசைத்தார் காவலாளி. இரண்டு மூன்று பேர் ரமேஷை இழுத்தனர். நான் கார் கதவைத் திறந்து “தயவு செய்து நீ கிளம்பு” என்றேன். கிட்டத்தட்ட ஏனையர் அவனை உள்ளே தள்ளினர். வண்டியைக் கிளப்பி சற்று அதிக வேகத்துடன் அவன் ஓட்டிச் சென்றான்.

இப்போது ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்திருந்தது. ராணுவ வீரன் ரத்தம் பார்க்காத் கத்தியை உறையில் வைப்பது குறித்து அவர் வருந்திப் பேசிக் கொண்டிருந்தார். அந்தக் குடியிருப்பில் சிலர் ஜன்னல் வழியேயும் சிலர் பால்கனியிலிருந்தும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் செல்ல வேண்டிய இடம் முதல் மாடியில் இருந்தது. மெதுவே உள்ளே நகர்ந்தேன்.

என் மனம் சற்றே பதட்டம் அடைந்திருந்தது. இத்தைகைய பதட்டத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளில் அவன் ஈடுபடுவது முதல் முறையல்ல.

F2 என கதவு எண்ணை சரி பார்த்து சாவியைப் போட்டுத் திருப்பினேன். ‘மன்னிக்கவும்’ நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒரு பெண்ணின் குரல். திரும்பினேன். நடுவயதுப் பெண்மணி. ‘ஹவுஸ் கோட்’ அணிந்திருந்தார். “நேற்று என் தொலைபேசி அழைப்பை ஏற்றது நீங்களா?” வினவினார். “ஆமாம்” “ஏன் இடையிலேயே பேச்சை முறித்தீர்கள்?” “ நான் ஒரு அவசரப் பணியிலிருந்தேன். அதான் நீங்கள் உடனடி வரச் சொன்னதைப் புரிந்து கொண்டு இன்றே வந்து விட்டேனே. என்ன பிரச்சனை?”

“நீங்களே கதவைத் திறந்து பாருங்கள்” என அவர் தன் வீட்டுக் கதவை அறைந்து மூடிக் கொண்டார்.

கதவைத் திறந்த உடனேயே கடுமையான துர்நாற்றம் தாக்கியது. செத்த மீன் வாடை. ஒரு நிமிடம் வெளியே வந்து சுதாரித்து மீண்டும் உள்ளே நுழைந்தேன். மின் வெளிச்சத்தில் ஹால் சமையலறை, படுக்கையறை, குளியலறை எல்லா இடத்தையும் பார்த்தேன்.

பால்கனியில் இருந்தது அந்த மீன் தொட்டி. பல வண்ண மீன்கள் செத்து மிதந்தன. 3X3X3 என்னும் அளவில் பால்கனியில் பாதி இடத்தை அது அடைத்துக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டு பால்கனியில் நிழலாடியது. அதே அம்மாள். உடனடியாக இதை எடுத்துச் செல்லுங்கள். மூன்று நாளாகத் தாங்க முடியவில்லை” . மறைந்தார். பால்கனிக்கு ‘கிரில்’ இருந்தது. இல்லையேல் பல பறவைகள் இந்த மீன்களைத் தேடி வந்திருக்கும். தொட்டியை அசைப்பதே மிகவும் கடினமாக இருந்தது. வேறு ஒரு ஆளின் துணை வேண்டும். காவற்காரரிடம் சொல்லாமல் நான் உள்ளே வந்ததே தவறு. இதில் மற்றொருவனை அழைத்து வந்தால்? முதலில் காவற்காரரை சந்தித்து வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

தானே பூட்டிக் கொள்ளும் கதவை அறைந்து சார்த்தி விட்டு கீழே விரைந்தேன். என் அறிமுகம் முடியும் முன்பே “வயசானவன், மிலிட்டிரிக்காரன்னு கூட பாக்காம என்னவெல்லாம் பேசிட்டான் நாயி..” அவர் கண்கள் கலங்கின. நான் நிறையவே மன்னிப்புக் கேட்டேன். அவர் உதவினால் நாங்கள் இருவரும் தொட்டியை நகர்த்தலாம் என்றேன். கொஞ்சம் இருக்கும்படி சைகை காட்டி விட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆளுடன் வந்தார். மூவரும் மேலே சென்றோம். அந்த வீட்டு சொந்தக்காரர் சர்மா மிகவும் பண்பான இளைஞர். அவர் மனைவி பேறுக்காக சென்றிருக்கும் போது அவசரமாகக் காலி செய்து வெளிநாடு சென்ற சர்மா ஏனோ இதை மறந்து விட்டார். சர்மாவுடன் ரமேஷை ஒப்பிட்டு ரமேஷை சபித்தார் காவற்காரர். மீன் தொட்டியோடு நாங்கள் வெளியே வந்த போது வேறு ஒரு வீட்டுக் கதவிலிருந்து வெளியே வந்தார் ஒரு பெரியவர். அரை டிரவுசர், டீ ஷர்ட். “என் மகளுக்கு இந்த வீடு தேவை. கிடைக்குமா?” “சர்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்.” “உங்கள் விசிட்டிங் கார்டு கிடைக்குமா?” . கொடுத்தேன்.

அதற்குள் மீன் தொட்டியுடன் ஏனைய இருவரும் கீழே போயிருந்தார்கள். பிரதான வாயிலருகே வந்தேன். சர்மா தொட்டியை என்ன செய்யச் சொன்னார் என்றார் காவற்காரர். ‘யாருக்காவது கொடுத்து விடுங்கள். உங்கள் உதவிக்கு நன்றி” என்று கூறி விட்டு நூறு ரூபாய்த் தாளை நீட்டினேன். வாங்கிக் கொண்டார். “பொறுங்கள். ஆட்டோவை அழைத்து வருகிறேன்” என்று விரைந்தார்.

இரவு உணவு வரை ஏனோ ரமேஷைக் கூப்பிடத் தோன்றவில்லை. “நாளைக்கி நீ நம்ப கார்ல தானே போற?” என்று அப்பா கேட்ட போது ரமேஷின் நினைவு வந்தது.

அவன் குரலில் சற்றே போதை தெரிந்தது. “பயந்து விட்டாயா? இவனுகளுக்கு இதெல்லாம் போதாது” என்றான். சிறிய விஷயம் இது என்றால் ஏற்கவில்லை. “நீ எந்த வேலையாகப் போனாய் என்றான் . விளக்கினேன். “எந்த சர்மா அவன்?”

“அரவிந்த் சர்மா”

” உன்னுடைய பயோ டேட்டாவை வைத்து தன் ஆங்கிலத்தில் நல்ல ரெஸ்யூமே எழுதி சிங்கப்பூரிலேயே வேலை வாங்கித் தருவதாகச் சொன்னானா?”

“இல்லையென்றால் நான் செய்ய மாட்டேனா?”

“இந்தக் கதையே வேண்டாம். அவன் என்ன சொல்லி வீட்டு சாவியைக் கொடுத்தான். எனக்கு அவனை நன்றாகத் தெரியும்”

“வேறு விஷயம் பேசுவோம்” என்று உரையாடலை திசை திருப்பினேன்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s