tamil, tamil short story, modern tamil literature
சிறுகதை
பொன்னாடை
சத்யானந்தன்
“பஸ் ஸ்டாண்ட் சிக்னல்” தாண்டிய பிறகு தான் பொன்னாடையை எடுத்து வர வில்லை என்று நினைவுக்கு வந்தது. அந்த இடத்திலிருந்து அவனுடைய அறை ஒரு கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால் ஒரு வழிப் பாதை என்று ஒழுங்கு செய்த பிறகு மூன்று கிலோ மீட்டர் சுற்றி வரும் படி ஆக்கி விட்டார்கள். தேவை இருக்கிறதோ இல்லையோ வாகனங்களிலிருந்து காதை செவிடாக்கும் ஒலி. முன்னும் பின்னும் விரையும் வாகனங்களின் பதட்டம். வெளியே வந்தாலே தாக்கும் வெய்யிலும் பெருகும் வியர்வையும். இந்தப் பத்து வருடங்களில் இவை அனைத்தும் பழகி விட்டன. ஆனால் எரிச்சலூட்டுகின்றன.
பஸ் ஸ்டாண்டை ஒட்டிய நடை மேடையில் பெரிதும் வண்டிகள், தட்டுகள், கூடைகள் என கடைகள். அவற்றுள் இருந்த ஓரிரு இடைவெளிகளில் ஒன்றில் வண்டியை நிறுத்தி தன் அறைக்கு நடக்க ஆரம்பித்தான்.
முதல் நாள் சனிக்கிழமை. பின்னிரவு வரை மது அருந்தி விட்டு ஒவ்வொருவராய் நண்பர்கள் புறப்பட்டனர். கடைவீதியில் மாத வாடகைக்கு அறை எடுப்பதில் உள்ள பல வசதிகலில் இது ஒன்று. குடித்தனக்காரர்கள் என்றால் ஒரு வருகைப் பதிவேடு வைத்து வருவோர் போவோர் விவரம் எடுத்து வருவதும் போவதுமே தவறு என்று தொடங்கி எந்தக் கொண்ட்டாட்டடுமே இல்லாமல் செய்து விடுவார்கள்.
நடக்க நடக்க வியர்வை அதிகரித்தது. கோயிலை ஒட்டி குளக்கரையில் அடுத்தடுத்து இரு திருமண மண்டபங்கள். வாகனங்களும் மனிதர்களும் தாம் வழி மறிப்பது குறித்து எந்த வருத்தமும் இன்றி அந்த சந்தில் குழுமியிருந்தனர். அந்த சந்தின் முனையில் தான் அவனது அறை இருக்கிறது.
அறையில் நுழையும் போது ‘மொபைல்’ ஒலித்தது. வளர்மதி. வழக்கமாக விடுமுறை நாட்களில் அவளிடமிருந்து அழைப்பே இருக்காது.
“என்ன அதிசயமா ஹாலிடேல கூப்பிடற?”
“அப்பா அம்மால்லாம் ஏதோ கல்யாணத்துக்குப் போயிருக்காங்க”
“நானும் ஒரு வேலையா வெளியில கிளம்பிக்கிட்டிருக்கேன்”
“சன்டே கூட அப்பிடி என்ன வேலை?”
“அப்ப நான் வெக்கணுமா?” அவளது குரலில் தன்னிரக்கம் தென்பட்டது.
கடந்த ஒரு மாதமாக அனேகமாக அவள் அழைக்கும் போது அதைத் தொடர்ந்து பேச இயலாதபடிதான் அமைகிறது. அலுவலகம் அவனை அதிகப்படியாக விரட்டுகிறதா இல்லை அவனே அந்த வேலைப் பளுவில் ஒளிந்து கொண்டு விட்டானா என்று பிரித்தறிய இயலவில்லை. “அம்மா காலமானதால தான் நீ என் கிட்டே பேச மாட்டேங்கறியா? ஒரு ஆறுதலா கூட நான் பேசக் கூடாதா?”
அறையின் ஒழுங்கின்மை நேற்று இரவு ஒரு புதிய இலக்கை எட்டியிருந்தது. திரும்பி வந்ததும் ஏதேனும் செய்ய வேண்டும். ‘கோ ஆப்டெக்ஸி’ல் நேற்று மாலை பொன்னாடை வாங்கினான்.அந்த ‘ப்ளாஸ்டிக்’ பொட்டலத்தைத் தேடினான். மேசை இழுப்பறையில், சுவர் அலமாரியில், துணிகளுக்கு நடுவே எங்கும் இல்லை. கட்டிலுக்குக் கீழே பார்த்தான். சுவரை ஒட்டிய இடத்தில் கிடந்தது, நேற்று வந்தவர்களில் எவனோ கட்டிலில் அமர்ந்தபடி அதை சுவர்ப்பக்கமாகத் தள்ளி இடுக்கு வழியே அது விழுந்திருக்க வேண்டும்.
கதவைப் பூட்டும் போது பக்கத்து அறைப் பெரியவர் “நியூஸ் பேப்பர் வந்ததா?” என்றார். நான் கொஞ்ச நாளா பேப்பர் வாங்கறதில்லே” என்றான்.
அடையாரை நெருங்க நெருங்க அமைச்சரின் உருவப் படத்துடன் பல கார்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் தென்பட்டன. அமைச்சரின் பிறந்த நாள். அவர் வீட்டுக்குத் தொலைவிலேயே அவன் வண்டியை நிறுத்த வேண்டி வந்தது.
அமைச்சரின் வீட்டைச் சுற்றி நிறைய வண்டிகள். காவல்துறையினரால் ஒழுங்கு செய்ய இயலாதபடி கூட்டம் அலை மோதியது. சிரமப்பட்டுத்தான் உள்ளே நுழைந்தான்.
நேற்று இரவு அப்பா அழைத்த போது மது தன் பணியைச் செய்யத் துவங்கியதால் அவன் “சொல்லுங்கப்பா..” என்றான். நண்பர்களின் குரல் கேட்டு அவரே ‘உன் ப்ரெண்ட்ஸோட இருக்கியா?” என்றதும் ஊம்” என்றான். அவர் ஒரு பக்கமாகக் கூறியதிலிருந்து அமைச்சர் அறிவுக்கரசு பொன்னாடை என்னும் இரு சொற்கள் மட்டுமே நினைவிலிருந்தன. அவர் நினைவு படுத்தத் தான் கூப்பிட்டிருந்தார். ஆனால் அவன் மாலையிலேயே அலுவலகத்திலிருந்து வரும் போதே வாங்கி விட்டான்.
அமைச்சரின் உதவியாளர் அறையிலும் ஒரே கூட்டமாக இருந்தது. முதலில் சற்றுத் தயக்கமாக இருந்தாலும் பிறகு அவனும் தள்ளு முள்ளு செய்து உள்ளே நுழைந்தான். அவருடைய மேசையை நெருங்கி அவரது கவனத்தை ஈர்த்ததும் தான் இன்னாரது மகன் என்றான். ‘இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வா’ என்றார். வெளியே வந்து ஒரு மரத்தடியில் நின்றான். ‘அண்ணே மொபைல் இருந்தா கொடுங்க. மிஸ்ஸ்ட் கால் குடுத்துப் பேசிக்கிவேன்’ என்று யாரோ உதவி கேட்ட போது சட்டைப் பையில் தேடினான். இல்லை. ‘பேன்ட்’ பைகளிலும் இல்லை. வழியில் விழுந்திருக்குமோ? சற்றே கலவரமாயிருந்தது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு தெருவுக்கு வந்து ஒரு கடையிலிருந்து தனது மொபைல் எண்ணுக்கு போன் செய்தான். மணி அடித்தது. கீழே விழுந்து யாரேனும் எடுத்திருந்தால் மணி அடிக்க வாய்ப்பில்லை. பொன்னாடையைத் தேடும் அவசரத்தில் வளர்மதியின் அழைப்பைப் பேசி விட்டுக் கை மறதியாய் வைத்து விட்டு வந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு உறுத்தல் இருந்தது. அறைக்குச் சென்று வருவதும் சாத்தியம் இல்லை. ஒரு மணி நேரத்தில் இவரைச் சந்தித்தாக வேண்டும். இதைத் தள்ளிப் போட இயலாது.
ஒரு சாலையோரக் கடையைச் சுற்றி கும்பலாயிருந்தது. எட்டிப் பார்த்தான். இட்டிலி வடை பொங்கல் விற்பனையாகிக் கொண்டிருந்தது. உணவை வாங்கி உண்டான். அம்மா இருந்த போது வாரக் கடைசிக்கு ஊருக்கு வரவில்லை என்றால் விசாரிப்பார். பொங்கல் அம்மா வைத்தால் மிளகும் நெய்யுமாக இருக்கும்.
ஆனால் அம்மா போல அப்பா ஏன் ஊருக்கு எப்போது வருவாய் என்று நச்சரிப்பதில்லை? அவர் பேசும் போது அது ஏற்கனவே சொன்ன வேலை அல்லது சொல்லப் போகிற வேலை என்பதற்குள் அடங்கி விடும்.
நேரம் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. இட்டிலிக் கடை அம்மாள் காலியான பாத்திரங்களை ஒரு தள்ளு வண்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார். இரண்டு வயதுக் குழந்தை ஒன்று ஒரே ஒரு இட்டிலியை வெகு நேரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அம்மா தான் சென்னைக்கு வந்து அவனுக்கு சமைத்துப் போடும் படியான வீடாகத் தேடச் சொல்லியிருந்தாள். அவன் தீவிரமாக வீடு தேடும் முன்பே போய் விட்டாள்.
ஒரு வழியாக அவர் குறிப்பிட்ட நேரம் கடந்தது. இன்னும் பத்து நிமிடம் விட்டே உள்ளே போகலாம் என நினைத்தான். திடீரென பரபரப்பு. காவல்துறை வழி ஏற்படுத்திக் கொடுக்க சாரி சாரியாய் ஏகப்பட்ட வண்டிகள் அமைச்சர் வீட்டை விட்டு வெளியேறின.
அவன் அமைச்சரின் உதவியாளரை இந்த முறை மிக எளிதாக சந்தித்து விட்டான். வந்திருந்தவர்கள் எல்லோருமே போயிருந்தார்கள்.
“இன்னிக்கி அவரோட ‘பர்த் டே’. இப்போ அவரு சொந்த ஊருக்கு கிளம்பிட்டாரு. இனிமே கும்பலிருக்காது.” உதவியாளர் தன்னிடம் நிறையவே பரிவாக இருப்பதாகத் தோன்றியது.
“ஸார் அமைச்சர் கிளம்பிட்டாரே. இனிமே எப்போ பொன்னாடையைப் போர்த்த முடியும்?”
“அவுரு வர்றதுக்கு ரெண்டு மூணு நாளாகும். எப்படியும் அவுரு வந்ததும் விவரம் சொல்லிடறேன். உங்க அம்மா நிர்வாகம் பண்ணின மகளிர் சுய உதவிக்குழுப் பொறுப்பு எல்லாத்தையும் உங்க அப்பா சொன்னபடி கற்பகம் அப்பிடிங்கறவங்களுக்கே கொடுக்க ஏற்பாடு செய்துடலாம்.”
கற்பகம் என்று குடும்ப நண்பரோ உறவினரோ அவனுக்கு நினைவுக்கு வரவில்லை.
“நிலம் ஒண்ணு பாக்கச் சொல்லி அப்பாகிட்டே சொல்லியிருந்தேன். எதிர்பார்க்கிற விலைக்குப் படியும்னா உடனே போன் போடச் சொல்லுங்க.”
“சரி என்று தலையாட்டி விட்டு அப்ப நான் கிளம்பலாமா ஸார்” என்று எழுந்தான்.
அறைக்கு வந்து மொபைல் போன் இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்பு தான் அவனுக்கு மூச்சு வந்தது.
பொன்னாடைப் பொட்டலம் புதிராய் அவன் கையில் இருந்தது. அதை இனி என்ன செய்வது?
அம்மாவின் படத்தின் மீது போட்ட பூ வாடியிருந்தது. அதை நீக்கி பொன்னாடையை அந்தப் படத்தின் மீது போட்டான். அம்மாவின் முகம் மறைந்தது. துணியை புகைப்படப் பக்கவாட்டு, பின் பக்கத்தில் ஒழுங்கு செய்து வைத்தான்.
இரவு உறக்கத்தை டமால் என்னும் சத்தம் எழுப்பியது. அம்மாவின் படமும் அது மாட்டப்பட்டிருந்த ஆணியும் பொன்னாடையுடன் சேர்ந்து கீழே விழுந்து கிடந்தன.