முகமூடி – சிறுகதை


tamil, tamil short story, modern tamil literature

சிறுகதை

முகமூடி

சத்யானந்தன்

“தாம்பரம் எறங்குறவங்க.. எறங்கு” நடத்துனரின் அறிவிப்பு கனவா நனவா என்று ஊர்ஜிதம் ஆக ஓரிரு நிமிடங்கள் ஆயின. திருச்சியில் பேருந்தில் ஏறி அமர்ந்த உடனே உறங்க ஆரம்பித்து விட்டான் பாலகுமார். பகலில் சமயபுரம், மண்ணச்சநல்லூர் நொச்சியம் திருவள்ளரை என கிராமப்புறத்து மருந்துக் கடைகளையும் மாலையில் இருந்து திருச்சி நகரில் உள்ள மருத்துவர்களில் சிலரையும் சந்தித்து மருந்துத் தேவகளுக்கான ஒப்புதல் கடிதங்களைப் பெற்றான். இதை சென்னையில் ஒப்படைப்பது அடுத்த வேலை. ‘இடமாற்றத்தை முடிவு செய்யும் மேலாளர் வருகிறார். உடனே வா’ என்னும் சுந்தரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை பேருந்தில் ஏறிய பிறகு தான்பார்த்தான்.

பால குமாரின் மனைவி உற்சாகமாக அவனது துணிகளை அடுக்கி அவனை அனுப்பும் ஏற்பாடுகளில் அவனை உள்ளூரப் பதட்டப் படுத்தி விட்டாள். சென்னை போய் முயற்சித்து திரும்பச் சென்னை போகும் இடமாற்றம் கிடைத்தால் நல்லது. இல்லையென்றால் அவள் தினசரி தொணப்பும் வாய்ப்புகள் அதிகம்.

‘கத்திப்பாரா’ கண்டக்டரின் குரல் கேட்டதும் தூக்கத்தை மீறி எழுந்து தலைக்கு மேல் பை வைக்கும் இடத்தில் துழாவித் தன் பையை எடுத்தான். கனமாயிருந்தது. தேவையோ தேவையில்லையோ ஏதேனும் ஒரு பொருளை தன் அப்பா வீட்டுக்கு என பையில் திணித்து அதன் மேல் ஒரு காகிதத் துண்டில் அப்பாவுக்கு அல்லது அம்மாவுக்கு என எழுதியும் வைத்து விடுவாள்.

கத்திப்பாராவில் இறங்கியதும் சகோதரியின் ‘மொபைல்’ எண்ணுக்கு அழைப்பை அனுப்ப முயன்றான். பிறகு தான் மணி என்ன என்று பார்க்கத் தோன்றியது. மணி ஐந்து. மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளைப் பள்ளிக்கு அனுப்ப தன் தங்கை ஆறு மணி போலத் தான் துயில் எழுவாள். மூன்று சக்கர வாகனத்தைத் தவிர்த்து பேருந்துக்காகக் காத்திருக்கத் துவங்கினான். ஒரு மணி நேரம் அவள் நிம்மதியாகத் தூங்கட்டுமே.

தங்கையின் வீடு இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாயிற் கதவுகள் திறந்திருந்தன. வழக்கமாக ஒரு பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னரே உள்ளே செல்ல இயலும். காவலர் தென்படவில்லை.

“வா அண்ணே” என சுசீலா அன்புடன் வரவேற்றாள். ஸ்ரீரங்கம் மல்லி அவளுக்குப் பிடிக்கும். அதையும் குழந்தைக்கு என ஒரு பிஸ்கட் பொட்டலத்தையும் கொடுத்தான்.

‘பல்ல விளக்கு. காபி கலக்கறேன்’ என்றாள் சுசீலா.

‘கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்கிறேன் சுசி’ என்று வரவேற்பறையில் இருந்த சோபாவில் படுத்தான்.

கண் விழித்த போது தங்கையின் கணவன் கதிர்வேலு அருகே உள்ள இருக்கையில் கையில் செய்தித்தாளுடன் இருந்தான்.

” அம்மா. மாமா எழுந்தாச்சு” என்று குதித்தாள் தங்கையின் மகள் மாலதி. சுவர் கடிகாரம் மணி எட்டு எனக் காட்டியது. குழந்தை ஸ்கூலுக்குப் போலே?” என்றபடி எழுந்தான் பாலகுமார். தங்கை கணவன் புன்னகைத்து நலம் விசாரித்தான்.

அவன் அருந்திய காலி கோப்பையை எடுத்தபடியே “அண்ணே. உனக்கு முழு நாளும் வேலை இருக்கா?” என்றாள்
“ஏம்மா?”

“மாலதியை மத்தியானம் டிவி ஸ்டேஷனுக்குக் கூட்டிப் போவணும். அவுங்களுக்கு லீவு கிடைக்கல. அவுங்க பஸ்ஸுல போயிருவாங்க. நீ ரெண்டு மணிக்கு இங்கே வந்தீன்னாக்கூடப் போதும். ”

சரி என்று தலையாட்டினான் பால குமார். தனது இடமாற்றம் பற்றி முடிவு செய்யும் மேலாளர் பேட்டி காலையிலேயே கிடைத்தால் நல்லது. எப்படியோ அலுவலகம் போய் வர இரு சக்கர வாகனம் கிடைத்து விட்டது.

அவன் சரியாக பத்து மணிக்கு அலுவலகத்தில் நுழைந்து விட்டான்.

சுந்தர் அவன் வந்ததைக் கண்டு கொள்ளவேயில்லை. பாலகுமாருக்கு அதன் காரணம் தெரியும். நேரடியாக அணுகுவதால் பலன் கிடைக்கும் என்பது ஒரு காரணம். மற்றொன்று சுந்தர் மூலம் விவரங்கள் வெளியாவது ரகசியமாக இருக்க வேண்டும்.

பாலகுமாரின் நல்ல நேரம். பதினோரு மணிக்குள்ளாகவே மனித வள மேலாளரை சந்தித்து விட்டான். அவர் ஆவன செய்வதாகச் சொன்னார். அவர் எல்லோருக்கும் எப்போதும் சொல்லும் பதிலும் அது தான்.

சுந்தரை நலம் விசாரிப்பது போல் சந்தித்தான். ” அனேகமாய் கிடைச்சிடும்” என்றான் சுந்தர்.

பன்னிரண்டரை மணிக்கு அவன் தங்கை வீட்டுக்குள் நுழைந்ததும் மாலதி துள்ளிக் குதித்தாள் ” அம்மா. மாமா வந்தாச்சு.கிளம்பலாமா?”

“இருடி. முதலில் அவரு சாப்பிடட்டும். நீயும் சாப்பிடு”

பாலகுமாருக்கு தனது வேலையும் காலையில் முடிந்து தங்கைக்கும் எதாவது மதியம் செய்ய இயன்றது மகிழ்ச்சியாயிருந்தது.

வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு பொறியல் அவனுக்குப் பிடித்த வகைகளை அவனது தங்கை செய்து வைத்திருந்தாள். இரண்டு கவளம் இறங்கியதுமே வயிறு குளிர்ந்தது போல இருந்தது. அந்த நேரம் பார்த்து ‘மொபைல்’ அடித்தது.

கண்ணன். எந்தக் கண்ணன்? தெரியாததால் சாப்பிடுவதைத் தொடர்ந்தான். இப்போது தங்கை மற்றும் குழந்தையுடன் வெளியே போய் வரும் நிகழ்ச்சி நடந்தேற வேண்டும். வழக்கமாக ஒரு ஆளின் பெயரை சேமிக்கும் போது அவரது தொடர்பு அல்லது நிறுவன விவரத்தையும் சேர்த்து குறித்து வைப்பான். இதில் ஏனோ அப்படி செய்யவில்லை. சமீபத்தில் பேசியது போல நினைவில் இல்லை.

“கொஞ்சம் சோறு வக்கட்டா?” தங்கையின் குரல் அந்த நினைவு படுத்தும் முயற்சியை நிறுத்தியது.

சுசீலாவும் குழந்தையும் உடுத்தித் தயாராக இருந்தார்கள். இரண்டு சக்கர வாகனம் நகரும் போது ‘எங்க போவணும்?’ என்றான்.

“மந்தவெளியில தான அந்த டிவி ஸ்டேஷன் இருக்கு. நாம மைலாப்பூர்ல ஒரு ‘மாஸ்க்’ வாங்கிக்கிட்டுப் போவணும்”. கிண்டி மேம்பாலத்தைத் தாண்டும் போது மறுபடியும் மொபைல் ஒலித்தது. “யாருன்னு கேளு” என்று தங்கையிடம் கொடுத்தான். “நான் அவுரு தங்கச்சி பேசுறேன். வண்டி ஓட்டிக்கிட்டிருக்காங்க. பிறகு கூப்பிடுவாங்க.” “கண்ணன்னு சொன்னாரு” என்றாள்.யார் இந்தக் கண்ணன் ? நான் சென்னை வருவேன் என்று தெரிந்து கூப்பிடுகிறாரா?

மைலாப்பூரில் ஒரு பெரிய வணிக வளாகத்திற்கு சுசீலா அழைத்துப் போனாள். குழந்தைகளுக்குத் தேவையான ஆயத்த ஆடைகள், பொம்மைகள், பெண் குழந்தைகளுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், காலணிகள் என நிறைந்திருந்தன

‘முயல் முகம், வெள்ளைக் கலரு துணிலே செஞ்சது, வெள்ளைக் கலரு டீஷர்ட், பாட்டம்ஸ் இந்த பாப்பா ஸைஸுக்கு”. “மூன்றாவது மாடி” என்றார் நுழைவாயிலில் இருந்தவர். ‘லிப்ட்’டில் ஏற நிற்கும் போது மறுபடி மொபைல் ஒலித்தது. கண்ணன். ‘நீங்க போங்க. நான் பின்னாலேயே வர்றேன்” என்று சொல்லி விட்டு வளாக வாயிலுக்கு நகர்ந்தான். மருந்து விற்பனையில் இந்த ஆளுடன் தொடர்பு இருந்ததாகவே நினைவில் இல்லை. மொபைல் ஒலி நின்று விட்டது அவன் வாயிலை நெருங்கும் முன். அவன் அந்த் எண்ணை அழைத்தான். ‘பிஸி’ யாக இருந்தது. இரண்டு முறை முயன்றான். பிஸி. சற்று இடைவெளி விட எண்ணினான். அதற்குள் தங்கையின் அழைப்பு மொபைலில் வந்தது. ‘அண்ணே மேல வா” . மேலே போனால் ஒரு முயல் முகமூடியுடன் குழந்தை காத்திருந்தாள். அவன் ‘பொருத்தமாக இருக்கிறது’ என்றவுடன் வாங்கினார்கள்.

அமைதியான ஒரு குடியிருப்புப் பகுதியில் இருந்தது அந்த தொலைக்காட்சி நிலைய வளாகம். வெளியே இரு சக்கர வாகனம் நிறுத்த இடம் இல்லை. பக்கத்துத் தெருவில் தான் இடம் கிடைத்தது. அங்கும் ஏகப்பட்ட வாகனங்கள். வந்து வளாகத்துக்கு உள்ளே நுழைய முயற்சித்தால் ஜனநெரிசல். ‘அண்ணே’ என்று ஒரு காவலாளி அருகில் இருந்து உள்வாயிலை ஒட்டி சுசீலா கையசைத்தாள். ஆனால் நகரவே வழியில்லை. மறுபடி மொபைல் ஒலித்தது. சுசீலாதான். ‘அண்ணே. நீ வெளிலேயே இரு. நான் தேவையானாக் கூப்புடறேன்’ என்றாள். நல்ல வேலை செய்தாள். வியர்வையைத் துடைத்த படி அவன் கார்கள் நிறுத்துமிடத்தில் இருந்த இடைவெளி ஒன்றில் நின்று கண்ணனின் எண்ணை முயன்றான். இம்முறை எடுத்தார். “பால குமார். என்னை நினைவிருக்கா?” என்றார்.

“நினைவில்ல ஸார். ஸாரி” என்றான்.

“கண்ணன் அட் ஏஜென்ஸின்னு ஒரு வருஷம் முன்னாடி நீங்க ஜாபுக்கு அப்ளை பண்ணியிருந்தீங்க. ‘ஃபுல் டைம்’ வர முடியாதுன்னு சொன்னீங்க.யு ரிமெம்பர்?”

” ஆமாம் ஸார்.”

“இன்னிக்கி முடிஞ்சா எங்க ஆபீஸுக்கு வர முடியுமா? ஒரு பார்ட் டைம் ஆஃபர் இருக்கு.”

“ஷ்யூர் ஸார். உங்க ஆபீஸ் லொகேஷனைக் கொஞ்சம் சொல்லுங்க”.

சுசீலாவிடம் சற்று நேரத்தில் வருகிறேன் என்று மொபைலில் அழைத்துச் சொல்லி விட்டுக் கிளம்பினான். அடையாரில் தான் அந்த விளம்பர நிறுவன அலுவலகம் இருந்தது. அடையார் தபால் நிலையத்தை நெருங்கும் போதே எந்த குறுக்குத் தெரு என்பதும் நினைவுக்கு வந்து விட்டது.

‘நீங்க கான்டிராக்ட் பேஸிஸ்ல வேலை பண்ணுவீங்க. அதாவது நீங்க பிடிச்சுக் கொடுக்கற விளம்பரத்துக்கு ஏற்றது போல வரும்படி. எனக்கு 25% கமிஷன். உங்களுக்கு 10%” . நேரடியாக விஷயத்துக்கு வந்தார் கண்ணன்

“நான் பெரும்பாலும் ரூரல் ஏரியாவில தான் டூர் பண்றேன் ஆஸ் அ மெடிகல் ரெப். என்ன மாதிரி விளம்பரம் பிடிக்கணும்?”

“பெரிய துணிக்கடைக் காரங்க, மொத்த வியாபாரம் செய்யறவுங்க, ஹாஸ்பிடல்ஸ், கம்ப்யூடர் டீலர்ஸ், ஸாஃப்ட்வேர் டிரெயினிங் சென்டர்ஸ் இந்த மாதிரி நிறைய இப்போ ரூரல் ஏரியாவிலேயும் வந்து கிட்டு இருக்கு. ஆனா நாட்டு நடப்பைப் பாத்து ‘க்விக்’ ஆ பிடிக்கணும். ஃப்லாஷ் பண்ற மாதிரி.”

“புரியல ஸார். ‘

“பொதுத் தேர்தல், சினிமாக்காரங்க வீட்டில ரெய்டு, வேலை நிறுத்தம்னு பரபரப்பான சூழ்நிலை இருக்கறப்போ நிறைய பேரு பேப்பர் வாங்கிப் படிப்பாங்க. காத்துள்ள போதே தூத்திக்கணும். இப்போ நிறைய ஃப்ளாஷ் ஆகும்னு விளக்கி ஒரே நாளில பிடிச்சு மறுநாள் வெளியாக முடியும். இன்டர்னெட் மூலமா. போன வருஷம் பிரபாகரன் இறந்துட்டாருங்கிறதை யாருமே நம்பல. ரெண்டு மூணு நாள் பேப்பர் நல்ல ஸேல்ஸ். இதை விளக்கி நான் நிறைய விளம்பரம் புடிச்சேன். குறிப்பா விளம்பரத்தையும் ஒரு செய்தி மாதிரி எழுதி உள்ளே நுழைப்பாங்க. அதுக்கு கொஞ்சம் ரேட் அதிகம். ஜாயின் பண்ணுங்க. யூ வில் பிக் அப் ஸூன்.” அவர் கொடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கிளம்பினான்.

தொலைக்காட்சி நிலைய வாயிலில் சுசீலாவும் குழ்ந்தையும் காத்திருந்தனர். “பாப்பா எப்பிடிப் பாடிச்சி?” அன்புடன் வினவினான்.

“முகமூடியோட பாட முடியல அவளால. அதுனால தனியாப் பாட வெச்சி , முகமூடியோட ஆட வெச்சி ரெண்டையும் சேத்துட்டாங்க. பாக்குறவங்களுக்கு வித்தியாசமே தெரியாது.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s