கைக்குட்டை போல் ஒரு மனசு


கட்டுரை

(நடவு இதழில் 2004 ல் வெளியானது. மாதம் தெரியவில்லை)

கைக்குட்டை போல் ஒரு மனசு

சத்யானந்தன்

டெல்லியில் கரோல் பாக் கடைத்தெருவில் பாதசாரிகள் நடக்கக் கூட இடமில்லாமல் நெருக்கி நகரும் நான்கு சக்கர வாகனங்களுக்கிடையே வேடிக்கையும் பார்க்க முடியாமல் வழி பார்த்து நகரவும் முடியாமல் தடுமாறும் போது நிறையவே தமிழ் வார்த்தைகள் கேட்கும். நம்மூர்க்காரர்கள் நிறையவே உல்லாசப் பயணம் வரும் இடம் டெல்லி, ஆக்ரா, காசி, ஹரித்வார், குலு, மணாலி என சுற்றிப் பார்க்க எத்தனையோ பேர் வருவார்கள்.

ஆனால் நவம்பர் மூன்றாம் வாரத்திலிருந்து பிப்ரவரி வரை நம்மாட்கள் வட இந்தியா வருவது அபூர்வம். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இரவு அனேகமாய் ஒற்றை இலக்க செல்ஷியஸில் பனி வாட்டும். இமய மலையிலிருந்து குளிர் காற்றும், மூடுபனியும் வந்து பகல் இரவாகும் அனேக நாட்களில்.

நானும் என் சகாக்களும் அறையில் சன்னல் இடுக்கில் கூட தினசரியை வைத்து அடைத்து விடுவோம். வாடைக் காற்று இல்லாத வறட்டுப் பனியாய் இருந்தால் காலை ஆறு மணிக்கு மேல் இரண்டு ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு நடக்க வெளியே கிளம்புவேன். எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டை இடித்து வளாகமாய் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். கட்டிட வடிவம் எழும்பி உள் வேலை நடந்து கொண்டிருந்தது. மின்சார விளக்குகள் கிடையாது. பகலில் மட்டும் வேலை நடக்கும். சன்னல்களில் கதவு பொருத்தப் படாத அறைகளில் கட்டிடத்தில் தினக் கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர் குடும்பங்கள் தங்கியிருந்தனர்.

ஒரு நாள் காலை நடைப் பயிற்சிக்காகப் புறப்பட்ட போது கடுங்குளிரில் சரியாக மேலுடை இல்லாமல் பசியுடன் ஒரு குழந்தை அழுவது அதன் அழுகை ஒலி தீவிரமாவது கேட்டு என் மனதில் மரத்துப் போய்க் கொண்டிருக்கும் மனித நேயம் விழித்து கண்களில் நீர் துளிர்த்தது.

ஒரிஸா பிகாரிலிருந்து ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் டெல்லிக்கு வரும் கூலித் தொழிலாளிகள் லட்சக்கணக்கானவர். கரோல் பாக் கடைகளிலிருந்து வீசப் படும் அட்டைப் பெட்டிகளை சேகரித்து பழையன வாங்கும் வியாபாரிகளிடம் சேர்க்கும் நடைபாதைவாசிகள் சில நூறு பேர். 45 டிகிரி வெய்யிலோ 4 டிகிரி குளிரோ போக்கிடம் ஏதும் இல்லாதவர்கள். திருமணம், மகப் பேறு எல்லாமே நடைபாதையில் . கயிற்றுக் கட்டிலில் பெருசுகள் உட்கார்ந்து அந்த சமூகத்துள் பஞ்சாயத்து செய்விப்பதைக் காணலாம். கள்ளிப் பெட்டியின் உடைந்த துண்டுகளை வைத்து கிரிக்கெட் விளையாடுவர் அவர்களது வளரும் தலைமுறை.

ஒவ்வொரு முறை பெட்ரோல், டீஸல் விலை உயரும் போதும் எந்தக் கூலி உயர்வும் கிடைக்காமல் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் இந்த சக ஜீவிகள் பற்றி என் மனம் பதறும். அதெல்லாம் ஓரிரு நாட்கள் மட்டுமே. பின்னர் அலுவலகம், குடும்பம், இலக்கிய ஆர்வம் என எத்தனையோ புகலிடம் உண்டு. என்னைப் போல வசதியாக வளைந்து கொடுக்கும் மனசாட்சி உள்ளவருக்கு உதவியாய் அரசாங்கமும், பொருளாதார நிபுணரும் போட்டி போட்டுக் கொண்டு உலக எண்ணை விலை நிலவரம் பற்றி விவரங்களைக் கொடுக்க ஊடகங்களும் ஒத்துப் பாடும்.

குடிமகனின் நலம் பேணும் அரசு (Welfare State) என்ற ஒரு பணியை அரசாங்கங்கள் புறந்தள்ளி விட்டன. தனியாருடன் போட்டி போடும் அரசு நிறுவனம் போல வல்லரசுகளுடன் போட்டி போட்டு மனித உரிமைகளை மறுப்பது இந்தியாவில் அதிகமாகி விட்டது.

இரண்டு வேளை உணவு, உடை, கூரை, எட்டு மணி நேர வேலை, கௌரவமாக நடத்தப் படுதல் இவற்றிற்கு இந்தியக் கூலிகள் (பெரிதும் தலித்துகள்) உரிமை பெறவில்லை.

அறிவுஜீவிகள் தாங்கள் விருப்பப்பட்ட தடங்கள் தளங்களில் சஞ்சரிப்பர். அது பற்றி விவாதிப்பர். தோளைக் குலுக்கிப் புன்னகைத்து விடை பெறுவர். வணிகமயமான, உலக மயமான சூழலில் அறிவு ஜீவியாய் இருப்பதில் நிறையவே வசதிகள் உண்டு. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் ஜோதி பெரு நெருப்பாய் எழுந்து சுரண்டலை எரித்தால் என் போன்ற இலகுவான மனசாட்சி உள்ளவர்கள் இருட்டிலிருந்து வெளியே வருவோம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s