நாட்குறிப்பு- திருநெல்வேலிக்கே அல்வா
20.8.2012 அன்று THE HINDU நாளிதழில் Media எனப்படும் ஊடகத்தையே அச்சுறுத்தும் TAM பற்றி தெரிய வந்தது. TAM என்றால் என்ன? Total Addressable Market அதாவது ஒரு டிவி சானல் அல்லது பத்திரிக்கை இருந்தால் அவர்களுக்கு எந்த அளவு பார்வையாளர் அல்லது வாசிப்போர் இருக்கிறார்கள், இவர்களது சந்தையின் அளவு என்ன என்பதை மக்களிடம் Survey என்னும் நேரடி பேட்டிகள் அல்லது மின்னஞ்சல் வழி கருத்துக் கணிப்பு நடத்தி செய்தித்தாள் மற்றும் சானல்களை ஒப்பிட்டு முடிவுகளை வெளியிடுவது TAM என்னும் சேவை. இது எப்படி வேலை செய்கிறது? People Meter என்னும் கருவி தேர்ந்தெடுத்த வீடுகளில் வைக்கப் பட்டு (பலவேறு நகர, கிராமங்களில்) அவர்களது தொலைக் காட்சி பார்க்கும் பழக்கம் தரவுகளாக மாற்றப் பட்டு அந்த DATAவின் அடிப்படையில் Rating எனப்படும் அதிகபட்சப் பார்வையாளரைக் கொண்ட சானல் பற்றிய தர வரிசைப்படுத்துதல் நடைபெறுகிறது. இதில் என்ன பிரச்சனை? வேறு என்ன ? ஊழலேதான். NDTV இந்தியாவில் ஏகபோகமாக TAM என்னும் கருத்துக்கணிப்பு நடத்தும் பன்னாட்டு நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறது. எந்தெந்த வீடுகளில் People Meter வைக்கப் பட்டது என்னும் விவரம் ரகசியமாக வைக்கப் படாமல் சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பதே அந்தக் குற்றச்சாட்டு. அவர்கள் அந்த வீடுகளுக்குப் போய் சில சலுகைகளைச் செய்து தமது தொலைக்காட்சி சேவையை அதிகம் பார்க்கிற மாதிரி ஏற்பாடு செய்து கொண்டு ஜெயித்து விட்டார்கள் என்பதே குற்றச்சாட்டின் சாராம்சம். இதற்கு மாற்றாக BARC (Broadcast Audience Research Council) என்னும் அமைப்பை ஏற்படுத்த ஊடக நிறுவனங்கள் முன் முயற்சி எடுத்து வருகின்றன. இன்னும் பலிதமாகவில்லை. தேர்ந்தெடுத்த செய்திகளை மட்டுமே கவனப்படுத்துவது, விலை அடிப்படையில் விளம்பரமே சிறு கட்டுரையாக அல்லது செய்தியாக மாறி வருவது, ஆராய்ந்து பார்த்து மக்களை எச்சரிக்கை செய்யத் தவறுவது (ஈமு போன்றவற்றை), அரசியல் சார்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி கேள்வி கேட்பாரில்லாமல் தமது பொறுப்பை சிறிதும் உணராமல் செயற்பட்டுவரும் ஊடகங்களே ஊழலால் பாதிக்கப் பட்டால், அவர்களே நீதி மன்றக் கதவைத் தட்டும் நிலை இருந்தால் சாதாரண வெகு ஜனம் என்ன செய்யும்? சமூக ஆர்வலர் வழக்குத் தொடர்ந்தோ போராட்டம் நடத்தியோ வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த எத்தனையோ தலை போகிற விஷயங்கள் -சமூக நலனுக்கு மிகவும் முக்கியமான விஷயங்கள்- ஊடகங்களின் தன்னார்வ முயற்சியில் அல்லது துப்பறியும் திறமையில் வெளி வந்திருக்க வேண்டியவை. யார் எக்கேடு கெட்டால் என்ன என்று பரபரப்புச் செய்திகளுக்கே முக்கியத்துவம் தந்து வரும் ஊடகங்களுக்கே இவ்வளவு பெரிய பிரச்சனை என்பது திருநெல்வேலிக்கே அல்வா.