முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)


http://puthu.thinnai.com/?p=14631

முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)

சத்யானந்தன்

Share

சத்யானந்தன்

அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது.

“ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை இருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த பெட்டிக்கடையிலேயே நான்கு முட்டைகளை வாங்கிக் கொண்டான். சாந்தியாயிருந்தால் “சிரமம் பாக்காம் நடந்தா நாடார் கடையில சல்லிஸா வாங்கலாம். இவன்கிட்டே ஒரு முட்டைக்கி அம்பது பைசா அதிகம் ” என்பாள். வீட்டுக்கதவு திறந்திருந்தது.

“பாப்பா” என்று குரல் கொடுத்தபடியே நுழைந்தான். “அப்பா” என்று சமையலறையிலிருந்து குரல் கேட்டது. அவன் “ஷூ” கழற்றி முகம் கழுவுவதற்குள் காபி போட்டு உணவு மேஜை மீது வைத்திருந்தாள்.

“தனியாவாக் கண்ணு இருந்தே?”

“இல்லப்பா. ” தர்ட் ஃப்ளோர் “ஆன்ட்டி வூட்டுல இருந்தேன். உங்க ஸ்கூட்டர் சத்தம் கேட்ட உடனே இறங்கி வந்தேன்” . சுமதியின் தலை அழகாக வாரப் பட்டிருந்தது. எட்டாம் “க்ளாஸ்” படிக்கிறாள். வளர வளர மாலதியின் சாயல் நன்றாகவே அவள் மீது தென்படுகிறது.

“ராத்திரிக்கி “ஆம்லேட்டா”ப்பா?” அவனது “டிஃபன் பாக்ஸை” பாத்திரம் தேய்க்கும் இடத்தில் போட்டபடியே கேட்டாள்.

பாலமுருகன் காலையில் செய்தித்தாளை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்து விட்டான். “மொபைல்” ஒலித்தது. ராஜாராம்.

“சொல்லுங்க ராஜாராம் ஸார்”

“”ஜிஎம்”ஐப் பாத்தீங்களா? ”

“பாத்தேன்” (ஒரு சிறிய பொய் கூட குரலைக் குன்ற வைத்து சமாளிக்க வேண்டி இருக்கிறது.)

“என்ன சொன்னாரு?”

” “ப்ரொபோஸல் ” இன்னும் “டிஸ்கஷன் ஸ்டேஜுலேயே” இருக்கு. எதுவும் “பைனல்” ஆக்லேன்னாரு”

” நம்பாதீங்க பாலா, உங்களை “ஷிஃப்ட்” பண்றதில “டிஜிஎம் ஸேல்ஸ்” குறியா இருக்காரு”

“நான் என்ன ஸார் சின்ன ஆளு. நீங்க இவ்வளவு அக்கறை எடுத்ததாலே “ஜி எம்”ஐ “டைத்”துக்கு பாக்க முடிஞ்சிது”

” நாளைக்கி எங்க “டிஜிஎம்” கிட்டே சொல்லி உங்கள “ஷிஃப்ட்” பண்ணனுமின்னா எங்க “பிராஞ்சுக்கே” போடச் சொல்றேன்.இத்தனை நாளா “ஆடிட்”, “ரிட்டர்ன்ஸ்”, “ஸ்டேட்மென்ட்ஸ்”ஸின்னு அலைஞ்சீங்க. “மார்க்கெட்டிங் ப்ரான்ச்”ல நாங்கள்ளாம் ஒரு “ஃபேமிலி” மாதிரி”

“எனக்குத் தெரியாதா ஸார்” (பரவாயில்லையே எனக்குக் கூட நாசூக்காக நக்கலடிக்க வருகிறதே).

“நாளைக்கு ஆஃபீஸ்ல பாப்போம்”

காலையில் இந்த உரையாடல் நடந்து முடிந்திருந்த போது மதிய உணவு இடைவேளையில் ராஜாராம் குறிப்பிட்ட “ஜி எம்”மின் “பிஏ” அவனிடம் இரவல் வாங்கி இருந்த யூ ஆர் அனந்தமூர்த்தியின் “பிறப்பு” நாவலைத் திரும்பக் கொடுத்து “நீங்க சொன்ன மாதிரி இந்த நாவல் மாத நாவல் மாதிரியெல்லாம் இல்லை. “டெப்த்” அதிகமான “தீம்” என்று “உங்க “ப்ளாக்”ல “ஷார்ட் ஸ்டோரி” படிச்சேன்’ என்றாள்.

“கதைத் தலைப்பென்ன?”

“”பேரம்” கதை நல்லா இருந்துது. பிரச்சனையைச் சொன்ன நீங்க முடிவையே சொல்லலியே”

“நிஜ வாழ்க்கையில முடிவே தெரியாத எத்தனையோ விஷயங்களோட, பிரச்சனைகளோட, கேள்விகளோட நாம் வாழலியா? கதையின் முடிவு கத்தரிச்சி ஒட்டின மாதிரி கச்சிதமா இருக்கணுமா?” என்ற படியே லலிதாம்பிகா அந்தர் ஜனத்தின் “அக்னிசாட்சி” நாவலை அவளிடம் கொடுத்தான். நன்றி கூறி அவள் நகரத் துவங்கிய போதுதான் ராஜாராம் தன்னிடம் கூறியவை நினைவுக்கு வர “ஜி எம் ஸாரை”ப் பாக்க முடியுமா?” என்றான். “எதற்கு/” என்று அவள் எதிர் கேள்வி போட ராஜாராம் மூலம் கிடைத்த விவரங்களைச் சொன்னான்.

“ஸார். ராஜாராம் கிட்டே உஷாரா இருங்க. எந்த “டிரான்ஸ்ஃபர் ப்ரொபோஸலும் இல்லே. அவங்க டிபார்ட்மென்ட்ல ரெண்டு பேரு ரிஸைன் பண்ணிட்டாங்க. ராஜாராம் ரொம்ப நாளா அங்கே இருக்கிறதால அவருகிட்டே “அடிஷனல் ஒர்க்” எல்லாத்தையும் தர்றாங்க. அவரு உங்களுக்குத் தூண்டில் போடறதே இந்த “வேகன்ஸீஸ்” “ஃபில் அப்” ஆகிற வரைக்கும் வேலைப்பளுவை உங்க மேலே தள்ளுறது தான். நீங்களா “ஜிஎம்” கிட்டே போயி “அக்கவுன்ட்ஸ்”லேயிருந்து “ட்ரான்ஸ்பர்”கேட்டா மத்த காயை நவுத்துறது அவருக்கு சுலபம்”

“இந்த மாதிரி கண்ணாமூச்சி, தூண்டில் எல்லாம் எனக்குப் பிடிபடறதே இல்லை மேடம்”

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க பாலா ஸார். இவரு எதாவது ‘மூவ்’ பண்ணினா நான் ‘ஜிஎம்’ கிட்டே பாலா ‘அக்கவுண்ட்ஸ்’ல ‘கன்டின்யூ’ பண்ணத்தான் விரும்புறாருன்னு சொல்லிடறேன். ‘ஜிஎம்’ ரொம்ப ‘ஷ்ரூட்’. டக்குன்னும் விஷயத்தைப் புரிஞ்சுக்குவாரு”

அவள் விடைபெற்றதும் தூண்டில் விவகாரங்களில் தான் அனேகமாக மீனாகவே இருந்திருப்பதாகத் தோன்றியது. இந்தப் பதினைந்து வருடங்களில் பளு குறைந்த எந்த ‘ஸீட்’டும் அவனுக்கு அமைந்ததில்லை. இவனை மாட்டி விட்டு பலர் விடுப்பில் போயிருக்கிறார்கள். தனக்கு ஒரு அவசியம் என்று வரும் போது பலமுறை தத்தளித்திருக்கிறான். மக்கு, அசடு, பிழைக்கத் தெரியாதவன், உலகைப் புரிந்து கொள்ளாதவன் என்று நண்பர்களும் ‘எல்லாரையும் எதார்த்தமா எடுத்துக்காதீங்க’ என்று மாலதியும் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தூண்டில் முட்களில் சிக்கிய பிறகு தான் மறுபடியும் மாட்டினோம் என்று புரிகிறது. இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு பூமி பூஜை போட்ட போது அண்ணன் அவசர அவசரமாக தானும் ஒரு ‘ஹவுஸிங் லோன்’ போட்டு (அப்பா உட்பட) தெரிந்தவர் அனைவரிடமும் தான் முந்தி கடன் வாங்கி விட்டான். மாலதி தன் அண்ணன், அப்பா எல்லோரிடமும் பேசி (கடன்) பணம் புரட்டினாள். ‘கவரிங்’ நகைகளை மாட்டிக் கொண்டு நகைகளை அடகு வைத்தாள். கிரஹப் பிரவேசம் முடிந்து எல்லோரும் கிளம்பிய பிறகு “சொந்த அண்ணன் அண்ணீன்னு என்னமா ஆடினீங்க. இப்பனாச்சும் மனுஷாளப் பத்திப் புரிஞ்சுக்கங்க” என்றாள். ஏனோ அதன் பிறகும் அண்ணன், அண்ணியை அவர்கள் குழந்தைகளை வேற்றுமையாக எண்ணிப் பழக முடியவில்லை. முட்கள் சிறுவயது முதல் துரத்தி வருகின்றன.

எழுத ஆரம்பித்த பிறகு குத்திய முள் எது எது என்று அசை போடவோ இன்று எதிர் கொண்ட தூண்டில்கள் எது எது என்று இனங்காணவோ கூடத் தோன்றுவதில்லை. மாலதி ஒருத்தி தான் அவனை நெருக்குவதே இல்லை. இரண்டாவது பேறுக்குத் தாய் வீடு போக அவளுக்கு இஷ்டமேயில்லை. (அவள் தம்பிக்குத் திருமணமாகி விட்டதே). அவனது அம்மா முன்கூட்டியே திட்டமிட்டு முள்ளை நீட்டி விட்டாள். ‘என்னால வரமுடியாது தம்பி. தனி ஆளு நீ என்ன பண்ணுவே. அவுங்க அம்மாவை இங்கே வரச் சொல்லிடு’. மாலதி நகைகளை அடமானம் வைத்த பின் இவன் மாமியார் இவனுடன் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. வந்தாலும் தங்குவதில்லை.

உணவு மேசை மீது தட்டுக்களை வைக்கும் சத்தம். ‘நானே ஆம்லேட் ஊத்திட்டேம்ப்பா. நீங்க குக்கர் வெயிட்டை எடுத்துட்டு உள்ளே இருக்குற ரைஸை எடுத்துத்தாங்க’.கையில் ஆவி அடித்து குக்கர் மூடியைக் கீழே போட்டு மாலதி கையால் குட்டு வாங்கி விட்டது குழந்தை.

சாப்பிடும் போது இன்று பள்ளி ‘லாபரெட்டரி’யில் ஒரு பையன் ஏதோ ஒரு ‘ஆஸிட் ஜாரை’ கீழே தள்ளி அது அப்படியே பற்றி எரிந்ததை சுவாரசியமாக விவரித்தாள் சுமதி. அவள் தலையை அசைப்பது அச்சாக மாலதி மாதிரியே இருந்தது.

இரவு மணி ஒன்பது. படிப்பும் பாதி வீட்டு வேலையும் குழந்தையின் முகத்தில் களைப்பும் தூக்கமுமாய் நிழலாடின. ‘படுத்துக்கோயேன் ராஜா’

“கொஞ்ச நேரம் நீங்களும் பக்கத்துல இருங்கப்பா”

வெளிர் நீல வண்ண இரவு விளக்கொளியும், கொசு விரட்டும் திரவத்தின் வாசனையும், பக்கத்துக் குடியிருப்புக்களிலிருந்து வரும் குழப்பமான டிவி ஒலியும் ஆன இந்த நேரம் தினசரி அம்மா அல்லது அப்பா சுமதியுடன் அவள் தூங்கும் போது உடனிருக்கும் நேரம். சில சமயம் அப்பா அம்மா இருவருமே இருக்க வேண்டும் என்பாள் சுமதி. அப்போது மூன்றாவது ஆளுக்குக் கட்டிலில் இடம் இருக்காது. அவன் அவர்கள் கால்கள் தாண்டி மீதியிருக்கும் ஒரு அடி இடத்தில் ஒண்டிக் கொள்வான்.

இன்று அவனுக்குத் தூக்கம் வரவில்லை. கட்டில் அருகே நாற்காலியில் அமர்ந்தான்.’அப்பா பெட்டு மேல உக்காருங்களேன். நான் உங்க மடி மேல கால் போட்டுக்கறேன்”

“நம்ப அலார்ம் க்ளாக்ல முள்ளு மேல ரேடியம் இருக்குப்பா” என்றாள் சுமதி. அவளது பள்ளிக்கூடப் புத்தகங்கள் வைக்கும் மரத்தட்டுகளின் மத்தியில் புத்தகங்களின் நிழல் பட்டு வெளிச்சம் மறைய பச்சை நிற ரேடிய ஒளி சிந்தின மூன்று கடிகார முட்கள்.

“எங்க தமிழ் ஸார் ஒரு கட்டுரை எழுதச் சொல்லியிருக்காருப்பா”

“என்ன டாபிக்?”

“அதான்ப்பா தரல. அவுரு ஏற்கனவே நம்ப கண்ணுல படற ஒரு விஷயத்தைப் பத்தி இதுவரை யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை எழுதி அதுக்குப் பொருத்தமான தலைப்பையும் வைக்கச் சொலியிருக்காரு. இன்டர் ஸ்கூல் காம்பெடிஷனுக்கு அனுப்பணுமாம்.”

“எதையெல்லாம் பத்தி எழுதலாமாம்?”

“எதைப் பத்தி வேணாலும். ஏரோப்ளேன், கப்பல், அனிமல்ஸ், பர்ட்ஸ் எதைப் பத்தி வேணாலும் எழுதலாம். சியாமளா இல்லப்பா. அவ ஆமையைப் பத்தி எழுதியிருக்காப்பா. கடல் ஆமை இருக்குல்லே. அது மணலில முட்டையெல்லாம் மறைச்சு வெச்சிடுமாம். மனுஷங்க அல்லது வேற மிருகங்கள் கண்ணுல படாம. ஆனா குட்டி பொறிஞ்சு வந்ததும் அந்தக் குட்டிகள் ஆமை மறைச்சு வெச்சிதே அந்த இடத்துலேருந்து மெதுவா ஊர்ந்து கடலுக்குள்ள போயிச் சேருரத்துக்குள்ள கழுகெல்லாம் வந்து கொத்திக்கிட்டுப் போயிருமாம். அதுக்குத் தப்பிச்ச மிச்ச ஆமைதான் கடலில இருக்காம். நிறைய பேரு இந்த மாதிரி முட்டைகளைத் தேடிக் கண்டுபிடிச்சு அது பொறிஞ்சப்புறம் குட்டிகளை அவுங்களே கொண்டு போய் கடலிலே விட்டுறுவாங்களாம். இதை ஒரு ஹாபியா செய்யிறாங்களாம்”

“சியாமளா என்ன தலைப்பு வெச்சா?”

“பிறந்த உடன் மரணத்துடன் போராட்டம்”ன்னு . ஆனா தமிழ் ஸார் “பெண் சிசுக்கள் போல இன்னுமொரு வாயில்லா ஜீவன்” அப்படின்னு மாத்திட்டாரு. ஏம்ப்பா நிசமாவே தன்னோட குழந்தையைக் கூட யாருனாச்சும் கொல்லுவாங்களா?”

“சில பேரு மனசு அந்த அளவு கடுமையாயிருக்கும்மா ” . பேச்சை மாற்ற எண்ணி “நீ எதைப் பத்தி எழுதப் போறடா ராஜா?” என்றான்.

“நீங்க கெஸ் பண்ணுங்க”

“கம்ப்யூட்டர் பத்தி”

“நோ”

“எதாவது பூவைப் பத்தி”

“சரி விடுங்க. நானே சொல்றேன். கடிகாரத்தைப் பத்தி எழுதப் போறேன்”

“கடிகாரத்தைப் பத்தி அப்பிடி மத்தவங்க கண்ணுல படாம என்னம்மா இருக்கு?”

“இருக்கே. இப்போ யுனிவர்ஸ் இருக்கில்லே?”

“யுனிவர்ஸுக்குள்ளேதாண்டா நாம இருக்கோம்”

“அது கிடையாது. ப்ளானெட்ஸ், ஸ்டார்ஸ், ஸன், மூன் எல்லாம் காலக்ஸியில இருக்கே அதுக்கு முடிவே இல்லதானே?”

“ஆமா”

“ஆனா ஒவ்வொரு வினாடி கடக்கும் போதும் அந்த அளவு ஒரு ப்ளானெட்டோ ஸ்டாரோ இது இருக்குற எடம் அதாவது ஒரு ஸ்பாட் அதை விட்டு இடம் மாறுது. வேகமாவோ இல்ல ரொம்ப மெதுவாவோ. ஒரு மாக்னெடிக் ஸாரி க்ரேவிடேஷனல் புல் ஏற்பட்டு எல்லாமே வானத்தில கொஞ்சம் கொஞ்சமா இடம் மாறத்தானே செய்யிது. இல்லப்பா?”

“சரிதாண்டா கண்ணு. மார்ஸ் ரொம்ப கிட்டே வரும் போது தான் அதுக்கு ‘ஸ்பேஸ் க்ராஃப்ட்’ டை அனுப்பி வெச்சாங்க.”

“யெஸ். அப்போ இந்த கடிகாரம்தாம்ப்பா இந்த உலகம் பிரபஞ்சம் இன்னும் அதைத் தாண்டி எது எதுவோ எல்லாத்தையும் கன்ட்ரோல் பண்ணுது. அதுனால கடிகார முள்ளுதான் உலகத்தையே இயக்குதுன்னு கட்டுரை எழுதட்டுமாப்பா?”

“எழுதுடாக் கண்ணு. ஆனா கடிகார முட்கள் அப்படின்னு எழுது. மூணு முள் இருக்கில்லே?”

“இல்லெப்பா. ஒரே ஒரு முள். வினாடி முள் மட்டும்தான் நகருது. அதை பேஸ் பண்ணி மிச்ச ரெண்டு முள்ளும் நகருது. வினாடி முள்தான் கடிகாரத்தையும் கன்ட்ரோல் பண்ணுது”

“கரெக்ட். அப்படியே எழுதுடா”

“தமிழ் ஸார் சேன்ச் பண்ண முடியாத படி ஒரு தலைப்பு வெக்கணும்ப்பா”

“காத்தால சொல்லட்டுமா?”

“இப்பமே யோசிச்சி சொல்லுங்க. அப்பத்தான் எனக்குத் தூக்கம் வரும்”

” பிரபஞ்சத்தை இயக்கும் முள் அப்படின்னு வெக்கலாம். அப்புறம் அவரு பிரபஞ்சம்கறது வடமொழி வார்த்தையின்னு தலைப்பை மாத்திடுவாரு. பிரபஞ்சத்துக்குத் தமிழ்ல வெளின்னு ஒரு வார்த்தை இருக்கு”

“முள்வெளின்னு தலைப்பு வெக்கலாமா?”

“பொருத்தமான தலைப்புடாக் கண்ணு”

“காலையில என்னை சீக்கிரமே எழுப்புங்க. நான் இந்தக் கட்டுரையை எழுதி உங்க கிட்ட காட்டி கரெக்ட் பண்ணிக்கறேன். இப்போ உங்க கையை என் தலைக்கிக் கீழே வெச்சிக்கோங்க”

அவன் உள்ளங்கை விரிய குழந்தையின் தலை அதன் மீதும் அவள் பிஞ்சு விரல்கள் அவன் கையைப் பற்றிய படியும் “நான் தூங்குற வரைக்கும் இங்கேயே இருங்கப்பா” என்றபடி விழிகளை மூடிக் கொண்டாள்.

குழந்தை உறங்கி விட்டாள். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவளை எழுப்பாத படி மிக மென்மையாக அவள் தலைக்குக் கீழே இருந்து கையை எடுத்துக் கொண்டான். ஹாலுக்கு வந்தான். மின்விசிறி சுழலாததால் ஹால் நிசப்தமாயிருந்தது. சுவர் கடிகாரத்தில் வினாடி முள் அசையும் ஒலி தொடர்ந்து தெளிவாகக் கேட்டது.

(நிறைவுற்றது)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாவல் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s