ஊடகங்கள் நீருற்றி வளர்க்கும் குரூரம்
ஒரு விபத்து நடந்து விடுகிறது. ஒரு கொலை நடந்து விடுகிறது. பார்வையாளருக்கு அல்லது வாசகருக்குத் தேவையானது ஒன்றே ஒன்று தான். பாதிக்கப் பட்டவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது அல்லது என்ன நிவாரணம் கிடைத்தது என்பது பற்றிய விவரமே அது. ஆனால் ஒரு பிணத்தையோ ரத்தத்தையோ காட்டுவதால் பெண்களும் இளகிய மனம் கொண்டோரும் தூக்கம் இழப்பர் என்பதைத் தவிர என்ன பயன்? ரத்ததானம் செய்வோர், ஏழைகளின் படிப்புக்கு உதவுவோர், பேரிடர்களில் நிவாரணத்துக்கு என உதவுவோர், தொண்டுள்ளம் கொண்ட மருத்துவர், முன் மாதிரியான ஆசிரியர்கள் இவர்கள் ஏன் ஊடக வெளிச்சத்தில் (குற்றவாளிகளுக்கு இணையாக) வருவதேயில்லை? திரும்பத் திரும்ப குற்றங்கள் நடந்த விதம் அதன் பின்னணி என குரூரக் கதைகளைச் சொல்லிவிட்டு இதே ஊடகங்கள் குற்றங்கள் பெருகியதற்கான மொத்தக் கணக்கையும் சினிமாக்காரர்கள் மேல் எழுதிவிடுவார்கள்.
தமிழ் இலக்கியம் இந்திய இலக்கியம் உலக இலக்கியம் என வாசிக்க நிறையவே இருக்கின்றன. வாசிப்பு ஒன்றே சிந்தனைக்கு வழிவகுக்கும். மனிதன் சிந்தனை என்னும் மூளையின் ஒரு நல்ல அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், வாழ்க்கையை இயந்திரம் போலவோ மிருகம் போலவோ வாழ்ந்து முடிக்காமல் வாழ்க்கையை ஒர் பார்வையாளனாக நின்று பார்க்க இலக்கியம் மட்டுமே உதவும். இலக்கியத்தை இருட்டடிப்புப் செய்து குரூர ரசனைக்கு வித்திடும் ஊடகங்களிடம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.