செல்வ நிலையாமை – நாலடியார் நயம்
‘செல்வர் யாம்’ என்று தாஞ் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லிற்
கருங்கோண்மூ வாய்திறந்த மின்னுப் போற் றோண்டி
மருங்கறக் கெட்டு விடும்
செல்வுழி -உழி என்பதற்கு இடம் என்று பொருள் செல்லும் இடம்
புல்லடறிவாளர் -அறிவில்லாதவர்
எல்லிற் – பகலில்
கருங்கோண்மூ- கோண் என்பதற்கு கூரை அல்லது பரணை அடுத்து இருக்கும் தட்டியின் பெயர். மூ என்பதற்கு உருண்டையான என்று பொருள். இந்த இடத்தில் வானில் திரண்டுள்ள கரு மேகத்தைக் குறிக்கிறது
போற்றோண்டி- போலத் தோன்றி
மருங்கு அற- இடை முறிந்து இல்லாமற் போக அதாவது துண்டுகளாக சிதறி விடும்.
இந்தப் பா “ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” என்னும் பழமொழியையும் ஞாபகப் படுத்துகிறது. தமது வாழ்க்கைக்கு அல்லது தாம் செல்லும் தடத்துக்கு இலக்கு இல்லாமல் “நான் செல்வந்தன்” என்று திரிபவர் கருமேகம் வாய்பிளந்து தோன்றும் மின்னல் போலத் தம் செல்வத்தை இழப்பர் . அது இடை அகன்ற உடைந்த உருவம் போலத் துண்டு துண்டாகச் சிதறும் என்கிறது நாலடியார்.
பெரிய குற்றங்கள், ஏமாற்று வேலைகள் எல்லாவற்றிலும் “பணம் வேண்டும்- எப்படியாவது வேண்டும்” என்னும் அவசரத்தையும் நெறியற்ற போக்கையும் நாம் பார்க்கிறோம். ஒருவர் தமது உழைப்பால் நேர்மையான வழியில் செல்வம் தேடும் பட்சத்தில் வசதியான ஒரு வாழ்க்கை என்னுமளவு அதிகபட்சம் உயரலாம். கூடவே நலிந்த நிலையில் இருக்கும் உறவு. தமது வயதான காலத்தில் தமது பராமரிப்புக்கும் குழந்தைகளுக்குமென ஒரு சேமிப்பு, சமுதாயத்துக்கு ஏதேனும் செய்யும் நோக்கு இவையும் இருக்கும். எனவே கையில் உள்ள பணத்தை என்ன செய்வது என்ற குழப்பமும் இருக்காது. எந்தவழியிலேனும் பணம் வந்தால் போதும் என்ற எண்ணமே இருக்காது. மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் எதுவும் குறுகிய காலத்தில் பணம் திரட்டி உருவாக்கப் படவில்லை.
அவசரத்தில் நீதி நெறி பார்க்காமல் திரட்டிய பணம் அதைவிட அவசரமாகக் காணாமற் போய் விடுகிறது. பிறரின் வயிரு எறிய ஏமாற்றி சேர்த்த பணம் அதை விட மோசமான ஒரு ஏமாற்றத்தைத் தந்து மறைகிறது. நூற்றாண்டுகளாக இது நடந்தாலும் நல்வழிப் படாமல் பொருள் சேர்ப்போர் எண்ணிக்கை குறைவதில்லை.