உயிர்மை பிப்ரவரி 2013- எஸ். ராமகிருஷ்ணனின் நுட்பமான சிறுகதை
தமிழ் நாட்டில் எழுத்தாளர்களை எந்த காலகட்டத்தில் எடுத்து ஆய்வு செய்தாலும் இரண்டு விதமாகப் பிரிக்க முடியும். ஒருவர் எமக்குத் தொழில் எழுத்து என்று போராடியவர். இவர்கள் சிறுபான்மையினரே. பெரும்பான்மை வயிற்றுப் பாட்டுக்கு ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு இரண்டு குதிரை சவாரியாக எழுத்தையும் சேர்த்து இழுபடுபவர். இவர் பெரும்பான்மை. வணிக எழுத்து என்று முன்னர் ஒன்று இருந்தது. அதாவது வாசகர் மனம் கவர மட்டுமே அவர் எழுதுவார். இப்போதும் வணிக எழுத்து இருந்தாலும் தன்னை வணிக எழுத்தாளராக உயர்த்திக் கொள்ள சமீப காலத்தில் யாரும் முயலவில்லை.
ஒரு சிறுகதையைப் பற்றிப் பேசும் முன் ஏன் முதல் பத்தி என்றால் காரணம் இருக்கிறது. பொதுவாக இசை அல்லது எழுத்து இந்தத் துறைகளை தனது தொழிலாக எடுத்துக் கொள்ள முடியாமற் போய் மனம் வருந்தும் ஒரு கதாபாத்திரம் எழுத்தாளரின் கவனம் பெறும். “எதிர் கோணம்” என்னும் சிறுகதையில் எஸ்.ராமகிருஷ்ணன் புகைப்படக் கலையைத் தனது தொழிலாகக் கொள்ள முடியாமற் போன ஒரு பேருந்து நடத்துனரின் கதாபாத்திரத்தைச் சுற்றிக் கதையை எழுதியிருக்கிறார். புதிதாக எழுத வருபவர்கள் இந்தக் கதையை ஒரு முன்னுதாரணமாக எடுத்துப் பல் முறை மறு வாசிப்பு செய்யலாம். ஒரு குறுகிய நேர பேருந்துப் பயணத்தில் நடக்கும் சில வழக்கமான நிகழ்ச்சிகளுக்குப் பின்னே இருக்கும் ஒரு கதாபாத்திரத்தின் மனப் போராட்டம் அல்லது ஆழ்ந்த ரணம் இந்தக் கதையில் ஒரு சிற்பியின் கை வண்ணமாக வெளிப்பட்டுள்ளது. இந்தக் கதையின் மிகப் பெரிய பலம் ஒரு நடத்துனரை நாம் ஒரு இயந்திரம் போலச் செயற்படும் சாதாரணத் தொழிலாளியாகத் தான் பார்க்கிறோம். அவருக்குள் புகைப்படக் கலை பற்றிய விரிந்து பரந்த அறிவு இருக்க இயலும் என்று நாம் காண்கிறோம். அந்த குறுகிய நேர பயணத்துக்குள் ஒரு அதிநவீன புகைப்படக் கருவியைத் தொட்டுப் பார்க்க இயன்றால் ஒரே ஒரு முறை இயக்கிப் பார்க்க அவர் விரும்புகிறார். அது நடக்காமலேயே போய் விடுகிறது. படித்து முடித்த பின் நம் மனம் கண்டிப்பாக கனக்கிறது. கதையின் மற்றொரு செறிவான பகுதி ஒருவர் ஒரு கலையைத் தமது தொழிலாக எடுத்துக் கொள்ள, குடும்ப, சமூக சூழ்நிலைகள் அனுமதிப்பதில்லை என்னும் சோகம். நடத்துனரின் கடந்த காலம் பற்றிய பகுதியில் பதிவாகி இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் தலைப்பில் உபயோகித்திருக்கும் கோணம் என்னும் சொல்லுக்கு புகைப்படக்கலையில் பயன் படும் கோணமும் நாம் மற்றவரைக் காணும் கோணம் இரண்டுமே பொருளாகும். உயிர்மைக்கு நன்றி