இனிய உதயம் மார்ச் 2013 இதழ் – சமகால இலக்கியமும் முன் வந்தவையும்-1


Logo

இனிய உதயம் மார்ச் 2013 இதழ் – சமகால இலக்கியமும் முன் வந்தவையும்-1

நக்கீரன் பதிப்பகத்தின் இனிய உதயம் இதழின் மார்ச் 2013 இதழில் சமகால இலக்கியமும் அதற்கு முன் வந்த இலக்கியங்கள் பற்றிய பதிவுகளும் இணையான முக்கியத்துவம் பெற்றுள்ளன. சமகாலப் பதிவுகளில் கவிதைகள் முன்னுரிமை பெற்றுள்ளன. முதலில் சமகாலக் கவிதைகள் பற்றிய பதிவுகளைக் காண்போம். “ஒரு கொத்து மலையாளக் கவிதைகள்” என்னும் தலைப்பில் சில மலையாளக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

‘உண்மையும் பொய்யும்’ என்னும் கவிதையில் நாராயணன் நம்பூதிரி உண்மையும் பொய்யும் ஒன்றாக நதியில் குளிக்கப் போன போது உண்மையின் ஆடைகளைப் பொய் அணிந்து கொண்டு போனது.. உண்மைக்கு ஒளிக்க எதுவுமில்லை அது ஆடையில்லாமலேயே சென்றது என்று உருவகப் படுத்தியிருப்பது நல்ல கற்பனை வளத்தின் சான்று. காலமும் சாட்சியும் என்னும் கவிதையில் கேரள ரயில் பயணத்தில் காணக் கிடைக்கும் அரிய இயற்கைக் காட்சிகள் சென்று மறையும் வேகத்தையும் மனிதர்கள் ரயிலில் ஏறி உடன் பயணத்து மறைவதை நம் வாழ்க்கையில் வந்து போய் நினைவாகத் தேங்கி விடும் மனிதரோடு ஒப்பிடுகிறார். கருணாகரன் புதுசேரியின் “அந்நியர்” என்னும் கவிதையில் அவர் ஊசியும் நூலும் உரையாடி துணி என்னும் சாதனை நிகழ்ந்ததும் இருவரும் அன்னியராகி விடுவதைச் சுட்டுகிறார். இது எல்லா சாதனைகளுக்குமே பொருந்தினால் மனித உறவுகள் பற்றிய ஒரு ஆழ்ந்த தரிசனம் கிடைக்கிறது. “சத்தியம்” என்னும் கடுகளவுக் கவிதையில் கல்பட்டா நாராயணன், குற்றவாளிகளைத் தேடும் போது “நீங்கள் மதம், நாடு, ஆடை, மொழிகள் எதையும் மாற்றிக் கொள்ளவில்லையே?” என்று கேட்பதாகப் பதிவு செய்கிறார். அடையாளம் என்பது தோற்றத்திற்கு அப்பாற்பட்டு குழப்பமான கலவை உள்ளது என்று உணர்த்துகிறார். சந்தோஷ் பெரளி தனது “விரக்தி என்னும் கவிதையில் ஒரு தோணிக்காரன் தனது பயணிகள் யாரும் இல்லாமல் ஆற்றின் திசையில் கடலை நோக்கிப் புறப்பட்டான் என்று பதிவு செய்யும் போது தேடலின் உச்சத்தில் ஒருவன் தன்னைச் சுற்றிவளைத்துள்ள எல்லாவற்றையுமே தாண்டிச் செல்வது உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

சேரங்குலத்தான், செல்மா மீரா, இடையகுடியிருப்பு கே.எம்.அசோக் மற்றும் காதல் மிர்தாதி ஆகியோர் காதலைப் பற்றிக் கவிதைகள் வடித்துள்ளனர். அவர்கள் நிறைய கவிதைகளை வாசித்தால் பல பரிமாணங்கள் உள்ள கவிதைகளை வடிக்கும் சாத்தியங்கள் பற்றி அறிந்து கொள்ள இயலும்.

க.அம்சப் பிரியா. “போர்க்குரலாகும் கவிதைகள்” என்று தேர்ந்தெடுத்துள்ள கவிதைகளில் ஆதவன் தீட்சண்யா பெண் சிசுக்கொலையைச் சாடுகிறார். அன்பாதவன் கடவுளர் பெயர்களைச் சுமப்பது சாதி மேலாதிக்கத்துக்கு ஒப்புதளிப்பது என்கிறார். அடுத்த உணவுக்கு வழியில்லாத விவசாயத் தொழிலாளிகளின் நிலை பற்றி சி.வெங்கடேஷ் காலங்காலமாக இது மாறவில்லை என்பதைக் கூர்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.  விஷ்ணுபுரம் சரவணன் கருகிய பயிரைத் தடவும் விவசாயி கருவை இழந்த தாயைப் போல வேதனைப் படுகிறான் என்று உருவகப் படுத்தி உள்ளார். கனகராஜன் குடிசைகள் அனேகமாக வெள்ளத்தில் மூழ்கியோ, தீயில் கருகியோ வீணாகின்றன. எப்படியிருந்தாலும் அரசியலுக்கு நிச்சயமாகப் பயன்படுகின்றன என்று கூர்மையாகப் பதிவு செய்துள்ளார்.  சக்தி ஜோதி என்பவர் பெண் கவிஞர். தான் வேங்கை மரத்துப் பாலில் சிறுவயதில் பொட்டிட்டுக் கொண்டதை நினைவு கூர்ந்து தன் பெண் குழந்தைக்குப் பொட்டிடவென்று தேடுகிறார். அந்த மரத்தையே காணவில்லை.  இளம்பிறையும் பெண் கவிஞரென்றே தோன்றுகிறது. அவர்  குழந்தையை ஏமாற்றி விட்டுப் பணிக்குச் செல்லும் இளம் தாயைப் பற்றிய கவிதை பதிக்கிறார்.  லட்சுமிக் குட்டி “கண்மணி ராசா” என்ற பெயரில் வித்தியாசமான ஒரு கவிதையில் ஏகலைவா வா இங்கே கணிப்பொறிக்குக் கட்டை விரல் தேவையில்லை என்று புதுயுகம் பிறந்து விட்ட பெருமிதம் காட்டுகிறார். ஆனால் தொழில் நுட்பம் அதிகார அடுக்குகளை கலைத்துப் போட்டுவிட்டதா என்ன? ரமேஷ் பிரேதன் ரசாயனம் மாசு படுத்திக் கொல்லும் மீன்களையும், சமுதாயம் கொன்றுவிடும் காதலையும் காதலர்களையும் ஒப்பிடுகிறார்.  அய் குங் சீனா சோஷலிசக் கவிதையில் குடை தான் மழையிலும் வெய்யிலிலும் காய்வது பற்றிப் பொருட்படுத்தாமல் மக்கள் எந்தக் காலத்திலும் மழை வெய்யிலில் வாடக் கூடாது என்று விரும்புவதாகக் காண்கிறார். பெ.நா.சிவம், மாஜினி இருவரும் பசுமை, மாசு என்று பேசும் வளர்ந்த நாடுகள் பேரழிவு ஆயுதங்களை உருவாக்கும் முரண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

சென்னி மலை தண்டபாணி வணிக எழுத்துக்களைச் சாடும் விதமாக “எப்படி அணைப்பாய் சொல்” என்னும் கவிதையில் காரம் அதிகம் இருக்கிறது. கூர்மை இன்னும் கொண்டுவந்திருந்தால் கவிதையின் நோக்கம் நிறைவேறி இருக்கும்.

கோசின்ரா அகதிகளின் கடவுள் என்னும் கவிதையில் அகதிகளின் நிலையை மையப் படுத்துகிறார். தலைப்பை எழுதிப் பிறகு கவிதை எழுதி இருக்கிறார். கவிதையை எழுதிய பிறகு தலைப்பை எழுதி இருந்தால் கவிதை இந்த அளவு திசை இல்லாமல் போயிருக்காது.

குறுங்கவிதைகளில் ஹரணியின் தலைப்பே இல்லாத கவிதை வீட்டில் உள்ள வசதி ஒரு பொருட்டல்ல அதனுடனான நினைவுகளே என்கிறார். சுப்ரபாரதி மணியன் மரம் என்பதை சிறுவர்கள் அகராதியில் தேடியே புரிந்து கொள்ளும் நிலையைக் காட்டுகிறார். மறதி என்னும் கவிதையில் இளைய இன் குலாப் நினைவுகளைப் பற்றி உதிரியான அடுக்குகளாலான ஒரு கவிதை வடித்துள்ளார். க.ரசித் கான் காதலர் தினம் வாழ்க எனவும் வணங்காமுடி தமிழ் ஒளி என்னும் கவிஞருக்கு அஞ்சலியாகவும் கவிதைகள் எழுதியுள்ளனர்.

ஆவராணி ஆனந்தனின் ஹைக்கூ கவிதைகள் எந்த அளவு ஹைக்கூ என்று அதில் தேர்ந்தவர்கள் கூறலாம். ஆனால் குறுகிய பதிவுகளில் கூர்மையாக சமூக அவலங்களைச் சாடியிருக்கிறார். இளைஞரான இவரையும், கவிவாணனையும்  ஒப்பிட ஞானச் செல்வனின் நீண்ட கவிதையில் இலக்கு எட்டப்படவேயில்லை. தொலைக்காட்சிகளி, திரைப்படத்தில் , நாம் பேசும் தமிழில் தமிழ் என்பதைத் தேடித் தான் பார்க்க வேண்டும். அந்த அளவு கலப்படம். இல்லையா? வாசிப்போரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. அப்துல் ரகுமானின் நீண்ட கவிதையில் ஆதங்கம் வெளிப்படுகிறது.

கவிதைகள் பெரிதும் சமூக அவலங்கள் பற்றியவை. இது நம்பிக்கை தருவது. இனிய உதயம் இளைய மூத்த கவிஞர் இருவருக்குமே சமமாக இடம் தந்து கவிதைக்கு நிறைய பக்கங்கள் ஒதுக்கி வாசிப்பை நல்ல அனுபமாக்குகிறது.

கட்டுரைகள் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s