நல்ல குலம் எது? தீய குலம் எது? -நாலடியர் நயம்
நல்ல குலமென்றுந் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை – தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்
(அதிகாரம்: தாளாண்மை)
சொல்வள வல்லால் – சொல்வளம் மட்டுமே வேறொன்றுமில்லை
தொல் சிறப்பு- பழம் பெருமை – மூதாதையர் பற்றிய பெருமிதம்
ஒண் பொருள் – மதிப்பான பொருள், மதிப்பு தரும் உடமை
ஆள்வினை- சாதிக்கும் ஆற்றல்
பொருள்: நல்ல குலம் என்பதும் தீய குலம் என்பதும் வெற்றுச் சொற்களே. அதில் பொருள் ஏதுமில்லை. பழம் பெருமை பேசுவதும் அதே போல அர்த்தமற்றதே. ஒரு குலம் நல்ல குலம் என்றால் அவர்கள் தவம், கல்வி, சாதிக்கும் ஆற்றல் இவற்றைக் கொண்டிருப்பார்கள்.
பெரிய தியாகம் செய்த தேசியத் தலைவர்கள் என் ஜாதியாக்கும் என்று ஒரு பக்கம் மார்தட்டி மறுபக்கம் அவர்கள் பிம்பத்தை ஜாதி என்னும் சிறிய வட்டத்துக்குள் அடைக்க முயல்வதைக் காண்கிறோம். இந்த வேலையைச் செய்யும் ஜாதி அமைப்புகளோ அதன் தலைவர்களோ என் ஜாதியில் பெண் கல்வியே தலையாயது. என் ஜாதியில் பெண் சிசுக் கொலை என்பது கிடையவே கிடையாது. ஏழைகள் தம் காலில் நிற்க நாங்கள் உதவுவோம். தன்னம்பிக்கை மிக்கவர் சாதனையாளர் கல்வியாளர் எந்த ஜாதியில் இருந்தாலும் அவரை எங்களுக்கு வழி காட்ட அழைத்து நாங்கள் இன்னும் உயருவோம். நாட்டு நலனுக்காக, மொத்த சமூகத்தின் மேன்மைக்காக நாங்கள் எங்கள் ஜாதியினர் முன்னோடியாக செயற் படுவோம். எங்கள் மூதாதையரின் சமூக நலன் பேணும் குணத்தை நாங்கள் விஞ்சுவோம். இப்படி எந்த ஜாதியாவது பேசுகிறதா? மனித நேயம் எங்கள் பண்பு. எல்லோரும் வணங்கும் சேவை மனப்பாங்குக்கு எங்கள் ஜாதி எடுத்துக்காட்டு. இப்படி யாராவது கூற வாய்ப்பிருக்கிறதா?
வரப்புயற நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
என்று அவ்வையார் கூறியதற்கு என்ன பொருள் ஆக்கபூர்வமான மக்களின் நாடே உயர்ந்ததாகும். நல்ல குலம் என்று சாதனைகளால் நேர்மறையான நடவடிக்கைகளால் தம் குலத்துக்கும் நாட்டுக்கும் பயன் பட வேண்டும். ஜாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வு பேசி சமுதாயத்தைத் துண்டாடக் கூடாது.