பனிச் சிற்பத்துக்கு சூடு வைக்காதீர்


(image courtesy:http://www.fotosearch.com)

உலகப் புகழ் பெற்ற தலைவர்கள், கலைஞர்கள் , எழுத்தாளர்கள் மற்றும் புகழ் பெற்ற பல துறையினர்:

அமெரிக்காவின் இரண்டாவது அதிபரான ஜான் ஆடம்ஸ்
உட்டி ஆலன் – பிரிட்டிஷ் சினிமா டைரக்டர்
ஆர்ட் புச்வால்ட்- ஆங்கில எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர்
அகதா கிரிஸ்டி – ஆங்கில திகில் எழுத்தாளர்
டயானா- அமரராகிவிட்ட பிரிட்டிஷ் இளவரசி
சார்லஸ் டிக்கன்ஸ்- ஆங்கில எழுத்தாளர்
சார்ல்ஸ் டார்வின்- விஞ்ஞானி
எமிலி டிக்கின்ஸன் – அமெரிக்க கவிஞர்
டி எஸ் எலியட் ஆங்கில கவிஞர்
வில்லியம் ஃபாக்னர் – அமெரிக்க எழுத்தாளர்
க்ரஹாம் க்ரீன் – ஆங்கில எழுத்தாளர்
சாமுவேல் ஜான்ஸன்- அகராதி உருவாக்கியவர் எழுத்தாளர்
ஆன்ஜலினா ஜோலி – அமெரிக்க நடிகை
ப்ரான்ஸ் காஃப்கா – செக்கோலேவேஸ்கிய எழுத்தாளர்
அகிரா குரோஸவா – ஜப்பானிய சினிமா இயக்குனர்
ஆபிரகாம் லிங்கன்- அமெரிக்க ஜனாதிபதி
மைக்கேல் ஆன்சலோ- இத்தாலிய ஓவியர் மற்றும் சிற்பி
மரிலின் மான்றோ – அமெரிக்க நடிகை
ஐஸக் ந்யூட்டன்- ஆங்கில விஞ்ஞானி
ஜே கே ரௌலிங்க் ஆங்கில எழுத்தாளர்
ப்ரூக் ஷீல்ட்ஸ் – அமெரிக்க நடிகை
லியோ தால்ஸ்தாய் – ரஷிய எழுத்தாளர்
மார்க் ட்வைன் – அமெரிக்க எழுத்தாளர்
ஆஸ்கார் வைல்ட் – நாடக ஆசிரியர்
விர்ஜீனியா உல்ஃப்- ஆங்கில நாவலாசிரியர்
போரிஸ் எல்சின் – முன்னாள் ரஷிய அதிபர்

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு என்ன ஆனது?

இவர்கள் அனைவருமே உலக அளவில் கலையில், அரசியலில் அல்லது வெவ்வேறு துறைகளில் உலக அளவில் பாராட்டப்படும் சாதனையாளர்கள். ஆனால் அவர்கள் அனைவருமே பரிதாபத்துக்குரியவர்கள். ஆமாம். மன அழுத்தம் என்னும் கொடிய நோயுடன் வாழ்நாளெல்லாம் போராடியவர்கள். போராடுபவர்கள்.

நம் எல்லோருக்குமே அகம் என்று தமிழிலும் EGO ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் ஒரு சுயம் உண்டு. அது மட்டுமே நம்மை தன்மானத்துடனும் ஆக்கபூர்வமாகவும் வாழ வைக்கிறது.  அதே போல் சொரணை (SENSITIVITY) நமக்கு உண்டு. அது நம் மென்மையான மனப் பிடிப்புகள் அல்லது நாம் பேணும் சில பிடிமானங்கள் சம்பந்தப்பட்டது. இது மன அழுத்தம் ஏற்படுகிறவர்களுக்கு சற்றே அதிகம் அல்லது கன்னாபின்னாவென்று அதிகம். இதன் பின்விளைவே அவர்கள் காயப்படும் காரணங்கள், சம்பவங்கள், நேரங்கள் மற்றவரை ஒப்பிட அதிகம். மற்றவர் அப்படியே காயப்பட்டாலும் உடனே அதிலிருந்து மீண்டு வந்து தமது அன்றாடப் பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் மன அழுத்தம் நோய் என்னும் அளவு ஆனவர்களுக்கு ஒரு காயம் மட்டுமே அவர்களை முடக்கிப் போடும். எப்படி முடக்கிப் போடும் . ஒரு தோல்வி, அவமதிப்பு, ஏமாற்றம் அது போனால் போகட்டும் என்று விட்டுவிடாமல் அதையே நினைத்து கடுமையாக மனம் சோர்வடைந்து இறுதியில் மன அழுத்தத்தில் வலியில் துடிப்பார்கள். ஒரு நிலையில் முற்றிலும் செயலிழந்து பக்கவாதம் வந்தது போல மன அளவில் ஆகி விடுவார்கள்.

பக்கவாதம் என்னும் நரம்பியல் செயலிழப்பு பாதிக்கப் பட்டவரை நாம் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கும். உடலின் ஒரு பகுதி செங்குத்தாக – வலது அல்லது இடது- பாதிக்கப்பட்டு நாக்கு கூட பாதி புரளாததால் பேச்சும் குழறி இருக்கும். அபூர்வமாக முழுவதும் பாதிக்கப் பட்டு சுய நினைவு இருந்த போதும் உடல் இயக்கம் முழுமையாகப் பாதிக்கப் படுவதுண்டு. இப்படி பாதிக்கப்பட்டவருக்கு மருந்துகள் தவிர, உடல் உறுப்புக்களை துவக்கத்தில் செயற்கையாக அசைப்பார்கள். உதாரணத்துக்கு ஒரு பந்தை கையில் வைத்து விரல்களை சேர்த்து மூடும் பயிற்சி. முதலில் இன்னொருவர் உதவியுடன் துவங்கி படிப்படியாகத் தானே செய்வது. அதன் மூலம் ஒருவருக்கு மூளையில் செயற்படாமற் போன பகுதி மீண்டு செயற்படும் என்பது மருத்துவம்.

இப்படி உடல், நரம்பு செயலின்மையில் ஒருவர் எப்படி பாதிக்கப் படுகிறாரோ அதே போலத் தான் மன அழுத்தம் கொண்டவர் பாதிக்கப் படுகிறார். திடீரென எல்லாமே மறந்துவிட்டது போல அப்படியே வெறுமையாய் இருக்கும் மனது. சிறு விவரங்கள், அலுவலக சாவி எது வீட்டு சாவி எது, கடவுச் சொல் எது எல்லாமே மறந்து விடும். மன அழுத்தத்தின் தாக்கம் முதலில் ஏதேனும் ஒரு சிறு கசப்பான சம்பவத்தில் தொடங்கும். அந்த சம்பவம் ஏற்கனவே கவ்வத்துவங்கி இருந்த மன அழுத்தத்தை ஒரு உச்ச கட்டத்துக்கு இட்டுச் செல்லும். அந்த உச்ச கட்டம் தனிமையில் இருக்கும் முதல் நொடியிலேயே துவங்கி சில மணி நேரங்களில் தாண்டவமாடும். உலகை விட்டு முழுவதும் வெட்டப் பட்டுத் தனித்துப் போன ஒரு மன நிலை நோயாளியிடம் தெரியும்.  நோயாளி ஒரு சில காரணங்களுக்காகப் போராடுவார். தான் நேசிக்கும் யாரோ ஒருவர், தன்னை மானத்துடன் வாழ வைக்கும் வேலை இவற்றையும் இழந்து விடுவோமோ இது ஏன் இந்தப் பாடுபடுத்துகிறது என்று எதிர்த்துப் போராடுவார். அழுவது, அல்லது எதையாவது எழுதிப் பார்ப்பது, சென்ற முறை மன அழுத்தம் தாக்கிய போது எப்படித் தப்பித்தேன் என்று நினைத்துப் பார்ப்பது இவ்வாறு கடுமையாகப் போராடுவார்.

அப்போது அவருக்குள் இருக்கும் சோகமான நிலை, அவர் மனதில் ஏற்படும் வலி, தனியாக சமுதாயத்தால் விடப்பட்டு விடுகிறோமே என்னும் விரக்தி, இவை அனுபவத்தவருக்கு மட்டுமே புரியும் எந்த அளவு ரணமானவை என்று. இந்த ஒரு நொடியில் கொஞ்சமாவது நடமாடுமளவு தன்னை மீட்டுக் கொள்வதோ அல்லது தற்கொலை செய்து கொள்வதோ இரண்டில் ஒன்று நடக்கும். அனேகமாக இந்த நிலையில் தன்னை நேசிப்பவர் என்று நம்பும் யாராவது ஒருவரை நோயாளி தொடர்பு கொள்வார். அனேகமாக எதிராளிக்கு இவர் நிலை பிடிபடவே படாது. இவரது வலியில் இவர் தாறுமாறாகப் பேசுவார் அல்லது ஒன்றுமில்லை என்று பேச்சை மாற்றி விடுவார். இது நம்மை யாருமே புரிந்து கொள்ளவில்லை. நம் வலியும் போராட்டமும் யாருக்கும் ஒரு பொருட்டே அல்ல என்னும் அவரது சோக எண்ணத்தை பெருந்தீயாக வளர்க்கும். அப்போது இவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று எப்படியோ நோயாளி எழுந்து நின்று இயங்கத் துவங்குவார் ஆனால் மன அழுத்தத்தின் தாக்குதல் தொடரும். பல நாட்கள், பல மாதங்கள் என அது தொடரும். அந்த நாட்களில் அனேகமாக நட்பு வட்டத்தில் மிஞ்சி யாரேனும் இருந்திருந்தால் அவரையும் இவர் கணக்கில் இனி எடுத்துக் கொள்ள வேண்டாம் என மிகவும் தனிமைப் பட்டிருப்பார்.

இப்படியாக அனேகமாக எல்லா மன அழுத்த நோயாளிகளும் தனித்துப் போனவர்களே. ஒரு வலியும், ஒரு தனிமையின் வெறுமையும் இவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். அந்த துரத்தலில் இருந்து தப்பிக்க இவர்கள் தம்மிடம் இருக்கு ஒரே பலமான கற்பனை வளத்தை, படைப்பாற்றலைப் பயன் படுத்தி ஓவியம், இலக்கியம் என பெரிய படைப்புக்களைக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு துறையிலும் இதை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் சோகமென்னவென்றால் இந்த விடுதலை தற்காலிகமானதே. மறுபடி மன அழுத்தம் தாக்கும். மறுபடி அதே போராட்டம். மன அழுத்தம் மிகவும் கொடுமையான வியாதி. அது அனேகமாக நீங்குவதே கிடையாது. மருந்துகள் அதன் மிருக பலத்தின் முன் ஒன்றுமே கிடையாது. அதனால் பாதிக்கப் பட்டவர்கள் சபிக்கப் பட்டவர்களே. அது பரம்பரை -மரபணு- காராணமாக வருகிறதோ இல்லை தானே வந்ததோ பீடிக்கப் பட்டவர் எஞ்சிய வாழ்நாளைப் போராடியே கழிக்க வேண்டும்.

ஒருவரை உண்மையாக நேசிப்பவர் அவருக்கு ஓரளவு ஆறுதல் தரும் வார்த்தைகள் கூறி அவரது நிலை மோசமாகாமல் தடுக்கலாம். ஆனால் கசப்பான உண்மை அப்படி நேசிப்பவருக்குக் கூட இவரது நிலை காலப் போக்கில் அலுப்பைத் தந்து அவர் சாதாரணமாக இருப்போரிடம் நிம்மதியாகப் பழகத் துவங்கி இவரைத் தவிர்க்க முடிய வில்லை என்றால் மட்டுமே இவருக்கு ஆறுதல் தருவார்.

மன அழுத்தம் உள்ளவர்கள் தான் சரியில்லை என்பதை ஒப்புக் கொண்டு போராடியபடி வாழப் பழக வேண்டும். தன்னிடம் எஞ்சியுள்ள உறவுகளை இழக்காமலிருக்க அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் உணர்வு பூர்வமான ஆதரவை எதிர்பார்க்காத மன வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது ஒன்றே போகிற ஊருக்கு வழி.

உங்களுக்குத் தெரிந்து நீங்கள் நேசிக்கும் நோயாளியைக் காயப் படுத்தி விடாதீர்கள். கற்சிலைக்கு சூடுவைத்தால் அது அப்படியே  நிற்கும். பனிச் சிற்பத்துக்கு சூடு வைத்தால் அது உருக்குலைந்து போகும்.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to பனிச் சிற்பத்துக்கு சூடு வைக்காதீர்

  1. Pingback: மன நோயை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் – ஆரோகணம் | tamilwritersathyanandhan

  2. Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s