துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
(அதிகாரம்: துறவு)
யாதனின் யாதனின் – எந்தத் துன்பம் எதன் மீது உள்ள பற்றால் வருமோ
நீங்கியான் – அந்தப் பற்றை விட்டுவிட்டால்
நோதல் – துன்பம்
எதன் எதன் மீது உள்ள பற்று நீங்குகிறதோ அதன் அதனால் வரும் துன்பமும் நீங்கி விடும்.
சுனில் கவாஸ்கர், கபில்தேவ் இருவருமே விளையாடிக் கொண்டிருந்த காலம். கொல்கத்தாவில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா பரிதாபமாகத் தோற்றது. அப்போது ரசிகர்களில் சிலர் இந்திய அணி வீரகளைத் தாக்குவதற்காகப் பாய்ந்தார்கள். காவல்துறை தலையிட்டு அவர்களை வழக்கமான வண்டியில் இல்லாமல் வெவ்வேறு வண்டிகளில் வெளியே கொண்டு வந்து பாதுகாப்பாகத் தங்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இத்தனை நாள் வீரர்களை உற்சாகப் படுத்திய ரசிகர்களுக்கு என்ன ஆனது? இந்திய அணியின் மீதும் அதன் வெற்றியின் மீதும் அவர்கள் வைத்திருந்த பற்று, தோல்வியைக் கண்டதும் அவர்களை மோசமாகக் காயப்படுத்தியது. அந்த வேதனையில் அதற்குக் காரணமானவர்கள் மீது வெறுப்புத் தோன்றியது.
எந்தப் பற்று சந்தோஷத்துக்குக் காரணமாயிருந்ததோ அதே பற்று துக்கத்துக்குக் காரணமாகி விடுகிறது. வளர்ப்பு நாயின் வாஞ்சையும் விசுவாசமும் அந்த அளவு மனதை மகிழ்வித்தது. அது காணாமற் போனதும் பெரிய பணக்காரரின் வீடு சூனியமாகிப் போனது.
சரி. ஒரு சாதாரண மனிதன் பற்றே இல்லாமல் துறவறம் பூண்டு காவி உடுத்து குடும்பத்தை விட்டு தனியே போக வேண்டுமா?
திருவள்ளுவர் இதைத் தான் சொல்கிறாரா?
இல்லை. கட்டாயமாக அவர் உணர்த்தும் பொருள் அது இல்லை.
பற்று இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை இல்லை. குடும்பம், நட்பு, நாடு, மொழி எனப் பற்று இயல்பானதே. புழங்கும் பொருட்களின் மீது, இதுவரை கிடைத்த வசதிகள் மீது என்று பற்றுக்கு எல்லையே இல்லை. பற்றுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போவதும், பற்றின் பிடிமானம் மூச்சுமுட்டும் அளவு இறுகுவதும், பெரிய துன்பத்துக்குக் கட்டியம் கூறுவதாகும்.
பற்றுக்களைக் குறைத்துக் கொள்வதும், நம்மை மற்றவர் பற்றும் போது அவர்களுக்கு அதைப் புரிய வைக்க முடியாவிட்டாலும், அதை வளர்த்து விடாமல் இருப்பதும் நல்லது. துன்பங்களின் தாக்கம் பற்றின் அளவை ஒட்டியே இருக்கிறது.
பிறருக்கான கடமையை நாம் செய்து முடிக்கும் போது மனம் நிம்மதி அடைகிறது. பிறரின் மீது பற்றில்லாமல் இருந்தால் மட்டுமே அந்தக் கடமைகளை நாம் நடுநிலையாகவும் சுயநலமின்றியும் செய்ய இயலும்.
துன்பத்தின் காரணத்தை வள்ளுவர் துல்லியமாகக் கூறிவிட்டார். எந்த அளவு விடுபடுகிறோம் என்பது நம் பாடு.