நல்ல நண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? – நாலடியார் நயம்
நல்லார் எனத்தா நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமிஉண்டு; நீர்க்கு நுரை உண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு
(அதிகாரம் : நட்பிற் பிழை பொறுத்தல்)
எனத்தா – என, தான்
நனி விரும்பி – மிகவும் விரும்பி
புல்லிதழ்- மெல்லிய பசுமையான இதழ் (இந்த இடத்தில் பூவின் காம்புக்கும் பூவுக்கும் நடுவே உள்ளே இலை போன்ற பகுதி பொருளாகிறது)
குறிப்பு: நல்லார் அல்லார் என்னும் இரு பதங்களும் இந்தப் பாவில் சாதாரணமான அதாவது கடுமையில்லாமல் உபயோகிக்கப் பட்டிருக்கின்றன. நல்லார் எனபது இனிய குணங்கள் உள்ளவர். பழக இனியவர் என்னும் பொருளில் வருகிறது. அல்லார் என்பது அது நாம் எதிர்பார்த்த அளவு இல்லாதவர் என்னும் பொருளில் வந்துள்ளது. உவமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.
பொருள்: நாம் மிகவும் பிடித்துப் போய் இனியவர் என்று பழகிய ஒருவர், நாம் எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் நாம் அதைப் பெரிது படுத்தக் கூடாது. நெல்லில் உமி உண்டு. நீரில் நுரை உண்டு. பூவில் புல்லைப் போல மெல்லிய இலை ஒன்று உண்டு.
“கராத்தே கிட்” என்று ஒரு படம். அது ஜாக்கி சானின் வணிக படம் தான். இருந்தாலும் ஒரு குழந்தை போராடி வெல்லும் வீரம் நம்மை மிகவும் ஈர்க்கும். அந்தப் படத்தின் மிகவும் முக்கியமான பகுதி (தான் அணிந்திருக்கும் )”கோட்” போன்ற அங்கியை 40 முறை 50 முறை கழற்றி ஒரு கொக்கியில் மாட்டி, எடுத்து, மீண்டும் அணியும் படி ஆசானான ஜாக்கி சான் கூறுவார். குழ்ந்தை மிகவும் எரிச்சல் அடையும். பின்னாளில் பயிற்சி சண்டை, மட்டும் போட்டியில் நடக்கும் சணடையில் அந்தப் பயிற்சி உறுதுணையாகும்.
நமக்கு ஒரு கலையைக் கற்றுத் தந்தவர், பெற்றோர், கண்டிப்பான பள்ளி ஆசிரியர், கண்டிப்பான மேலதிகாரி இவர்கள் ஆரம்பத்தில் நமக்கு மிகவும் எரிச்சல் ஊட்டியவர்களே. ஆனால், நாம் மிகவும் பயனடைந்தது அவர்களால் தான். ஆரம்பத்தில் அவர்களது திறமை, ஈடுபாடு, அனுபவத்தால் நாம் ஈர்க்கப் பட்டு, பின்னால் எரிச்சல் பட்டு காலப்போக்கில் முழுமையாக அவர்களைப் புரிந்து கொள்கிறோம்.
குறிப்பாக இளம் எழுத்தாளருக்குத் தன்னை வழி நடத்தும் மூத்த எழுத்தாளரிடம் இந்த எரிச்சல் ஏற்படும். நாம் நன்றாக எழுதிய கவிதையை அவர் ஒன்றுமே இல்லை என்று சொல்லி விடுவார். நாம் சுமாராக நினைத்த கவிதையின் ஒரு பகுதி நன்றாக வந்திருப்பதாக கூறி, மேலும் அதை எழுதச் சொல்லுவார். உரைநடையில் பலவேறு வடிவங்கள், கதை, கட்டுரை என மாற்றி எழுதச் சொல்லுவார். கவிதை நிறைய வாசிக்கச் சொல்லுவார். பொதுவாகவே நிறைய வாசிக்கச் சொல்லுவார்.
உமியை விட்டு நெல்லைப் பார்க்கும் மனப்பாங்கு இருந்தால் பல நல்ல நண்பர்களை இழக்க வேண்டியே வராது.