சிறுகதை
பிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா?
சத்யானந்தன்
இரவு மணி பதினொன்றரை. பெர்த் அதிர்ந்தது ஒலியுடன். அரைத் தூக்கத்திலிருந்து ஆழ்ந்த தூக்கத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் போது ரயில் டிக்கெட் பரிசோதிக்கும் டிடீஈ எழுப்பினார். எனது மொபைலில் இருந்த டிக்கெட் பற்றிய குறுஞ்செய்தியை அவரிடம் அந்த அரைத் தூக்கத்தில் காட்டுவது என்பது பெரிய சவாலாக இருந்தது. முன்னொரு முறை மேல் பெர்த்திலிருந்து அவரிடம் குறுஞ்செய்தியைக் காட்ட முயன்ற போது மொபைல் கீழே விழுந்து உயிரிழந்தது. அப்போதும் அவரோ சரிபார்த்த பின் தான் நகருவேன் என்கிறார். என் அதிர்ஷ்ட்டம் என்னை விட சற்றே இளையவளாய் ஒரு கல்லூரி மாணவி இருந்தாள். அவளது மொபைலில் ஐஆர்சிடிசி இணைய தளத்தில் என் உபயோக அடையாளத்தை அடைந்து அவர் சரிபார்த்தல் முடிவடைந்தது. இது போல யாராவது நல்ல தூக்கத்தைக் கலைத்து விடும் போது ஒரு பெரிய சவால் மறுபடி தூக்கம் வர நேரமாகும். இரண்டு மூன்று நாட்களாகவே ராஜு பல ஆயிரம் மைல்கள் கடந்து யூஎஸ்ஏயிலிருந்து என் தூக்கத்தைக் கெடுத்து வருகிறான். முதலில் ஃபேஸ் புக் வழியாக என்னைத் தொடர்பு கொண்டான். என் குடும்பம் குழந்தைகள் புகைப்படத்தில் ‘எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று அவன் குறிப்பு எழுதிய போது தான் எனக்கும் அவனுக்கும் உள்ள ஒரு பொது நட்பு வட்டம் மூலமாக அவன் என்னைக் கண்டுபிடித்திருக்கிறான் என்று அறிந்து கொண்டேன். அவனுடைய முகம் நிறையவே மாறியிருந்தது. மீசை போயிருந்தது. துரைராஜ் என்னும் பெயரை ராஜு என்று மாற்றிக் கொண்டிருந்தான். அவனது மனைவி மிகவுமே அழகாகவும் சிவப்பாகவும் இருந்தாள். அமெரிக்காவின் பல இடங்களில் கோட் சூட் அணிந்து மனைவியுடன் அவன் எடுத்துக் கொண்டிருந்த படங்கள் அவன் திருச்சி துறையூர் பக்கம் வாழ்ந்து படித்தவன் என்று கூறவே இயலாது. “டிடியீ ஐடி கார்ட் கேட்டா ஒரு டெர்ரரிஸ்ட் என்ன ஐடி காட்டினான்னு சொல்லு?” என்று நான் விழித்த போது “துப்பாக்கியை” என்று மொக்கை ஜோக் பேசிய ஆள் இல்லை அவன். ஃபேஸ் புக் கிலும் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு அங்கே இருந்தே தீர்வு சொல்லும் தோரணை இருந்தது.
கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் அவனிடமிருந்து எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவன் கடைசி அவன் குடும்பத்தில். மூத்த மூன்று பேரும் அவனுடைய அக்காக்கள். அதனால் அவர்களைக் கண்டுபிடித்து அவனது இருப்பிடம் அறிய தோதுப் படவில்லை.
கருணை என்னும் ஈரம்
கசிந்தால்
காதல் முளை விடும்
நிராகரிப்பு என்னும்
வெய்யிலில்
சருகாய் உதிர்ந்து விடும்
இந்த கவிதையை எனக்கு ராஜுவின் அண்ணன் மகள் சித்ரா அனுப்பிய போது நான்காம் ஆண்டு படிப்பு முடியும் தருணம். நான் வேலை கிடைத்து ஹைதராபாத் போய் விடுவேன் என்று அவளுக்கும் தெரியும். அப்போது நான் துறையூர் போவது மிகவும் குறைந்திருந்தது. புத்தனாம்பட்டிக் கல்லூரியில் மூன்றாண்டு படிப்பு முடித்திருந்த அவள் வீட்டில் இருந்தாள். ஒரு நாள் சித்ராவை நான் பேருந்தில் பார்த்த போது மொபைல் எண்களை பரஸ்பரம் தந்தோம். அதற்கு முன் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது. மறு நாளே ஒரு குறுஞ்செய்தி போல இந்தக் கவிதையை அவள் எனக்கு அனுப்பி இருந்தாள். அதன் பிறகு பல முறை நான் போன் செய்தும் அவள் பதிலளிக்கவில்லை. அவளது புகைப் படத்தையும் ரா ஜுவின் ஃபேஸ் புக்கில் பார்த்ததால் தான் அவன் கொடுத்த வேலையை நான் ஒப்புக் கொண்டேன்.
சித்ராவுக்குப் பிறகு ஓரிருவர் செய்த சங்கேதங்களை என்ன என்று தெரியாமலேயே நான் புறந்தள்ளியிருந்தேன். ஏனென்றால் யூகித்துக் கொண்டே இருக்கட்டும் என்று பெண்கள் ஊஞ்சல் போல மூன்று விதமான அசைவுகளைச் செய்து கொண்டே இருப்பதில் ஒரு வித லயிப்பு உள்ளவர்கள் என்றே தோன்றியது. அதே சமயம் பிறந்த ஊர்க்காரி என்பதால் சித்ரா என்மனதில் நீறு பூத்த நெருப்பாக இருப்பதாகவே தோன்றியது. இல்லையென்றால் ராஜுவின் அப்பா என்னை மதித்ததே இல்லை. அவரது நலம் அறிந்து அதை அவனுக்குத் தெரிவிப்பதில் அவ்வளவு ஆர்வம் எனக்கு வர வாய்ப்பே இல்லை.
இப்படி இறந்த காலம் என் இரவுத் தூக்கத்தைப் போக்கியதால் அரியலூர் லால்குடி எது தாண்டியதும் எனக்குத் தெரியவில்லை. நான் கண்விழித்த போது ஒரு பாலத்தை ரயில் கடந்து கொண்டிருப்பது மட்டும் தெரிந்தது. மேல் பெர்த்திலிருந்து எந்தப் பாலம் என்று யூகிக்க முடியவில்லை. காவிரியா? கொள்ளிடமா? கொள்ளிடம் என்றால் ஸ்ரீரங்கம் வரப் போகிறது. எதுவாயிருந்தாலும் துறையூர் பஸ்ஸைப் பிடிக்க இரண்டு ஸ்டேஷன்களுள் ஒன்றில் இறங்கித்தான் தீர வேண்டும். ரயிலின் சக்கரங்கள் கிறீச்சிட்டு நின்றன. அதிக ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சென்றிருந்ததிலிருந்தே தெரிந்து விட்டது இது டவுன் ஸ்டேஷன் தான். டவுன் ஸ்டேஷனிலிரிந்து கிட்டத்தட்ட நேர் கோட்டில் நடந்தால் மலைக்கோட்டை. வீட்டு வாயில்களில் இன்னும் கோலம் போடத் துவங்கவில்லை. தனியார் பால்காரர்களின் இரு சக்கர வாகன, மற்றும் மணி மற்றும் குரல்கள் மட்டுமே கேட்டபடி இருந்தன. திருச்சியிலோ அருகிலோ படிக்கும் இளைஞர்களுக்கு தெரிந்த இடங்கள் அனேகமாய் காவிரிப் பாலமும் மலைக் கோட்டையும் தான். மலைக் கோட்டையின் மீதே தெருக்களும் சிறிய ஊரும் உண்டு. காவிரிப் பாலம் மாலை வேளையில் காற்றும் ஓரளவு தனிமையும் கொடுக்கும். ஒரு நாள் காவிரிப் பாலத்தில் நானும் ராஜுவும் எதிர்காலம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதே அவனுக்கு ஐந்து இலக்க சம்பளம் வெளி நாடு என்னும் கனவுகள் இருந்தன. எனக்கு எனக்கு நல்ல மண வாழ்க்கை என்று ஒரு கனவு இருந்தது. இப்போது மண வாழ்க்கை என்பதே கனவுகள் இல்லாத நிதர்சனம் என்று தெளிவாகி இருக்கிறது.
துறையூர் பஸ் திருவானைக்கோவிலைத் தாண்டும் போதுதான் பழைய கொள்ளிடம் பாலத்தில் பஸ் போகாமல் “பை பாஸ்'” சாலையில் உள்ள புதுப் பாலத்தின் வழியாகச் செல்கின்றன என்பது புரிந்தது. திருவள்ளறை அருகே ஒரு புதிய தொழிற்சாலை புலிவலம் அருகே ஒரு புதிய கல்லூரி என்பது தவிர துறையூர் அருகே பெரிய மாற்றம் ஏதும் இல்லை. திருவள்ளறை மொட்டை கோபுரம் இன்னும் அப்படியே தான் இருந்தது. கரட்டு மலை எங்கள் பள்ளிக்கூடம் இவற்றைத் தாண்டி பஸ் ஸ்டாண்டில் பஸ் நின்ற போது தான் நான் எங்கே குளித்து உடை மாற்றுவது என்ற கேள்வி எழுந்தது. நான் இருந்த காலத்தில் துறையூரில் தங்கும் விடுதி எதுவும் இல்லை. இப்போது இருந்தது. ‘பவர் கட்’ ஸார் .. மெழுகுவர்த்தி இருக்கும். அட்சஸ்ட் பண்ணிக்கங்க என்றார் லாட்ஜ் மேனேஜர்.
மேட்டுத்தெரு ஓரு மைல் தூரமாவது இருக்கும் பஸ் ஸ்டாண்டிலிருந்து. நான் நடந்தே போனேன். ஊரைப் பார்த்தே நாளாகியிருந்தது. பாரதி தியேட்டர் கொஞ்சம் கடைகளால் சூழப் பட்டு இருந்த இடம் தெரியவில்லை என்பதைத் தவிர சின்னக்கடை வீதி அதே போலத்தான் இருந்தது. மேட்டுத் தெரு போகும் வழியில் பிரசன்னா தியேட்டர் கல்யாண மண்டபம் ஆகியிருந்தது. மாரியம்மன் கோவில் அருகே ஒரு சிறிய தெப்பக் குளம் முன்னே இருந்தது. இப்போது அதைக்காணவே இல்லை. மேட்டுத் தெருவில் சித்ராவின் வீட்டுக்கு அருகே போகும் போது ஒரு இளைஞன் இரண்டு சக்கர வண்டியைக் கிளப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவனிடம் விசாரித்த போது அம்மா கன்னிகா பரமேஸ்வரி கோயில் போயிருக்காங்க. வாங்க நான் அங்கே தான் போறேன்” என்றான்.
பெரிய கடைவீதியில் போலீஸ் ஸ்டேஷன் தாண்டி கன்னிகா பரமேஸ்வரி கோவில் வாயிலை நெருங்கும் போது சித்ரா எதிரே வந்து கொண்டிருந்தாள். நன்கு தடிமனாகி இருந்தாள். “வணக்கம் சந்திரன். வாங்க வீட்டுக்குப் போகலாம் சாப்பிட்டுப் பிறகு போகலாம்” என்றாள். “பிறகு ஒரு நாள் வரேன். கவிதையெல்லாம் எழுதறீங்களா? ” அதெல்லாம் அந்தக் காலத்தோட போச்சு”
“ராஜு அப்பாவை நீங்க தான் கவனிச்சிக்கிறீங்க போலிருக்கு. நிறைய போட்டோவெல்லாம் பேஸ் புக்ல பாத்தேன்”
“இல்லே சந்திரன். இப்போ எங்க ஹஸ்பன்ட் அவரை சென்னைல ட்ரீட்மென்டுக்காக அழச்சிக்கிட்டிப் போயிருக்காங்க…”
“அவரைப் பாக்கலாமின்னு நினைச்சேன்”
“கண்டிப்பா. எங்க மிஸ்டர் போன் நம்பர் தர்றேன். சென்னைக்கிப் போன உடனே அவரைக் கான்டாக்ட் பண்ணுங்க”
“உங்க நம்பரையும் தாங்க”
தந்தாள். இருவரும் குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரித்து முடித்த பின் கிளம்பினேன். சித்ராவின் மொபைல் எண் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பகல் பஸ் பிடித்து பெரம்பலூர் உளுந்தூர் பேட்டை விழுப்புரம் என்னும் பழகிய பாதையை வேடிக்கை பார்த்த படி சென்னை வந்து சேர்ந்தேன்.
சித்ராவின் கணவன் உடன் இருக்கும் ராஜுவின் அப்பாவை சந்தித்து பிறகு மறுபடி மெயில் கொடுப்பதாக ராஜுவுக்கு மெயில் அனுப்பினேன். அவன் நன்றி என்றான். சித்ராவின் கணவன் முதலில் என் அழைப்புக்களை ஏற்கவே இல்லை. பின்னர் சித்ராவிடம் பேசினேன். அவரே கூப்பிடுவார் என்றாள். ஒருவாரம் கழித்து அந்த ஆள் ஒருவழியாக போனை எடுத்து அந்த ஞாயிறு தாம்பரம் வந்தால் அழைத்துப் போகிறேன் என்றார். ஞாயிறு அன்று காலையில் போனை அவர் எடுக்கவே இல்லை. திங்கட் கிழமை மறுபடி போன் செய்தேன் ” பிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா?” என்றார்.