கூடா நட்பு எங்கே கொண்டு போய் விடும்? – நாலடியார் நயம்
செய்யாத செய்து’ நாம் என்றலும் செய்வதனைச்
செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும் -மெய்யாக
இன்புறூம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூம் பெற்றி தரும் (அதிகாரம் கூடா நட்பு)
செய்யாத செய்து’ நாம் – இயலாதவற்றை ‘நான் செய்வேன்’ என்பது
செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும்- செய்யக் கூடியவற்றைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதும்
இன்புறூம் பெற்றி – இன்ப நிலை (பேறு)
துன்புறூம் பெற்றி- துன்ப நிலை
பொருள்: தன்னால் செய்ய இயலாததைச் செய்வேன் என்று வாக்குறுதி தருவதும், தன்னால் செய்யக் கூடியது ஒன்றை, செய்யாமல் காலம் தாழ்த்துவதும், இன்பம் என்பது தேவையற்றது என்று ஒதுக்கியவருக்கும் (இகழ்ந்து சுகத்தைத் தள்ளி வைத்தவருக்கும் துன்ப நிலையையே தரும்)
நாலடியாரின் இந்த வெண்பாவின் பொருளை நாம் இது எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது என்று பார்த்தால் மட்டுமே பொருள் பிடிபடும். இந்தப்பா “கூடா நட்பு” என்னும் அதிகாரத்தின் கீழ் வருகிறது.
கூடா நட்பு என்னும் எச்சரிக்கை யாருக்குத் தரப் பட வேண்டும்? நேரான வழியில் போய்க் கொண்டிருப்பருக்கும் நல்ல பண்பான மரியாதையான வாழ்க்கை முறையில் இருப்பவருக்கும்.
அப்படி இருப்பவர்கள் கொடுத்த வாக்குத் தவறும் சூழலுக்கோ அல்லது போலியான வாக்குறுதி கொடுப்பதற்கோ ஒருக்காலும் ஒப்ப மாட்டார்கள். ஆனால் அப்படி அவர்கள் அதில் மாட்டிக் கொள்ள, கூடா நட்பு வழி வகுத்து விடும்.
ஒரு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். அவரை வீட்டினரும் சட்டை செய்வதில்லை “பெருசு பேசாம கெடந்தாப் போதாதா?” என்பது போலத் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பழைய மாணவர்களில் சிலர் எப்போதுமே அவரிடம் மதிப்பு உள்ளவர்கள். ஆனால் வெளியூரில் வேலை பார்ப்பதால் சில வருடங்கள் இடைவெளியிலேயே வந்து சந்திப்பார்கள். இதற்கிடையே படிக்கும் போதே தமிழில் ஆர்வமில்லாமல் இருந்த ஒரு மாணவன் (இப்போது உள்ளூரில் பெரிய வியாபாரியாக உலா வருபவன் ) திடீரென அவரிடம் வந்து அடிக்கடி சந்தித்து திருக்குறள், நாலடியார், கம்பராமாயணம் பற்றி எல்லாம் பேசுகிறான்.
ஆசிரியருக்கோ தன்னையும் மதித்து ஒருவர் வந்து போவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வீட்டினருக்கு சிறிய பரிசுகளைக் கொடுத்து அவர்களது நன்மதிப்பையும் அவன் பெற்று விடுகிறான். சில மாதங்கள் கடந்த பின் தனது மகனுக்கு மருத்துவக் கல்ல்லூரியில் தமிழ் நாட்டில் எங்குமே கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் முன்னாள் மாணவரான மந்திரியிடம் ஆசிரியர் சிபாரிசு செய்ய வேண்டும் என வேண்டுகிறான். சுற்று வழியில் மந்திரியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதல் பட்டியலில் வராவிட்டாலும் பின்னால் அடுத்த பட்டியலில் கொண்டு வர முடியும் என்று அவரைத் தொல்லை படுத்துகிறான்.
ஆசிரியரோ தன்னுடைய குடும்பத்துக்காகவே எந்த ஒரு அதிகாரியிடமோ மந்திரியிடமோ சிபாரிசுக்காகப் போய் நிற்காதவர். அவருக்கு ஊரில் உள்ள மரியாதையே அவரது நேர்மைக்கும் எளிமைக்கும் தான்.
ஒரு கணம் இந்த ஆளுக்காக அவர் பிசகினால் அவருக்கு நிறைய மன வருத்தம் ஏன்? அவமானமே கூடக் காத்திருக்கிறது.
அருமையான இன்றைய சூழலில் அனைவரும்
அறிந்திருக்கவேண்டிய கருத்து
சொல்லிச் சென்றவிதம் தெளிவாக மனதில்
பதிய வைத்தது .பகிர்வுக்கு நன்றி
Thank you sir