BHELக்கு உதிரிப் பாகங்கள் செய்து தரும் மாற்றுத் திறனாளிகள்
ORBIT(Organization For Rehabilitation of the Blind in Trichy) என்னும் நிறுவனம் நடத்தும் தொழிற்சாலை கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. 1973ல் ஐந்து விழியால் காண முடியாத மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியது இந்நிறுவனம். பின்னர் சலவை சோப்புகள் செய்யத் துவங்கியது. அதை அரசாங்கக் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் விற்றன. இதற்குப் பின் தொழிற்சாலை விரிவாக்கத்தின் போது பெல் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் செய்து தரும் அளவுக்கு உயர்ந்தது. இன்று இங்கே 82 தொழிலாளிகள். இவர்களில் 52 பேருக்குப் பார்வைத் திறன் இல்லை. 12 பேர் மாற்றுத் திறனாளிகள். சாதாரணமான பார்வைத் திறன் அற்ற மாற்றுத் திறனாளியான பி.ஆர். பாண்டி இத்தொழிற்சாலையின் தலைவர் ஆவார். 1977ல் இந்த நிறுவனத்தில் ஃபிட்டராகப் பணிக்கு சேர்ந்தவர்.
ஒவ்வொரு இயந்திரத்தையும் ஒரு மாற்றுத் திறனாளி இயக்க, பார்வை இழந்தவர் அவருடன் இணைந்து இயந்திரத்தைச் செலுத்துகிறார். இவ்வாறாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு இங்கே கிடைக்கிறது. முதலில் பயிற்சி, பின் அவரது திறனுக்கு ஏற்ற பணி என்னும் விதத்தில் தொழிற்சாலை நடத்தப் படுகிறது. ராணிப் பேட்டையில் 2005ல் இதே போன்ற ஒரு தொழிற்சாலை 15 பார்வைத்திறனற்றவர் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு துவங்கப் பட்டுள்ளது. ஆர்பிட் நிறுவனம் திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள பெல் தொழிற்சாலைகளுக்கு 20 வகையான உதிரிப் பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கிறது.
நாறது ஆண்டுகளுக்கு மேலாக விபத்துகளின்றி நடத்தப் படும் நிறுவனம் தொழிலாளிகளுக்குக் குடியிருப்புகளையும் கட்டி வருகிறது.
பெல் நிறுவனம் சமூகப் பொறுப்புக்கு (Corporate Social Responsibility) உதாரணமாகத் திகழ்கிறது. மறுபக்கம் மாற்றுத் திறனாளிகள் நடத்தும் நிறுவனம் மற்றவருக்கு இணையாக உதிரிகளைத் தயாரித்துக் கொடுப்பது அவர்களது திறனும் உழைப்பும் எந்த விதத்திலும் மற்றவர்களுக்குக் குறைவானதில்லை என்பதைக் காட்டும் விதமாக அமைகிறது. இவ்வாறாக, மாற்றுத் திறனாளிகள் சமூகத்தின் வலிமையான, உற்பத்தியும் லாபமுமான வணிகத்துறையில் பங்கேற்று சமூகத்தின் பொருளாதாரவளத்துக்கும் தங்களால் பங்களிப்பு செய்ய முடியும் என்று நிரூபிக்கிறார்கள்.
ஆரோக்கியமான சமூகம் இத்தகைய பங்களிப்பிலேயே உருவாகும்.
(News courtesy:Dinamani) (image courtesy:http://tpanand.blogspot.in/2012/01/meeting-project-objectives-differently.html)