போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17 சத்யானந்தன்


போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17

சத்யானந்தன்

Buddha_in_Sarnath_Museum_(Dhammajak_Mutra)

புரட்டாசி மாதம். தேய்பிறையில் சந்திரன் இருக்குமிடமே தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் அமாவாசை. வெய்யிற் காலமும், மழைக் காலமும் முடிந்து குளிர் நாட்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி இருந்தன. அதிக உஷ்ணமில்லாத தட்ப வெட்பம். கயை என்னும் நகரத்தை அடையும் முன்னே அதன் அருகே உள்ள ஒரு காட்டில் சித்தார்த்தன் இளைப்பாறினான்.

ஞானம், நிர்வாணம் என்னும் விடுதலை எனக்கு மட்டும் வேண்டுமென்றா நான் இந்தக் கடினமான வழியைத் தேர்ந்தெடுத்தேன்? துன்பங்களின்று விடுபடும் ரகசியம் எதுவோ அது எந்த எளியவருக்கும் புலனாக வேண்டும். அதை நான் உலகுக்கு உணர்த்துமளவு அது எளியதாக இருக்க வேண்டும். வைதீக மார்க்கத்தின் ஆராவார வைபவங்கள், விழாக்கள், சடங்குகள், வர்ண பேதங்கள் என்னும் அதீதம் ஒரு பக்கம். ஷ்ரமணர்களின் உபவாசம் மற்றும் கடுமையான நியமங்கள் மறு பக்கம். இடைப்பட்ட பாதை ஒன்று இருக்கவே கூடாதா? ஒரு ஏழைப்பெண் தூய மனதுடன் உணவளித்தாலோ பாதங்களைக் கழுவினாலோ கூட அது பிறழ்வு என்னும் கடுமையான அணுகுமுறையை மேற் கொண்டு செல்வதுதான் ஷ்ரமணமா? அப்படி என்றால் அதைத் தாண்டிச் செல்லும் இன்னொரு வழி தேவையே.

கௌடின்யனும் மற்ற சீடர்களும் இன்றில்லையென்றாலும், என்றேனும் என் வழி அன்புமயமானது என்பது புரிந்து மீண்டும் என்னுடன் பயணிப்பவராக, எண்ணற்ற மக்களின் துயர் துடைக்கும் எளிய ஒரு வழியைக் காட்டுவோராகக் கட்டாயம் உருவெடுப்பார்கள். இந்த இரவு மறைவது போல், அன்று அவர்கள் என்னை விட்டு விலகிச் சென்ற நேரமும் தற்காலிகமானதே. உறக்கமின்றி சிந்திப்பதும் ஓய்வில்லாது மேற்செல்வதும் தனி வழி செல்லும் சித்தார்த்தனின் வழக்கமாகி இருந்தன.

பொழுது புலர்ந்தது. சித்தார்த்தன் நதியில் நீராடித் தொடர்ந்து நடந்தான். வண்டிகளும் நடமாட்டமும் கயை என்னும் நகரைத் தான் அடைந்து விட்டேன் எனப் புரிய வைத்தன.

பூக்களும் பறவைகளும் நெடிதுயர்ந்த மரங்களுமாய் அழகிய வனம் ஒன்றைக் கடந்த சித்தார்த்தன், தன்னையுமறியாமல் அந்த வனத்துக்குள் நுழைந்தான். இனி ஞானம் சித்திக்கும் வரை இந்த வனத்திலிருந்து நீங்கக் கூடாது என்னும் எண்ணம் பொறியாக மனதுள் உதித்த போது ஒரு போதி மரத்தடியில் நின்றிருந்தான். விரிந்து உயர்ந்திருந்த போதி மர நிழலில் பத்மாசனமிட்டு அமர்ந்தான்.

தனி ஒரு மனிதனாக, எனக்கு மட்டும் விடுதலை என்பதுவா என் தேடல்? உலக மக்கள் யாவரும் உய்ய ஒரு வழி – மீளாத் துன்பங்களிலிருந்து அவர்களுக்கு விடுதலை – பிறப்பு, மூப்பு, மரணம், இன்னும் பிறப்புகள் மரணங்கள். உடலுக்குத்தான் இவை யாவும். உள்ளுறையும் அப்பழுக்கற்ற ஆன்மாவுக்கு இல்லை. இந்த உடல் நான் இல்லை. இதன் துய்ப்புகள் துன்பங்கள் – ஏன்? மரணமே கூட ஆன்மாவுக்கு இல்லை. உடலே நான், அதன் போக்கில் அது தேடும் எதிர் கொள்ளும் எல்லா அனுபவங்களும், ஆசை, நிராசை, மீண்டும் ஆசை, என்னும் மீளாச சக்கர சுழற்சி. புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் அதுவே வாழ்க்கைச் சக்கரம் என்பது மாயை.

மரணம் முக்தி இல்லை. மரணத்தில் விடுதலை இல்லை. மரிக்கும் முன் அந்த உயிர் தனது மனதின் அகம்பாவம் மற்றும் உடல் என்னும் தூண்களின் மீது எழுப்பிய ஆசை கோபுரம் அசையாமல் நிற்கிறது.

ஆசை சிறைப்படுத்துகிறது. எல்லா செயல்களின் காரணியாகிறது. சுவாசம் உடலில் உயிர் இருப்பதன் அடையாளம். ஆசைப்படுதல் வாழ்க்கையின் உயிர் நாடியான அடையாளம். ஆசையின் அலைக்கழிப்பு- நிராசை – மேலும் ஆசை- அலைக்கழிப்பு என்னும் சக்கர சுழற்சியில் இருந்து விடுபட முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பது போல எல்லா மனிதருக்கும் சாத்தியமாக வேண்டும். அந்த நம்பிக்கை நிறைவேறும் வரையான போராட்டத்தைத் தொடரும் சக்தியின் ஊற்று எனக்கும் என்னிலிருந்து எல்லோருக்கும் புலப்பட வேண்டும். நான் ஒரு சாதாரண மனிதனிடம் “உன்னைப் போன்றவனே நான். என் தேடலில் நான் கரை சேர்ந்தது போல உன்னாலும் முடியும்” என்று கூறும் ஞானம் எனக்கு வேண்டும்.

ஓயாமல் உழலும் மனம். அதன் போக்கிலே பேசப்படும் சொற்கள். அதே வேகத்தில் அது காட்டும் வழியில் செய்யப்படும் செயல்கள். மனம் பேச்சு செயல் என்னும் மூன்று முனைகளில் ஒரு மெல்லிய ஆனால் வலிய ஆசை நூல் பின்னிப் பின்னிப் பெரிய வலையாகிறது. வெளியேறவே முடியாத சிறையாகிறது. உனக்குள் இருக்கும் ஆன்மாவை – இன்னொரு மனிதனுக்குள் உறையும் அதே ஆன்மாவை – உனக்கே அன்னியமாக்குகிறது. ஆன்மாவுக்கும் சகமனிதனுக்கும் அன்னியமான மனிதன் மனிதநேயத்துக்கே அன்னியம் ஆகிறான்.

சொந்தம் என்றும் அன்னியம் என்றும் பிரிக்கும் மனப்பாங்கு நிலம், பொருள், சுகம் என்னும் தேடலிலே தான் தொடங்குகிறது. அது முடிவதே இல்லை.

ஆசையும் அகம்பாவமும் தனிமனிதனை மட்டுமா ஆட்டுவிக்கும்? ஒரு குடும்பத்தை, சமூகத்தை, அரசை, அரசனை ஆட்டுவித்துப் போரும் கொலையும் அழிவும் வழக்கங்களில் ஒன்றாகி விட்டன.

ஆயுதத்தின் கூர்மையும் வடிவமுமே இரு மனிதரை ஒப்பிட வேறுபடும். நிராயுதபாணியாக யாரேனும் நிற்கிறாரா? போரும் அழிவும் கொலையும் ஆசையின் குழந்தையான தன்னலமும் இல்லாத நிராயுதபாணி எங்கும் இல்லை.

சித்தார்த்தனான நான் பிறப்பதற்கு முன்பே இவை யாவும் இப்படியே தான் இருந்தன. இந்த சித்தார்த்தன் மரித்த பிறகும் இவனது உடல் அழிந்த பிறகும் விடை தெரியாத புதிராய் அது நீடித்தால்? அப்படி அது புதிராகவே இருந்தால் இவன் பிறந்து வாழ்ந்து மறைந்த காலகட்டத்தால் மனித உலகுக்கு என்ன பயன்?

எண்ணங்களைத் தாண்டும் தியானம் என்னும் கலை வசப்பட்டது.உடலின் இச்சைகளை ஒடுக்கும் உபவாசமும் பழக்கம் ஆனது.

ஆனால் மனித குலமே உய்ய வேண்டும் என்னும் என் பிரார்த்தனை ஏன் பரம்பொருளே! உனக்கு அற்பமாகத் தோன்றுகிறதா? மாயையில் மனித குலம் உழலுவது மறையவே கூடாதா? இடையறாது வேறு எதுவுமே தெரியாது இன்று ஒன்றையே வேண்டுகிறேன். உலகுக்குத் துன்பங்களினின்று விடுதலை ஒன்றை மட்டுமே வேண்டுகிறேன்.

நான் கொண்ட இந்த இடையறாத் தேடலில் நெடுந்தொலைவு வந்து விட்டேன். இப்போது வேண்டுவதெல்லாம் எனக்கு மட்டும் அல்ல பரம்பொருளே! எண்ணற்ற மனிதரின் இந்த வையகத்துக்கே ஆன தீர்வு. அனைவருக்கும் வழிகாட்டும் ஞானம். நான் ஏறி நிற்க ஒரு பீடம் தேடவில்லை. என்னை எல்லோரும் கும்பிட ஒரு கோயில் வேண்டவில்லை. விடுதலை பெறட்டும் மனித குலம். அந்த விடுதலைக்கான மார்க்கத்தை உணர்ந்து அவர்களோடு பகிரும் ஒரு கருவியாக இந்த சித்தார்த்தன் இருப்பான். இருக்க வேண்டும். பரம்பொருளே! அது முடியாது என்றால் இந்த உடல் முடியட்டும். சித்தார்த்தன் என்ற பெயரையும் உடலையும் சுமந்த ஒருவனின் சுவாசமும் ஜீவிதமும் இங்கேயே முடியட்டும். மாயையை வெல்ல முடியாத வெற்றுச் சதைப் பிண்டமாகத் தான் இவன் இருக்க வேண்டும் என நீ விதித்திருப்பாயாயின் ஒடுங்கி ஓயட்டும் அந்த சதைப் பிண்டம். அந்த சுமை அந்த மாயையின் மறுபக்கம் இந்த போதிமரத்தடியில் புதைந்து போகட்டும்.

தேடல், சித்தார்த்தன், ஞானம் என்னும் மூன்றும் தனித்தனியாக இருந்த போது, சித்தார்த்தன் இறுதியான கட்டம் இதுவே என்று தீர்மானமாக பத்மாசனம் இட்டு அமர்ந்தான். பகல் முடிந்து இரவு மீண்டும் பகல் எனக் காலம் மட்டுமே கடந்தது. சித்தார்த்தனின் முடிவில் மாற்றமே இல்லை. ஞானம் அல்லது மரணம் என்னும் சங்கற்பத்தில் சித்தார்த்தன் சிலையாய் அமர்ந்திருந்தான்.

அமாவாசை வந்து போய் வளர்பிறை தொடங்கியது. ஐப்பசியும் பிறந்தது. போதி மரம் தன் நிழலில் நிகழ இருக்கும் அற்புதத்துக்கு மௌனமாக சாட்சி கூறியது.

ஒரு நாள் மாடுகளை மேய்க்கும் ஒரு இளைஞன் போதி மரத்தடியிலே, சருகுகள் பாதி மூடிய நிலையில் ஒரு முனிவரைக் கண்டான். கிராமணியிடம் சென்று தகவல் தெரிவித்தான். அவருடன் கிராமத்தின் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அங்கே சென்றனர். இலைக்குன்று போலக் காட்சி தந்த அந்த முனிவரின் முகமும் நெஞ்சளவு உடலும் மட்டுமே தென்பட்டன.

கிராமணி தனது ஆட்களை அனுப்பி இவர் தேவலோகத்திலிருந்து வந்தவரா அல்லது மனிதகுலம் தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினார். இவர் மனிதர் என்றால் எப்படி அணில்களும், பறவைகளும் , பாம்புகளும் கூட அவர் மீது அமர்ந்து ஊர்ந்து செல்கின்றன? அவை அவர்மீது அன்பாக ஏற முயலுகையில் சருகுகள் சரிந்து அந்தக் குன்றின் விஸ்தீரணம் விரிந்து கொண்டே போகிறதே.

மற்ற கிராமங்களுக்கும் செய்தி பரவி, கூட்டம் கூட்டமாக ஜனங்கள் வந்து வெளிச்சம் இருக்கும் வரை அவரை தரிசித்துச் சென்றனர்.

சுஜாதாவுக்கு செய்தி எட்டியதும் கனி வகைகள், அரிசி உணவு, கோதுமை உணவு எனத் தங்க வட்டில்களில் எடுத்துக் கொண்டு சென்று, தினமும் அவர் கண் திறப்பார் என எதிர்பார்த்து, மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினாள். இவர் கௌதமரின் மறு அவதாரம் என்று அவள் அனைவரிடமும் கூறினாள்.

கிராமணி அனுப்பிய ஆட்கள் அவரிடம் கேள்விப்பட்ட அனைத்தையும் கூறினார்கள். தவம் செய்பவர் சாக்கிய தேச மன்னர் சுத்தோதனரின் இரண்டு மகன்களில் மூத்தவரான சித்தார்த்தர். மகத நாட்டில் பலரும் அவரை சாக்கிய முனி என்றே அழைக்கிறார்கள். சேனானி கிராம மக்கள் அவரை கௌதமர் என்று வணங்குகிறார்கள்.

செய்தி மகத மன்னர் பிம்பிஸாரரை எட்டியது. அதன் பிறகு பல வீரர்கள் தீப்பந்தத்துடன் அந்த வனத்தைக் காவற் காத்தார்கள். இரவு பகலாக அவர்கள் தம் பணியைச் செய்தனர். சுஜாதா தினமும் உணவு எடுத்து வந்து மாலை வரை காத்திருந்டு ஏமாற்றத்துடன் திரும்பினாள்.

காவல்வீரரும் தீப்பந்த வெளிச்சமும் இருக்கும் செய்தி பரவ மக்கள் மாலையிலும் கௌதமரைத் தரிசிக்கக் குழுமினர்.

ஐப்பசியும் தாண்டி விட்டது. கார்த்திகையின் அமாவசையின் போது சித்தார்த்தன் தவம் முப்பத்து நான்காவது நாளை எட்டியது. மன்னரின் ஆணைப்படி அவர் மீதிருந்த சருகுகள் அகற்றப் பட்டன. ஆனால் எதனாலும் சித்தார்த்தனின் தவம் பாதிப்படையவில்லை. பத்மாசனத்தில் சிலையாக அமர்ந்திருந்த நிலையில் எந்த மாற்றமுமில்லை. அணில்களும், சிறு பறவைகளும் அவர் மீது அமர்ந்தும் ஊர்ந்தும் அவரை அந்த வனததின் ஒரு அங்கமாகவே கருதின. தீப்பந்த வெளிச்சமும் மக்கள் நடமாட்டமும் பாம்புகளின் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தின.

கார்த்திகை மாத வளர்பிறையில் கௌதமரைப் பார்க்க மகதத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திரண்டார்கள். உச்சியில் முடிந்த கொண்டையும் மெலிந்த உருவமுமாக இருக்கும் கௌதமர் எப்போது தவம் நிறைந்து அருள்வார் என ஆவலுடன் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். பிம்பிசாரர் தினசரி அவரது நலம் குறித்து படைத் தலைவரிடம் விசாரித்து வந்தார்.

கார்த்திகை மாதம். பௌர்ணமி நிலவொளியில் வனம் அழகாயிருந்தது. மக்கள் வெளிச்சம் இருப்பதால் வீட்டுக்குச் செல்ல அவசரம் காட்டாமல் சித்தார்த்தனின் முன் குழுமியிருந்தனர்.

கௌதமர் கண் திறந்தார். மக்கள் அவரை விழுந்து வணங்கினர். பத்மாசனத்திலிருந்து மாறிய புத்தர் எழுந்து நிற்காமல், திரும்பிக் கிடையாக விழுந்து போதி மரத்தை வணங்கினார். வெகு நேரம் அந்நிலையிலேயே இருந்து எழுந்தவர் கூடியிருந்த மக்களைக் கை கூப்பி வணங்கியதும் “கௌதம புத்தர் வாழ்க” என்னும் கோஷம் எங்கும் எதிரொலித்தது.

கரங்கள் கூப்பிய நிலையிலேயே புத்தர் ” துன்பங்களிலிருந்து விடுதலை தரும் ஞானத்தை, அதற்கான மார்க்கத்தை இந்த போதி மர நிழல் எனக்கு அருளியது. அது எனக்கு மட்டும் உரியதல்ல. நம் அனைவருக்குமானது” அவர் மெல்லிய குரலில் பொறுமையாகக் கூறியதைப் படை வீரர்கள் மீண்டும் சத்தமாகக் கூற மக்கள் “கௌதம புத்தர் வாழ்க ‘ என்னும் கோஷத்தை மீண்டும் எழுப்பினர்.

காவலர்கள் மக்களை விலக்கி வழி விட கௌதம புத்தர் நதியில் நீராடச் சென்றார்.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சரித்திர நாவல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s