தாதாவின் மகள் மன்னிப்பின் வலிமைக்கு வழிகாட்டியானார்
அமெரிக்காவின் ரீட்டா கிகான்டி (Rita Gigante) தாதாவாக அறியப்பட்டு தண்டிக்கப் பட்டு சிறையிலேயே மரணமடைந்த வின்சென்ட் கிக்கான்டி என்பவரின் மகள். இது அவரது பதின் பருவத்தில் அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தையும், சமூகத்தின் நிராகரிப்பையும், அவமதிப்பையும் அதன் விளைவான வலிகளையும் தந்தது. Exercise Phisilogy என்னும் தசைவலி நீக்கும் ஒத்தடம் மற்றும் சிகிச்சைத் துறையில் பட்டம் பெற்றார். இன்று அவர் தசைகளை மட்டும் வலியிலிருந்து விடுவிக்காமல் மன அழுத்தம் மற்றும் தோல்விகளால் மனச் சிதைவு நிலைக்குத் தள்ளப்பட்ட பலருக்கும் மனதும் உடலும் புத்துணர்வு பெறும் Energy Therapy என்னும் தனித்துவம் மிக்க சிகிச்சையை அளிக்கிறார்.
இவர் நமது கவனம் பெறுவது இவரது பேட்டியில் இவர் கூறி இருக்கும் இரு ஆழ்ந்த பொருளுள்ள வழிகாட்டுதல்களுக்காக:
பதின்களில் அவரது தந்தை கைதாகி, கிட்டத்தட்ட எல்லாமே முடிந்து போனது போன்றத் துயர் நிலையை எப்படி எதிர் கொண்டார்?
அவரது பதில்: பதட்டம், ஆழமான மன அழுத்தம், கலவரமான மனநிலை இவை என்னை கவிந்து கொண்டிருந்தன. இந்தத் துன்பமயமான நிலையில் நான் மன நோயாளி ஆகாமல் சாதாரண மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள ஒரே வழி தான் தென்பட்டது. போனால் போகட்டும் என்று எல்லாப் பொய்கள், ஏமாற்றுகள், காயங்கள் மற்றும் வலிகளை விட்டுத் தொலைப்பது என்பதுதான் அது. அதற்கு எனக்குள் இருக்கும் கோபம், சோகம், அனைத்தும் அடங்க விட்டேன். என்னைத் தெரிந்தோ தெரியாமலோ காயப் படுத்தியவர் எல்லோரையும் மன்னிக்கக் கற்றேன்.
உங்களிடம் வலி நீங்க வருவோரிடம் அற்புதமான மாற்றம் நிகழக் காண்கிறீர்களா?
தினசரி என்னிடம் வருவோரிடம் ஏற்படும் மாற்றங்களை அற்புதங்கள் என்றே கூறலாம். அவர்களிடம் தமது நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. ஒரு அழுத்தத்தை விடுவிக்கும் நிலை, தன்னைப் பற்றிய தெளிவுடன் சரணடையும் தெளிவு. இந்தப் பரிணாமத்தில் அவர்கள் பலகாலமாகச் சுமந்து வந்த எதிர்மறையான உணர்வுகளை வெளியே போக விட்டுவிடுகிறார்கள். தமது வாழ்க்கை பற்றிய உண்மைகள் எந்த அளவு கடுமையானதாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளும் மனோபலம் அவர்களுக்குள் உருவாகிறது. அதன் பிறகு நிபந்தனைகளே இல்லாமல் தன்னைத் தானே நேசித்து வாழும் அற்புதம் நிகழ்கிறது. தன்னிடம் தானே பரிவு காட்டுதல், எடை போடும் கோணத்தில் சிந்திக்காமல் சமநிலையுடன் எதையும் நோக்குதல் இவை சாத்தியமாகி அவர்கள் வாழ்வில் தேங்கி நின்ற நிலை மாறி நேர்மறையான உணர்வுகளுடன் முன்னே நகர்கிறார்கள்.
பல காலமாக மன்னிப்பவர் ஒரு பீடத்தில் அதாவது ஒரு மேல் நிலையில் இருந்து கொண்டு மன்னிக்கப் படுபவரைக் கீழாகவும் தயவு பெறுபவராகவுமே நாம் காணும்படி பழக்கப் படுத்தப் பட்டோம். ஆனால் மன்னிப்பு என்பது நம்முள் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மற்றும் வலிகளை நீக்கி நமக்கே முதலில் உதவுகிறது என்பது ஒரு தனித்தன்மை மிக்க வழி காட்டுதலாகும்.
ஏமாற்றப் படுவது மிகவும் வலி மிகுந்தது. ஆனால் அதைப் பல காலம் நாமே மனதுள் சுமப்பதும் ஒரு வேதனையை, விரோதத்தை, தன்னிரக்கத்தை ஒரு நோயாகவே நீங்காது நம்முடனிருப்பதாக உணருவதும் வலியை மன அழுத்தத்தை முடிவற்றதாக ஆக்கி விடுகிறது. மன்னிப்பின் வலிமையை அது தரும் கொடையை இவர் நமக்கு உணர்த்துகிறார்.
(Image Courtesy: Face Book, News courtesy: Deccan Chronicle)
Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்