விளையாட்டுத் துறை சாந்திக்கு தந்துள்ள ஆதரவு
சாந்தி சௌந்தரராஜன் என்னும் ஓட்டப் பந்தய வீராங்கனை சென்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பதக்கம் அவர் பெண்பாலர் என்னும் சோதனையில் தேறாததால் பறிக்கப் பட்டது. அவர் கூலித்தொழிலாளியாகக் காலம் தள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டார். மத்திய அரசின் விளையாட்டுத்துறை ஆணையம் அவருக்கு பயிற்சியாளராகும் பட்டயப் படிப்புக்கு பெங்களூருவில் தேசிய விளையாட்டுக் கழகத்தில் இடம் தந்து செலவை தமிழ் நாடு அரசு ஏற்க பரிந்துரை செய்துள்ளது.
இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. பல முறைகள் நூற்றுக்கணக்கான வீரர்கள் போதிய ஆதரவும் உற்சாகமும் அரசுத் தரப்பில் இருந்து தரப் படாததால் மனம் சோர்ந்து முன்னேற்றமின்றி முடங்கிப் போனார்கள். ஆசிய அளவில் சாதித்தவருக்கு சோதனைக் காலம் என்று வந்துள்ள போது அவர் பயிற்சியாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் போது அது அவருக்கும் விளையாட்டுத் துறைக்கும் இருவருக்குமே நன்மை பயக்கும் திருப்பமாகும்.
விழுப்புரத்தைச் சேர்ந்த சாந்திக்கும் முதலில் பஞ்சாபில் பாடியாலாவில் தான் இந்தப் பட்டயப் படிப்புக்கு இடம் தரப்பட்டது. சாந்தி தமது ஊருக்கு அருகில் பங்களூரு இருப்பதால் அங்கே படிக்க விரும்பினார். அது ஏற்கப் பட்டது.
அரசுகள் விளையாட்டில் முழு நேரம் செலவிடும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கவலையுடன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பல திறமையுள்ள இளைஞர்களை ஈர்க்கும். தற்போதைய நிலை தனியார் அளவுக்கு அரசு ஆதரவு தரவில்லை என்பதே. சாந்தி விஷயத்தில் நம்பிக்கை தரும் விதமாகச் செயற்பட்டிருக்கும் மத்திய அரசு நிறுவனம் தொடர்ந்து இளைஞருக்கு உற்சாகம் தர வேண்டும். அதில் செய்யும் செலவு பன்மடங்கு புகழை நம் நாட்டுக்குத் தரும்.
(Image Courtesy:http://www.google.co.in/imgres?imgurl=http://www.chennai365.com) & (News Courtesy: Deccan Chronicle)