போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25


Buddha_in_Sarnath_Museum_(Dhammajak_Mutra)

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25

சத்யானந்தன்

Share

வெகுகாலத்துக்கு முன் பராக்ரமன் என்று ஒரு அரசன் இருந்தான். பெயருக்கு ஏற்றாற்போல அவன் பராக்கிரமசாலியாக விளங்கினான். தந்தை அகால மரணமடைந்ததால் இள வயதிலேயே பட்டமேற்ற அவன் தனது உறவுப் பெரியவர்களான சித்தப்பா, பெரியப்பா ஆகியோரையோ, மூத்த மந்திரிகளையோ மதிக்கவில்லை. தன் மனம் போன போக்கில் ராஜ்ஜியத்தை நடத்தினான். மாளிகையிலிருந்த வசதிகள் போதுமானதாயிருந்த போதும், தங்கத் தட்டுகளைக் கட்டிலில் பதித்தான். தனது மனைவிகளுக்கும் நடன மாந்தருக்கும் தங்களை முத்து, பவளம் என்று நகைகளால் அலங்கரித்தான். இப்படிப் பட்ட ஆடம்பரத்தினால் கஜானாவே காலியானது. கடுமையான வரி விதித்து நிறைய ஆயுதங்களை வாங்கி, நிறைய படை வீரர்களையும் பணிக்கு அமர்த்தி அண்டை நாடுகளின் மீது படையெடுத்தான். தானும் யுத்தத்தில் வல்லவனான அவனிடம் கூடுதலான படைகள் இருந்ததால் அண்டை நாட்டு அரசர்கள் அவனிடம் தோற்றனர். அந்த தேசங்களில் புதிய அரண்மனைகள், புதிய மனைவிகள் என அவனது ஆடம்பரம் வளர்ந்து கொண்டே போனது. அங்கும் அதிக வரிவசூல் செய்து எதிர்த்தவர்களைக் கொன்று கொடுங்கோலனாய் விளங்கினான். அவனுக்கு நடுவயது கடக்கும் போது பட்டத்து இளவரசனான அவனது மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க விரும்பினான். அவனைக் கொன்று விடுவதாக மிரட்டி மறுத்தான் இந்தக் கொடுங்கோலன். இதனால் ராணிகள் அவன் மீது வெறுப்புற்றனர். மக்கள் யாவரும் இவன் எப்போது மரணம் அடைவான் என்று இறைவனைப் பிரார்த்தினர்.

ஒரு நாள் இந்தக் கொடுங்கோல் மன்னனின் காலில் ஒரு இடத்தில் தோலில் அரிப்பும் அங்கே புண்ணும் தோன்றின. மருத்துவர் மூலிகை மருந்திட அது குணமானது. ஆனால் சில நாளில் அது கையில் வந்தது. அங்கேயும் குணமாக்கப் பின் கழுத்தில். இப்படியாக அது வந்து கொண்டே இருந்தது. முதன் முறையாக அவன் மனதில் அச்சம் தோன்றியது. எல்லாம் சரியாகி விடும் என்று அவன் நம்பினான்.

ஆனால் அவ்வாறில்லாமல் ஒரு நாள் காலை அவன் எழுந்திருக்கும் போது உடல் முழுவதும் அரிப்புடன் கூடிய புண் பரவி இருந்தது. வேப்பிலை மூலிகை என படுக்கை முழுவதும் நிரப்பி அவனுக்கு வைத்தியம் செய்தனர். ஆனால் அது இறங்கவே இல்லை. அவனால் அரசுப் பணிகளில் ஈடுபட முடியாதது மட்டும் அல்ல, ஆடை உடுத்தி வெளியே வர முடியாத படி நிலமை மோசமானது.

மந்திரிகள், ராஜ குடும்பத்து மூத்தவர்கள் கூடி ஆலோசித்து பட்டத்து ராணியின் மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை நல்வழி நடக்கும்படி கூறினர். அவன் வரிச்சுமையைக் குறைத்து நல்லாட்சி செய்தான். ஆட்சிக்கு உட்பட்ட அண்டை நாடுகளில் தம் சகோதரர்களுக்குப் பட்டம் சூட்டி அங்கும் வரிகளைக் குறைத்து அனைவரின் அன்பைப் பெற்றான். ராஜ குடும்பத்தில் யாருக்கும் மன்னரிடமிருந்து நோய் தொற்றி விடக் கூடாது என்னும் அக்கறையில் அவன் மன்னரைப் பணியாட்கள் மற்றும் மருத்துவர் மட்டுமே கவனிக்கும் படி ஆணையிட்டான். ராணிகள் அவர் அருகில் போகாமல் தள்ளி இருந்தே நலம் விசாரித்தனர். மன்னன் தனிமையில் நோய் முற்றி மாண்டான்.

உடலின் பலம், இளமை, செல்வம், செல்வாக்கு இவை யாவும் நிலையற்றவை என்று நாம் உணர விடாமல் தடுப்பது நமது அகம்பாவமே – நமது ஆசைகள் என்னும் இருளே. நிலையானது பரிவும் கருணையும் அன்புமே. ஒருவர் தம் வீட்டில் இரவில் வெளிச்சம் வேண்டுமென்றால் தமது வீட்டையே கொளுத்துவது கிடையாது. ஒரு மண் அகல் விளக்கை ஏற்றினாலும் இருள் அகன்று வெளிச்சம் தென்படும். அதே போலத்தான் நம் சக ஜீவிகளிடம் நாம் வைத்திருக்கும் உண்மையான அன்பு அவர்கள் நலனில் அக்கறையாக அவர்கள் இன்ப துன்பங்களை உணரும் பரிவாக வெளிப்படுகிறது. அவர்களது உரிமைகளை மதிக்கும் நம் பண்பும் உண்மையான அன்பிலிருந்து மட்டுமே தோன்ற முடியும். நிலையான சந்தோஷம் பிறரின் மகிழ்ச்சியில் தான் என்னும் அதுவே என் சுகம் என்னும் தெளிவில் துவங்கும். அறவழி நிற்கும் நேயம் மிகுந்த மனப்பாங்கில் மட்டுமே அது விதை விருட்சமாவது போல வளர்ந்து வேரூன்றும். புலன் வழி கிடைக்கும் சுகங்களும் அவற்றிற்காகத் தீராது நிகழும் சச்சரவுகளும் சண்டைகளும் தனிமனிதனையோ சமூகத்தையோ பண்பட்டவராக ஆக்குவதில்லை.

பௌத்தம் நாம் நிலையான மகிழ்ச்சியில் அன்பும், பண்பும் அறமும் உள்ள சமுதாயமாக உயர வழி காட்டும். தானியம் அல்லது மாவு, காய்கறி, விறகு, அடுப்பு எல்லாமே வீட்டில் இருப்பது போல நம்மைக் காக்கும் நன்னெறி குறித்த விழிப்பு நமக்குள்ளேயே இருக்கிறது.

**********************

மகத இளவரசர் அஜாதசத்ருவின் மாளிகையில் காத்திருந்த தேவதத்தனுக்குத் தாம் வந்த நோக்கம் நிறைவேறுமா என்ற பதட்டம் உள் மனதில் இழையோடியது. முதல் நாள் புத்தரின் உபதேசத்தைக் கேட்டு அவர் பாதம் பணிந்த இளவரசன் புத்தரைக் குருவாக ஏற்று முழுமையாகச் சரணடைந்து விட்டவனாகவே தோன்றினான்.

அஜாத சத்ரு தகப்பன் பிம்பிசாரர் அளவு புத்தரைப் புரிந்து கொண்டு அவரே மகதத்துக்கும் மற்ற தேசங்களுக்கும் வழிகாட்டி என்னுமளவு தீவிரமான பக்தனாக இருக்க வாய்ப்பில்லை. இன்று ஒரே நாளில் தான் முடிவு செய்த இந்த காரியம் நிறைவேற வேண்டுமென்பதுமில்லை.

“ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறீர்களா? என் வணக்கம். தங்கள் கவனத்தைச் சிதைத்து விட்டேன்” என்றபடியே வந்து அமர்ந்தான் அஜாதசத்ரு.

“மகதம் பற்றிய சிந்தனையில் தாங்கள் வந்ததை கவனிக்கவில்லை இளவரசரே” என்று எழுந்து நின்று கை கூப்பினார் தேவதத்தன்.

“அமருங்கள் பிட்சுவே. தங்களைப் போன்ற துறவி விசாரத்தில் ஆழும் அளவு மகதத்துக்கு என்ன ஆகி விட்டது?”

“மாமன்னர் பிம்பிசாரரும் தாங்களும் இருக்கும் போது மகதத்தின் பாதுகாப்புக்கும் வளத்துக்கும் குறைவேதும் இருக்காது. இருந்தாலும் உங்கள் இருவராலும் கையாள முடியாத ஒரு ஆபத்தைக் குறித்தே நான் கவலையாயிருக்கிறேன்”

“என்ன பிட்சு அவர்களே. புதிர் போடுகிறீர்கள். மாமன்னராலும் என்னாலும் சமாளிக்க முடியாது என்னுமளவு எந்த ஆபத்தும் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் கையாள முடியாது என்று குறிப்பிடுவது என்ன?”

“நான் வார்த்தையைத் தேர்ந்தெடுத்தே பிரயோகித்தேன் இளவரசரே. உங்களால் எதிர் கொண்டு தகர்க்க முடியாத ஆபத்து எதுவுமே இல்லை. ஆனால் உங்களால் கையாள முடியாத ஒரு பேராபத்து முளை விடத் துவங்கி இருக்கிறது. அது வேரூன்றி விருட்சமாக வளராமல் காக்க வேண்டும்”

“பூடகமாகப் பேசாமல் எனக்குப் புரிகிற மாதிரிக் கூறுங்கள் பிட்சுவே”

“நேற்று புத்தரின் உபதேச மொழிகளைத் தாங்கள் கேட்க வந்திருந்தீர்கள் இல்லையா?”

“ஆம். மகான் புத்தரின் அற்புதமான அறிவுரைகளை நான் கேட்டேன். அவர் ஞானம் சித்திக்கப் பெற்றவர் என்பதை அவரது அறவுரை நன்றாகத் தெளிவாக உணர்த்தியது”

“அந்த உரையின் சாராம்சம் தங்களுக்கு நினைவிருக்கிறதா?’

“அகம்பாவமும் அதிகார வெறியும் ஒருவனின் கண்களை மூடி விடும் என்று தானே விளக்கிக் கூறினார் புத்த தேவர்”

” அது மட்டும் தான் நினைவுக்கு வருகிறதா? அந்த உபதேசம் மனதில் பதிய என்று அவர் குறிப்பிட்ட உதாரணம் நினைவுக்கு வரவில்லையா?”

“ஒரு கொடுங்கோல் அரசனை உதாரணமாகக் கூறினார். அதற்கும் தாங்கள் குறிப்பிடும் ஆபத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“சம்பந்தம் இல்லாமலா தங்களைத் தேடி வந்து இத்தனையையும் கூற வந்தேன். மகத வம்சத்திலோ அல்லது சாக்கிய வம்சத்திலோ அப்படி ஒரு மன்னன் இருந்ததாக சரித்திரம் இல்லையே?”

“அதனாலென்ன பிட்சு தேவதத்தரே. ஒரு உதாரணம் என்று குறிப்பிடுவது நடந்த ஒன்றாக இருக்க வேண்டுமா என்ன?”

“தங்கள் மதி நுட்பத்தை மிகவும் பாராடுகிறேன் இளவரசர் அஜாத சத்ரு. உதாரணம் என்று குறிப்பிடுவது நடந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை தான் . ஆனால் சாத்தியமாகக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டுமல்லவா?”

‘எனக்குப் பிடிபடவில்லை பிட்சுவே. உதாரணம் சாத்தியமாகக் கூடிய ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்று தாங்கள் குறிப்பிடுவதற்கு என்ன அர்த்தம்?”

“வேறு விதமாக நானே ஒரு உதாரணம் கூறுகிறேன். புலி புல்லைத் தின்றது என்று உதாரணம் கூற முடியுமா?”

“முடியாது”

“பசு மானை வேட்டையாடியது என்று எடுத்துக்காட்டாகச் சொல்லலாமா?”

“எப்படி இயலும் பிட்சுவே?”

“அவ்வாறெனில் புலி மானை வேட்டையாடியது, பசு புல்லைத் தின்றது என்று சொல்லும் போது புலியினுடைய, பசுவினுடைய இயல்புகளில் ஒன்றைச் சுட்டிக் காட்டி அதன் மூலம் வேறு ஒன்றைப் புரிய வைக்க முயலுகிறோம் இல்லையா?”

“சரிதான். புத்தர் கூறிய உதாரணமும் தவறான வழியில் செல்லும் மன்னன் பற்றியது தானே?”

“கோசல மன்னரோ அல்லது மகத மன்னரோ கொடுங்கோலரா?”

“என்ன பிட்சு தேவதத்தரே. அவர்கள் இருவரும் மக்களின் அன்பைப் பெற்ற சாந்தமானவர் என்பது எல்லோருக்கும் தெரியுமே”

“இருங்கள் இளவரசர் அஜாதசத்ரு. இதிலிருந்து இரு மன்னர்களையும் புத்தர் உதாரணமாகக் காட்டவில்லை என்பது தெளிவு. அப்படியென்றால் அவர் மன்னர் ஆகக் கூடிய யாரையோ சுட்டிக் காட்டுகிறார் என்று தானே பொருள்”

“புரியும்படி சொல்லுங்கள் பிட்சு அவர்களே”

“அவர் குறிப்பிட்ட அப்படி ஒரு மன்னனாக உருவாகக் கூடிய இளவசர்கள் இருவர்.தான். ஒருவர் தாங்கள். மற்றொருவர் ஜேதா”

“என்னையோ அல்லது ஜேதாவையோ அவர் மனதில் வைத்துப் பேசுகிறார் என்கிறீர்களா?

“ஆம் இளவரசரே”

“எங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று உங்களுக்கு ஏன் தோன்றுகிறது?”

“விளக்குகிறேன். முதலில் நான் இன்றும் ஒரு தூய பிட்சு என்பதை உறுதி கூறுகிறேன். ஆனால் ஆண்டுக் கணக்கில் தேடி அலைந்து பெற்ற அபூர்வமான ஞானம் காட்டிய பௌத்த வழியிலிருந்து புத்தர் விலகி வருகிறார்”

“இது நம்பவே முடியாத ஒன்று பிட்சுவே. பல தேசங்களும் இன்று அவர் ஞானவடிவமான புத்ததேவனென்றே வணங்குகின்றன. தாங்கள் ஏன் ஐயப்படுகிறீர்கள்? முற்றும் துறந்த அப்பழுக்கற்ற அவரைப் பற்றி ஐயம் கொள்ள என்ன இருக்கிறது? ஆபத்து என்று ஆரம்பித்து அதை விட்டு விட்டு சுற்றி வளைக்கிறீர்கள்”

” மகத கோசல மாமன்னர்கள் காலத்திலோ அல்லது அதற்குப் பின்போ இரு நாடுகளிலும் போர்ப் படைகளோ, வீரர்களோ இருக்க மாட்டார்கள். படைகள் கலைக்கப் படும். இளவரசர்கள் மன்னராக முடி சூடாமல் பௌத்த சங்கமே அரசாளும்”

“உங்கள் கற்பனை மிகவும் விபரீதமாக இருக்கிறது பிட்சுவே. எங்கள் மக்கள் எங்களிடம் விசுவாசம் இழந்து பௌத்த சங்கமும் பிட்சுக்களும் அரசாளட்டும் என்றா சொல்லுவார்கள்? ”

“ஏன் நடக்காது இளவரசரே? சமீபத்தில் கோசலத்தில் என்ன நடந்தது என்று கவனித்தீர்களா?”

“அப்படி என்ன நிகழ்ந்தது? என் கவனத்துக்கு எதுவும் வரவில்லையே?”

“சவாத்தியில் இளவரசர் ஜேதாவுக்கு சொந்தமான மிகப் பெரிய பெருமைக்கு உரிய ஜேதாவனம் பௌத்த சங்கத்தால் விலைக்கு வாங்கப் பட்டு விட்டது”

“அப்படி இல்லை பிட்சுவே. விலைக்கு வாங்கியவர் பெரிய வணிகரான அனந்த பிண்டிகா. சங்கம் தழைக்க வேட்னும் என்று அவர் அன்பின் வயப்பட்டு அதைச் செய்தார்”

“அப்படி உங்களையே நம்ப வைத்தது தான் புத்தரின் பெரிய வெற்றி. அவரது கவனம் இப்போது மறைமுகமான வழியில் தமது ஆதிக்கம் கபிலவாஸ்து, கோசலம், மகதம் என மக்கள் மூலமாகப் பரவ வேண்டும் என்பதே”

“நீங்கள் இத்தனை விளக்கிய பிறகும் பிட்சு தேவத்தரே. என்னால் நம்பவே முடியவில்லை”

“அதனால் தான் ஆரம்பத்திலேயே உங்களால் கையாள முடியாத ஒன்று இது என்று குறிப்பிட்டேன்”

“எந்த விதத்தில் கையாள முடியாது?”

“புத்தர் மீது உள்ள பக்தியும், விசுவாசமும் தற்போது மக்களுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இது நிலவைப் பாம்பு கவ்வுவது போல ராஜவிசுவாசத்தை விழுங்கி விடாது என்று என்ன நிச்சயம்?”

இந்த முறை அஜாத சத்ரு பதில் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்தான். ஒரு சேவகனை அழைத்துத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குடித்தான். சில கணங்கள் கடந்த பின் ” அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கிறேன். ஆனால் சங்கத்துக்கு உள்ளே அவர் என்ன பேசுகிறார் என்று எப்படி அறிவது?”

“அது என் பொறுப்பு. கபிலவாஸ்துவோ, கோசலமோ , மகதமோ சதிக்கு பலியாகாமற் காப்பதே துறவியான என் கடமை இளவரசரே”

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சரித்திர நாவல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s