மருந்து நிறுவனங்களுக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பின் அபராதம்
ஏற்கனவே ஒரு பதிவில் நாம் மருந்து நிறுவனங்கள் தம் விருப்பப்படி எப்படி மருந்து விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது குறித்து ஒரு பதிவு செய்திருந்தோம். அதன் முக்கியமான பகுதி கீழே:
“மருத்துவர்களிடம் ஒரு நோயாளி போகும் போது விரும்புவதெல்லாம் சீக்கிரம் அந்த நோய் குணமாக வேண்டும் என்பதே. விலை அதிகமான மருந்து விரைவில் குணமளிக்கும் என்னும் ஒரு பாமர கருத்தும் அவருக்குள் இருக்கும் இதைத் தான் மருந்து விற்கும் நிறுவனங்கள் பயன் படுத்திக் கொள்கின்றன. ஒரு மருந்தின் ரசாயன அடிப்படைப் பெயர் Generic name வேறு அதை மருந்து நிறுவனங்கள் விற்கும் போது அதற்கு அவர்கள் கொடுக்கும் Brand name அதாவது அந்த நிறுவனம் இது தன்னுடைய தயாரிப்பு என்று கொடுக்கும் பெயர் வேறு. எளிய உதாரணம் பாரசிடமால் என்னும் பெயர் அது காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்து. இதற்கு க்ரோஸின் என்பது அதைத் தயாரித்த நிறுவனம் கொடுக்கும் பெயர். ஆஸ்ப்ரின் என்னும் அடிப்படை மருந்து அனாஸின், பேயர் ஆஸ்ப்ரின், எகொட்ரின் என்னும் பெயர்களில் அதைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் பொருத்து மாறுபடுகின்றன. இப்போது குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளை ஒப்பிடுவது இந்தப் பதிவின் நோக்கமில்லை. இப்படி மருந்துகளுக்கு வியாபாரப் பெயர் கொடுக்கும் முறையில் விலை கடுமையாக உயர்த்தி விற்கும் வசதி பல நிறுவனங்களுக்குக் கிடைத்து விடுகிறது. ”
இந்தியா உட்பட எல்லா நாடுகளுமே அடிப்படை மருந்துகளை (Generic Drugs), குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் பல சட்டங்களையும் இயற்றியுள்ளன. ஆனால் இன்னும் மருந்து நிறுவனங்களின் கையே மேலோங்கி இருக்கிறது. ஐரோப்பியக் கூட்டமைப்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கும் ஒரு இந்திய நிறுவனத்துக்கும் 146 மில்லியன் யூரோ டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. மன அழுத்தத்திற்கான அடிப்படை மருந்தை தாமதிக்கும் படி பிற மருந்து நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்ததே இந்நிறுவனங்களின் மீதான குற்றச்சாட்டு.
மருத்துவம் இப்போது உலகின் மிகப் பெரிய வணிகமாக உயர்ந்து வருகிறது. இது மருத்துவமனைகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவக் காப்பீடு தரும் நிறுவனங்கள் என்று மிகப்பெரிய தொடர். இதில் மருத்துவர்கள் “பங்களிப்பு” மட்டுமே நம் கண்ணில் படுகிறது. பல கோடிகள் புரளும் இந்த வணிகத்தில் அரசியல்வாதிகள் “பங்களிப்பும்” நிறையவே இருக்கும். இந்த விவகாரங்களை வெளிக்கொணருவது ஊடகங்களின் கடமை. மக்கள் விழிப்புணர்வு பெற நீண்ட தூரம் போக வேண்டிய விஷயம் இது.
(News courtesy:Reuters) & Image courtesy: (Photobucket.com)