பிரபஞ்சனின் சிறுகதை – 4வது வழி
அது என்ன 4வது வழி ? கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கனகா அவனுக்கு துரோகம் செய்து விடுகிறாள். தெரிந்தவுடன் மனம் கொதிக்கும் அவன் முன் மூன்று வழிகள் உள்ளன
1. அவளை விவாகரத்து செய்யலாம் – ஊர் முழுக்கத் தானே தம்பட்டம் அடித்தது மாதிரி ஆகி விடும்.
2. அவளுடன் வாழ்ந்து அவளைச் சித்திரவதை செய்யலாம் – அவன் நல்ல இயல்பு அவனை அதைச் செய்ய விடாது
3. தற்கொலை செய்து கொள்ளலாம்.
3வது வழியான தற்கொலை செய்து கொள்ள அவன் ஒரு “லாட்ஜி’ல் தங்குகிறான். அப்போது நடப்பவை 4வது வழியை அவனுக்குக் காட்டுகின்றன.
பிரபஞ்சனின் கதை இவ்வாறாகத் தொடக்கத்திலேயே வாசகனின் கவனத்தை ஈர்த்து அந்த 4வது வழி என்ன என்னும் முடிவுக்காக ஆர்வம் கொண்டு மேலே படிக்க வைக்கிறது. 1985ல் வெளிவந்த கதை. இதை நாம் நினைவில் வைப்பது கதையின் வடிவத்தைப் பற்றி மட்டுமே. சிறுகதையின் தொடக்கம் மற்றும் விவரமான நடுப்பகுதி இறுதியில் கூர்மையான ஒரு முடிவு என்று ஒரு வடிவம் இருந்தது. ஜெயகாந்தன் கதைகளில் இது தென்படும். இந்த வடிவத்தைத் தமிழ்ச் சிறுகதை உதறி விட்டது. இப்போது சிறுகதை உங்கள் சிந்தனைத் தொடரின் ஒரு கண்ணியில் நுழைந்து உடனே வெளியேறி விடும். அதன் உள்ளடக்கம் உங்கள் சிந்தனையின் திசையையே மாற்றவும் கூடும். உங்களுக்குக் கதை சொல்லவேண்டிய கட்டாயம் உங்கள் தாயாருக்கு இருந்தது போல சிறுகதை ஆசிரியருக்குக் கிடையாது. உங்கள் சிந்தனையைத் தூண்டுவது கூட அவரது வேலை கிடையாது. சமூகம் பற்றிய அக்கறையும் சமூக மாற்றம் குறித்த கனவுகளும் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவருடன் சேர்ந்து நீங்கள் பயணிக்க முடியும். எவ்வளவு தூரம் பயணிக்கிறீர்கள் எனபது நிச்சயமாக உங்களைப் பொருத்ததே.
திரும்பவும் பிரஞ்சனிடமே வருவோம். 4வது வழி ஒன்று இருக்கிறது. வாழ்வது தான் அந்த வழி. எப்படி வாழ்வது? சொல்ல முடியாது. போராடித் தான் வாழ வேண்டும். எப்படி வாழ்வது? சந்தோஷமாக வாழ வேண்டும். கணவன் மனைவியே இருவருமே தாமே தாம் அனுபவிக்கும் மன வேதனைக்கே சதா காரணமாகிறார்கள் என்னும் பட்சத்தில் அந்த மணம் முடிந்து போகிறது. இதை கீழ்த்தட்டு மக்கள் மிக எளிதாகத் தீர்த்துக் கொள்கிறார்கள். நடுத்தர மக்களுக்கு இதில் நிறையவே குழப்பங்களும், மனத்தடைகளும் இருக்கின்றன.
கிருஷ்ணமூர்த்தி தங்கிய விடுதி கொஞ்சம் பிரச்சனையான ஒன்று தான். இரவில் பெண்கள் நடமாட்டம் உண்டு அங்கே. அவரை கவனித்த சிறுவன் பின்னாளில் டீக்கடை வைப்பதற்காகப் பணம் சேர்க்கிறான். விலைமாதருக்கு உதவுவதும் பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஒன்று அவனுக்கு. அவனுடைய அப்பா அம்மாவுக்குள் ஒத்துப் போகவில்லை. பிரிந்து விட்டார்கள். அவ்வளவே. ஒரு விலைமாது கிருஷ்ணமூர்த்தியிடம் பணம் இல்லையென்றாலும் அவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து ஒரு இரவு முழுவதும் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே சொல்லி (அவனுடன் உடல் தொடர்பு இல்லாமல்) அவனுடைய மனதை மாற்றுகிறாள். ஜெயகாந்தன் கதைகளிலும் நிறைய விலை மாதர் நிறையவே பேசுவார்கள். புதுச்செருப்பு என்னும் கதை ஒரு உதாரணம். புதிதாகத் திருமணமான ஒரு இளைஞன் தனது மனைவியிடம் சுகமில்லை என்று ஏற்கனவே பழக்கத்தில் இருந்த விலைமாதுவைத் தேடிப் போகிறான். அவள் “புது செருப்புக் கடிக்கும். அதற்காக யாராவது பழைய செருப்பைப் போட்டுக் கொள்ளுவார்களா?” என்று அறிவுரை கூறி அனுப்புவாள்.
பிரபஞ்சன் ஜெயகாந்தன் இருவரின் அணுகுமுறையை நாம் வேறு கோணத்தில் பார்ப்போம். ஒரு நடுத்தர அல்லது மேல் ஜாதி ஆணோ பெண்ணோ விளிம்பு நிலை மனிதருடன் உரையாடும் வாய்ப்புக் குறைவு. அப்படி அபூர்வமாக ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் (அதாவது விளிம்பு நிலையில் உள்ள நம் சகோதர சகோதரிகள்) எவ்வளவு எளிமையாகப் பிரச்சனைகளை அணுகுகிறார்கள் என்பதே தெளிவாகிறது.
அது ஏன்? எவ்வாறு அவர்களால் மட்டும் மிக எளிதாக ஒரு பிரச்சனையின் மையம் வரை சென்று புரிந்து கொள்ள முடிகிறது? நிச்சயமின்மையே நிரந்தரமானது. வேறு எதுவும் நிரந்தரமில்லை என்று நடுத்தர மக்கள் புத்தகத்தில் படித்து விட்டு மறந்து விடுகிறார்கள். விளிம்பு நிலை மக்கள் அன்றாடப் பாடே நிச்சயமற்று வாழுகிறார்கள். அந்த வாழ்க்கை அவரக்ளுக்கு சர்வ சாதாரணமான ஒன்று. பிரச்சனைகளை விவாதித்து போலி கௌரவம் பார்த்து முடிவு செய்ய அங்கு நேரமில்லை. தேவையில்லை. எளிய தெளிவான தீர்வுகளை அவர்கள் சமூக அளவிலான குடும்ப அளவிலான பிரச்சனைகளுக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களால் தீர்க்கவே முடியாத பிரச்சனை வறுமை ஒன்றே.
(image courtesy:http://www.waze.com/wiki/index.php/Junction_Style_Guide)