ஒரு தற்கொலை – ஆதவன் சிறுகதை
எழுபதுகளில் தொடங்கி 1987 வரை 15 வருடத்துக்கும் மேலாகத் தீவிரமாக எழுதி வந்த ஆதவன் (இயற்பெயர் சுந்தரம்) கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். டெல்லியில் அரசுப் பணியிலேயே அவரது காலம் சென்றது. அவர் 42 வயதில் நதி நீரில் மூழ்கி இறந்தார். அது விபத்தா தற்கொலையா என்பது உறுதி செய்யப் பட முடியாதது. நடுத்தர ம்க்களின், படித்தவர்களின் மனப்பாங்கை ஒட்டியே அவரது கதைகள் இருந்தன. மூன்று நாவல்களும் பல சிறுகதைத் தொகுதிகளும் அவரது படைப்புகளாகும். கதாபாத்திரங்களின் மனநிலையை நுட்பமாகச் சித்தரிப்பதும் சமூக உறவுகளின் போலித்தன்மையை வெளிக்காட்டும் படைப்புகளும் அவருக்குப் புகழ் சேர்த்தன.
“ஒரு தற்கொலை” என்னும் சிறுகதை மனதைத் தொடுவதாகும். பத்திரிக்கைகளில் தற்கொலை செய்திகளைப் பார்க்கும் போது திடுக்கிடுகிறோம். நமக்கு நன்றாகத் தெரிந்தவர் தற்கொலை செய்து கொள்ளும் போது நாம் மனதுள் மிகவும் வருத்தமும் பாதிப்பும் அடைகிறோம். ரகு என்னும் இளைஞன் படித்து வேலை தேடுபவன். அவனது தங்கையின் பள்ளித் தோழி தாயில்லாதவள். சித்தியின் கொடுமை தாங்காமல் மண்ணெண்ணை ஊற்றித் தன்னைத் தானே எரித்துக் கொண்டு மாய்ந்து போகிறாள். இதைக் கேட்டு ரகு மிகவும் மனம் கலங்குகிறான். ஆனால் அவன் நண்பர்களிடம் இறந்து போன சிறுமி மீது எந்த விதப் பரிவும் இல்லை. இவ்வளவு தானா கதை என்று எண்ணும் போது கதையின் இறுதிப் பகுதியை வாசிக்கும் போது விடை கிடைக்கிறது. கீழே இறுதிப் பகுதி:
“நான் தடுக்கி விழவில்லை. இனித் தடுக்கி விழவே மாட்டேன். இன்று நான் எஞ்ஜினியர். இது எனக்கு லாபமா? நஷ்டமா?” என்று ரகு சிந்தித்தான். சில வருஷங்கள் முன் வரை அவன் மனத்தில் எண்ணற்ற உணர்வுகளும் எண்ணங்களும் வண்ணச் சேர்க்கைகளும் தோற்றங்களும் தோன்றிய வண்ணம் இருந்தன. ஏதேதோ படமெழுத வேண்டுமென்ற வெறி இருந்தது. இப்போது உணர்வுகள் தாம் மிச்சம். வெறியில்லை. இன்னும் சில வருடங்களில் உணர்வுகளும் மறைந்து விடுமோ? அப்போது யாராவது ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் அது அவ்வளவாக என் மனதைப் பாதிக்காதோ? என் சினேகிதர்களைப் போல எனக்கும் அனுதாபம், பரிவு என்னும் மெல்லிய உணர்வுகளின் கூர் மழுங்கி விடுமோ?
பிறகு சந்திரனைப் போலவும் பாஸ்கரைப் போலவும் நானும் சும்மா கலையைப் பற்றியும் கலைஞர்களைப் பற்றியும் வறட்டுக் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருப்பேன். உயிர் இருக்காது. உணர்ச்சிகள் இருக்காது. இலட்சியங்கள் இருக்காது. தேஜோமயமாக என்னுள்ளே நிரம்பியுள்ள உணர்வுகள் செத்துக் கொண்டே போகும்.
இதுவும் தற்கொலை தானே?