சரித்திர நாவல் போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30


Buddha_in_Sarnath_Museum_(Dhammajak_Mutra)

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30

சத்யானந்தன்

Share

பாகம் 2 – புத்தர்

அத்தியாயம் 30

சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். புத்தரும் அவரது சீடர்களும் மாளிகை முன் வாயிலின் வழியே நுழைந்த போது அவர்கள் பார்வையில் படும்படி ஹோம குண்டங்களும் அவர்களுக்குப் பின் பக்கம் தரையில் ஆணி அடித்துக் கயிற்றில் பிணைத்த பசு மாடுகள் பல நின்றிருந்தன. எந்த வீட்டிலுமே மாட்டுத் தொழுவம் வீட்டின் பின் புறமே இருக்கும். வாயிலில் யாகம் நடக்கும் இடத்துக்கு அருகே மாடுகள் கட்டப் பட்டிருப்பதை புத்தர் கவனித்தார்.

சந்தன் வேலையாட்கள் மூலமாக புத்தர் பிட்சைக்காக வந்திருப்பதை அறிந்து , ஓடோடி வீட்டுக்கு வெளியே வந்து புத்தர் பாதம் பணிந்தார். அவரது பாதங்களை நீரால் கழுவி “புத்த தேவரே.. கோமேத யக்ஞம் நடக்கும் நன்னாளில் தங்கள் வருகை மிகவும் சிறப்பானது. தாங்கள் தான் என் க்ருஹத்துக்கு உள்ளே எழுந்தருள வேண்டும்” புத்தர் அவர் வீட்டுக்குள் நுழைந்து ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். சந்தனும் சீடர்களும் ஒரு பெரிய கூடத்தில் தரையில் அமர்ந்தனர். ” இன்னும் சற்று நேரத்தில் உணவை இங்கேயே தாங்கள் ஏற்று அருள வேண்டும்”

‘அவ்வாறே ஆகட்டும். நான் கோசாலையில் காணப்படும் பசுக்களை உங்கள் வீட்டு வாயிலில் கட்டப் பட்டிருப்பதைப் பார்த்தேன். என்ன காரணம் சந்தன்?”

“புத்தரே .. நாளை கோமேத யாகத்தில் இவை பலி கொடுக்கப் பட்டு , பிரசாதமாகப் பசு மாமிசத்தை அனைவருக்கும் வழங்க எண்ணியுள்ளேன். நாளையும் தாங்கள் பிட்சை ஏற்றால் எனக்கு மிகவும் சந்தோஷம் ஏற்படும் புத்த தேவரே”

“யக்ஞத்தில் நமக்குப் பாலும் எருவும் தரும் பசுக்களைக் கொல்வதால் என்ன நன்மை சந்தன்?”

“தாங்கள் அறியாததா புத்த தேவரே… கோமேத யாகத்தில் நாம் பசுவை பலி கொடுப்பது ரிக் வேதத்தின் அடிப்படையில் தொன்று தொட்டு நடந்து வருவது. பலி கொடுக்காமல் புண்ணியம் உண்டா ஸ்வாமி?”

“மிருக வதை என்னும் நோக்கம் பெரும் பாவம். ஒரு மாமன்னரின் உயிரே அதனால் பறி போனது. உயிர் போகும் முன் அவரது மகனைப் பிரிந்து மன நிம்மதி இழந்தார். இதைத் தாங்கள் அறிவீர் தானே?”

“குரு தேவா… தாங்கள் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று இந்த ஏழைக்குப் புரியவில்லை. சற்று விளக்கமாகக் கூறுங்களேன். ”

“ராமாயணம் என்ற இதிகாசத்தை வாசிப்பீர்களா?”

“”சுவாமி.. வால்மீகி ராமாயணத்தில் ஏதாவது ஒரு ஸ்ர்க்கத்தை வாசிக்காமல் அடியேன் உணவே உண்பதில்லை”

“நல்லது சந்தன். மகாராஜா தசரதன் தனது உயிருக்கு உயிரான ராமனை ஏன் பிரிந்தார் என்பதற்குக் காரணமான ஒரு முன் கதை உண்டில்லையா/ அதைக் கூறுங்கள்”

“நிச்சயமாக புத்த தேவரே. ஸ்ரவணன் என்னும் இளைஞன், கண் பார்வை தெரியாத தம்து பெற்றோர் இருவரையும் தூக்குத் தூக்கியில் வைத்து பல இடங்களுக்கும் சுமந்து சென்று வேண்டிய பணிவிடைகள் செய்து வந்தான். ஒரு முறை காட்டில் அவர்களுக்கு என நீர் சேந்தி வர ஒரு குடத்தினால் சுனையில் நீர் அள்ளும் போது அது ஒரு புலி நீர் அருந்தும் சத்தம் என நினைத்து, ஒலி வந்த திசையில் மகாராஜா தசரதர் அம்பை எய்தார். அவரது வில்லாற்றலில் குறி தவறாத அந்த அம்பு அவன் நெஞ்சில் ஆழமாகத் தைத்தது. நெருங்கிச் சென்ற போதே தான் செய்த மகா பாவத்தை தசரதர் உணர்ந்தார். வருந்தினார். சாகும் தருவாயில் கூட ஸ்ரவணன், தன் தாய் தந்தையருக்குக் குடிப்பதற்கு அந்தக் குடத்தில் உள்ள தண்ணீரைக் கொண்டு போய்க் கொடுக்கும் படி வேண்டி உயிர் நீத்தான். தசரதர் பெரியவர்களுக்கு குடிக்க நீர் கொண்டு போய்க் கொடுத்தார்.

பின்பு அவர்களிடம் தன் தவறைக் கூறி மன்னிப்புக் கேட்டார். அந்தச் செய்தியைக் கேட்டுத் துடிதுடித்த ஸ்ரணனின் தந்தை ” எப்படி நாங்கள் எங்கள் மகனை இழந்து வாடுகிறோமோ அதே போல் நீயும் புத்திர சோகத்துக்கு ஆளாகி உயிர் துறப்பாய் என சாபமிட்டார். மீளாத சோகத்தில் ஆழ்ந்த அந்தப் பெற்றோரும் ஒவ்வொருவராக சில நாட்களில் உயிர் நீத்தனர். இந்த சாபமே பின்னாளில் தசரதர் ஸ்ரீராமரைப் பிரிந்து வாடி உயிர் துறக்கக் காரணம்”

“நல்லது சந்தன். தசரதருக்கு இந்தச் சாபம் கிடைக்கக் காரணம் என்ன?”

“அது தான் நான் குறிப்பிட்டேனே. ஸ்ரவணன் என்னும் பாலகனை அம்பு எய்து கொன்றதே காரணம்”

“அம்பு எய்யும் போது தசரதருக்கு அது ஒரு மனிதன் என்று தெரியுமா?”

“தெரியாது. ஒரு புலி என்று எண்ணித் தானே அம்பை எய்தார்”

“அதாவது ஒரு விலங்கைக் கொல்லும் எண்ணம் இருந்ததற்குக் கிடைத்த பலன் இல்லையா?”

“என்ன சொல்கிறீர்கள்?”

“உயிர்க் கொலை, வேட்டையாடுதல் என்னும் உத்தேசத்துடன் தானே அவர் காட்டுக்குப் போனார்?”

“ஆமாம்”

“அது போல் வேட்டையாடும் பழக்கம் , வாயில்லா ஜீவன்களைக் கொல்லும் பாரம்பரியமே அவருக்கு இல்லாமல் இருந்திருந்தால் தசரதருக்கு சாபமும் சோகமும் ஏற்பட்டிருக்காது இல்லையா?”

“ஆமாம் புத்த பெருமானே”

“அவ்வாறெனில் நீ இப்போது செய்ய முடிவு செய்திருக்கும் உயிர்க் கொலையால் உனக்கு என்ன விபரீதம் நிகழும் என்று யோசித்தாயா?”

சில நொடிகளை மௌனம் தின்றது. ஒரு பெண் குரல் அதைக் கலைத்தது.

“ஆண்களும் துறவிகளும் நிறைந்த சபையில் பேசுவதற்காக என்னை மன்னியுங்கள். நான் அவரது தர்ம பத்தினி”

“சொல் தாயே” என்றார் புத்தர்.

“சுவாமி எனக்கு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். தசரதர் குடும்பத்துக்கு ஆகிய கதி என் குடும்பத்துக்கு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் யாகத்தை முறைப்படி தொடங்கி ஆகி விட்டது. பலி இல்லாமல் குறையோடு ஒரு பிராமணர் எப்படி அதை முடிக்க இயலும். ஞானத்தின் வடிமான தாங்களே ஒரு நல்ல தீர்ப்புச் சொல்லுங்கள்”

“மறுபடி நான் ராமாயணத்தில் இருந்து மட்டுமே உதாரணம் காட்ட இயலும்”

“சொல்லுங்கள் குரு தேவரே”

“யக்ஞத்தை ஒரு குடும்பத் தலைவன் தனியே மனைவி இல்லாமல் தானே மட்டும் சங்கல்பம் செய்து நடத்த இயலுமா?”

“கூடாது பெருமானே. தர்ம பத்தினியுடன் சேர்ந்தே அதைச் செய்ய வேண்டும் என்பதே சாஸ்திரம்”

‘நல்லது தாயே. ஸ்ரீராமர் சீதையை வனத்துக்கு அனுப்பிய பின் அசுவமேத யாகம் செய்யும் போது அவர் மனைவி உடன் இல்லை என்னும் சாஸ்திர சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது இல்லையா? அப்போது அவர்கள் குரு என்ன தீர்ப்புக் கூறினார்?”

“”சீதா தேவியின் பிரதிமையை அந்தப் புண்ணியவதிக்குப் பதிலாகத் தமது அருகே வைத்து யாகத்தை நடத்தும் படி கூறினார்”

“வசிஷ்டரே ஸ்ரீராமனுக்கே கூறிய அதே முறையை நீங்களும் செய்யலாமே?”

“எவ்வாறு ஸ்வாமி?”

“புற்களைக் கட்டுக்கட்டாக அடுக்கி அவற்றை பசுவுக்குப் பதிலாகப் பலி கொடுக்கிறோம் என்று சங்கற்பித்து யக்ஞத்தைப் பூர்த்தி செய்யுங்கள்”

“எங்கள் குடும்பத்தைக் காத்த உங்களுக்கு மிக்க நன்றி புத்த தேவரே” என்று சந்தன் தன் குடும்பத்துடன் புத்தரின் பாதம் பணிந்தார்.

“அங்க நாட்டின் அதிபதியாக ஒரு இளவரசனாகவே உங்கள் காலம் முடியும் என்று ஜோதிடர்கள் கூறி விட்டார்களா? இல்லை. அதற்கும் வழி இல்லாமல் ஒரு பிட்சுவாகும் அதிர்ஷ்டமா? விசாரித்து முன் கூட்டியே தெரிந்து வைத்து கொள்ளுங்கள் அஜாத சத்ரு”

“உங்கள் எதிரில் மது அருந்துவது மரியாதையில்லாத செயல் என்பதால் தங்கள் கோபத்தை இப்ப்டி வெளிப்படுத்துகிறீர்களா மகான் தேவதத்தரே”

“நான் மகான் இல்லை அஜாதசத்ரு. புத்தர்தான் மகான். தேவர். அவருடைய பாதம் பணியும் உங்கள் சிற்றன்னையரின் மகன்களில் ஒருவரே மன்னராவார்”

“இதை என் தந்தை ஒருக்காலும் செய்ய மாட்டார் பிட்சு”

“ஆனந்தன் வழியாக புத்தர் சொல்லி அனுப்பி வைப்பதையே அவர் செய்வார்”

“நீங்கள் புத்தரை சரணடைந்து ஷத்திரிய வீரத்தை நிரூபிக்கும் யுத்தம், வேட்டை எல்லாவற்றையும் விட்டு விட்டு நாட்டை பரிபாலனம் செய்ய முடிவெடுப்பது நல்லது இளவரசரே”

“பிட்சுவே இது என்ன அநியாயம்? எதற்காக ஷத்திரிய தர்மத்தை விட்டுத் துறவி செல்லும் வழியில் போக வேண்டும்?”

‘ஏன் கூடாது அஜாத சத்ரு? மாமன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி. நீங்களும் அதே வழியில் தானே செல்ல வேண்டும்?”

“நீங்கள் சொல்வது உண்மையானால் நான் பிட்சுவாக மாறுவதே நல்லது”

“சரியாகச் சொன்னீர்கள் இளவரசரே. சாக்கிய வம்சத்து ராஜ குமாரர்கள் பிட்சுவாக மாறி விட்ட பிறகு ம்கத நாட்டில் மட்டும் ஏன் அப்படி ஆகக் கூடாது? முதன் முதலாக மகத நாட்டில் தான் கோமெத யாகத்தில் புல்லை பலியிட்டிருக்கிறார்கள்”

“என்ன சொல்கிறீர்கள் பிட்சுவே?”

“அஜாத சத்ரு, அங்கக் நாட்டில் அடைபட்டுக் கிடக்கும் தங்களுக்கு ராஜகஹத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஒரு அந்தணர் கோமேத யாகத்தில் பலியிடக் கொண்டு வந்த பசுக்களை அனுப்பி விட்டு புத்தர் சொன்னதால் புற்களை கட்டுக் கட்டாக வெட்டி அதுதான் பலி என்றார்”

“நீங்கள் பௌத்தம் நாட்டுக்கு எதிரி ராஜ பததிகளுக்கு எதிரி என்கிறீர்களா?”

“அஜாத சத்ரு.. நடுநிலையோடு ஷ்ரமணர்கள் ராஜாங்கத்தை விட்டு ஒதுங்கித் தம் வழியில் சென்றது போல புத்தர் செல்லவில்லை. அவரது வழிகாட்டுதலில் மகதத்துக்கு என்ன ஆகுமோ என்ற கவலையிலேயே நான் திரும்பி கபிலவாஸ்து செல்லாமல் இருக்கிறேன். புத்தருடன் அல்லது ஆனந்தனுடன் இணைந்து செயல் பட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை”

“பிட்சு தேவதத்தரே.. தயவு செய்து தாங்கள் மகதத்திலேயே இருங்கள். மகதத்தை நான் மீட்க முடிவு செய்து விட்டேன். நீங்கள் உறுதுணையாக இருங்கள்”

“சாக்கிய வம்சத்து புத்தர் செய்யும் சதியை அதே வம்சத்து தேவதத்தன் செய்தான் என்றே வரலாறு கூறும் இளவரசரே”

“மகத நாடு வீர ஷத்திரிய வழியில் தான் செல்லும். நான் மமன்னரிடம் இறுதியாக ஒன்றைச் சொல்லப் போகிறேன்”

“என்ன சொல்லப் போகிறீர்கள்?”

“நாட்டை முதாதயரின் பெருமை மிக்க பாரம்பரியத்திலிருந்து மாற்றாதீர்கள் என்று”

“சரி என்று சொல்லி உங்களை அப்போதைக்கு சமாளித்தால்?”

‘அது எப்படி முடியும்? என் முடிவு ஒன்று தான். மக்கள் பௌத்தத்தையும் புத்தரையும் போற்றலாம். ஒரு துறவியைத் தம் ராஜாங்கத்தில் தலையிடும் அளவு இடம் தந்த மாமன்னர் இனி ராஜ்ஜியத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அதே ஒரே தீர்வு”

“சரியான முடிவெடுத்தீர்கள் அஜாத சத்ரு”

ராணியார் கேமா மிகுந்த விசனத்துடன் இருந்தார். உறங்காமல் வெறுமனே படுத்திருக்கும் மன்னரிடம் எப்படிப் பேச்சைத் துவங்குவது என்று தயக்கமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை.

“சுவாமி, தாங்கள் அஜாத சத்ருவுக்கு முடிசூட்டும் முடிவை அவனிடம் மட்டும் தானே கூறினீர்கள். வேறு யாரிடமும் கூறவில்லையே?”

‘மந்திரிகளிடம் நாளை அறிவிக்கலாம் என்றிருக்கிறேன். நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?”

“அஜாதசத்ரு தேவதத்தனின் சகவாசத்துக்குப் பின்னரே ஆட்சியைக் கேட்குமளவு மாறியிருக்கிறான். தேவதத்தன் பௌத்தத்தின் ஆன்மீக வழியில் நடப்பதாக சங்கத்தில் யாரும் கருதவில்லை. முன் காலத்தில் கபிலவாஸ்துவில் தேவதத்தன் நடவடிக்கைகள் நல்லவிதமாக இல்லை”

“அஜாதசத்ரு கையில் அங்க நாட்டையே கொடுத்திருகிறோம் கேமா. அவனது சேர்க்கை சரியில்லைஎன்று அவனைக் குழந்தையாகவா நடத்த முடியும்?”

“அப்படி இல்லை. அங்க நாட்டில் அவன் போக வாழ்க்கை வாழ்வது குறித்த செய்திகளைப் பற்றி நீங்களே எவ்வளவோ கவலைப் பட்டிருக்கிறீர்கள். ம்கதத்தையே அவன் கையில் கொடுக்க என்ன அவசரம் மாமன்னரே?”

“கேமா.. பௌத்தத்தில் நானும் ஒரு பிட்சுவாக வேண்டிய கால கட்டம் வந்து விட்டது. அவனும் பட்டம் பெற உரிமை உள்ளவனே. இரண்டும் பொருந்தும் போது முடிவெடுப்பதில் குழப்பமே இல்லை.”

“நீங்கள் பிட்சுவாகும் முடிவு அஜாத சத்ருவின் ஆட்சிப் பொறுப்புக்கு ஒரு வருடமேனும் கழித்து இருப்பதே மகதத்துக்கு நல்லது. என் உள் மனம் தாங்கள் அவசரப் படுவதாகக் கூறுகிறது”

“முடியாது கேமா. அவன் என்னிடம் ஒரு மகனாக நின்று பேசவில்லை. அங்க நாட்டுப் படைகள் தன்னிடம் விசுவாசமாக உள்ளனர்; படையெடுக்கத் தயங்க மாட்டேன் என்னும் அளவு பேசி விட்டான்”

“அவ்வாறெனில் அவனை நம்பியா மகதத்தையே ஒப்படைக்கப் போகிறீர்கள்?”

“அவன் மனதில் நான் மகதத்தைத் தானாக முன் வந்து அவனிடம் ஒப்படைக்கப் போவதில்லை என்று பட்டு விட்டது. நானாகப் பட்டாபிஷேகம் செய்வதே நல்லது. இல்லையெனில் என் உயிருக்கே ஆபத்து”

“என்ன சுவாமி இது? இப்படி ஒரு நிலை எப்படி வரலாம்? இதை முளையிலேயே கிள்ள வேண்டாமா?அந்த நாட்களில் ஜோதிடர்கள் கணித்தது போலத் தங்களுக்கு எதிரியாக உருவாகி விடுவானோ என்று பயமாக இருக்கிறது”

” கேமா. என் படைகளும் அவன் படைகளும் எதிர் எதிர் நின்று யார் ஜெயித்தாலும் கோசலம் போன்ற எதிரி நாடுகள் மகதத்தினுள் நுழைய, தந்தை-மகன் விரோதம் வழி வகுத்து விடும். மகதம் பிழைக்கும் என்றால் நான் என்ன ஆவேன் என்னும் கேள்வி இரண்டாம் பட்சமானது”

“தேவதத்தனைத் தாங்கள் குறைவாக எடை போட்டு விட்டீர்கள். ஆனந்தனும் கவலையாகத்தான் இருக்கிறார்”

“விதி வலியது கேமா. மகனை எதிர்த்து வாளேந்துவதை விடவும் அவனுக்கு மகுடம் சூட்டுவதே எனக்குப் பிரியமானது”

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சரித்திர நாவல் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s