ஒரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து – க.நா.சுவின் சிறுகதை
க.நா.சுப்ரமணியம் பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் “க.நா.சுவின் எழுத்து மேஜை” என்னும் தலைப்பில் வெளியான காலச்சுவடு கட்டுரையை வாசிக்கலாம். 70களில் தொடங்கி தமிழ் இலக்கியத்தில் விமர்சனம் என்பதை முன்னோடியாகத் தொடங்கி வைத்தவர் க.நா.சு. தமிழவன், ஜெயமோகன், வெங்கட் சுவாமிநாதன் என்று பலரும் சமகாலத்தில் பலரும் விமர்சனத்தை வளர்த்து தமிழ் இலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டம், மற்றும் வெவ்வேறு நிலைகள் குறித்த பதிவுகளைக் கொண்டு வருகின்றனர். ஒரு விமர்சகனின் படைப்பு எப்படி இருக்கும்?
அவரது “ஒரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து” என்னும் சிறுகதையை வாசிக்கும் போது முதலில் நாம் கவனிப்பது அந்த சிறுகதையின் வடிவத்தில் உள்ள வித்தியாசம். நாட்குறிப்புகளிலிருந்து நாம் கதையையும் கதை சொல்லும் எழுத்தாளனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவனின் மன ஓட்டத்தையும் புரிந்து கொள்கிறோம்.
அப்பா- மகன் என்னும் உறவை மட்டும் எடுத்துக் கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார் க.நா.சு. மகன் அந்தக் கால வழக்கப்படி இளவயதில் திருமணமானவன். அவன் எழுத்தாளனாக விரும்பியதற்கு அப்பா தடை சொல்லவில்லை. வருமானம் இல்லாத தொழில் அது என்பதால் அவனுக்கு அவரே செலவுக்குப் பணம் தருகிறார். ஒரு மாத செலவுக்கு அவர் தந்த பணத்தில் பெரும் பகுதியை ஒரு நாள் நண்பர்களுடன் உணவகத்தில் அவன் செலவு செய்ய அவர் அதைக் கண்டிக்கிறார். அவனுக்கு அது மிகவும் தன்மானத்தைப் பாதிப்பதாக இருக்கிறது. இரவு அவனும் அப்பாவும் ஒன்றாக ஏதேனும் ஆங்கில செவ்விலக்கிய நூல்களை வாசிப்பதும் இதனால் நின்று விடுகிறது. அதே அப்பா அடுத்த நாள் அவன தன் மனைவியைக் காண மாமனார் வீட்டுக்கு சிதம்பரத்துக்குப் போகிறேன் என்றதும் உடனே பணம் கொடுத்து மருமகளுக்கு எதாவது வாங்கிக் கொண்டு போகும்படி கூறுகிறார். கதை இவ்வளவு தான்.
ஒரு குடும்பத்தில் எல்லோருமே அன்பு என்னும் தறியில் ஒரே ஆடையாய் நெய்யப்பட்ட வெவ்வேறு நூல்கள் என்னும் அளவு பாசப் பிணைப்பு கொண்டவர்களே. இருந்தாலும் அனேகமாக ஒருவர் தன்னைக் கட்டாயப்படுத்துவதாக இன்னொருவர் சிறு சச்சரவில் ஈடுபடுவது சகஜம். குறிப்பாக இளைய தலைமுறைக்கு தாய் தந்தை சகோதரியின் அன்பு அரவணைப்பாக இருக்கும் அதே சமயம் அவர்கள் ஒரு வித உணர்ச்சிமயமான தளையைத் தன் மேல் இடுவதாகத் தோன்றும். இது பல தலைமுறைகளாகத் தொடர்வது தான். அன்பின் அரவணைப்பு எப்போதும் உணரப்படுகிறது. அதே அன்பு ஒரு தளையாக, தன்னை மேலாதிக்கம் செய்யும் ஒரு செங்கோலாகவும் தெரிகிறது. ஏன் இந்த முரண்? இந்த முரணை அவர் கதையின் இறுதிப் பகுதியில் விளங்கிக் கொள்ள முற்படுகிறார். அது கீழே:
“அப்பாவோடு சண்டையையும், அதற்குப் பிறகு கத்தரித்துக் கொண்டு போய் விடாமல் என்று நான் எண்ணியதையும், எல்லோருமாகச் சேர்த்துக் கத்தரித்துக் கொண்டு, உறவு விட்டுப்போகாமல் இருப்பதற்கு எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்றும் சிந்திக்கிறேன். ரெயிலில் என் டைரியை எடுத்து வைத்து எழுதிக் கொண்டே, குடும்பத்துக்குள் உறவு தான் எவ்வளவு Complex – ஒரு வெட்டில் அறுந்து விடாது. அறுந்து விட்டதாக நினைத்துக் கொண்டாலும் தப்ப முடியாது. எல்லா உறவு முறைகளுமே love -hate relationship ஆகத் தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. சில சமயம் அன்பு சில சமயம் வெறுப்பு அதிகமாகிறது. ஒரு சமயத்துக்கு ஒரு விஷயம் சரியாகத் படுகிறது. இந்தக் குடும்பப் பிணைப்புகள் எவ்வளவு மெல்லியவை – அதே சமயம் எவ்வளவு பலமானவை” (கசடதபற இதழில் 1971ல் வெளியான கதை)
(image courtesy:http://www.tamilbooksonline.in)
தமிழில் அனைத்து தளங்களிலும் எழுதியவர் க.நா.சு. அவர்கள். ஆனால் உரிய புகழ் கிட்டாமல் போனது வருந்தத்தக்கது. பதிவர்களாவது அவரை அடிக்கடி நினைவூட்டுவது மகிழ்ச்சி தரும் செய்தி. வாழ்த்துக்கள். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.