நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர் துர்கா தேவி IAS
2010ல் இந்திய நிர்வாகப் பணிக்கான IAS தேர்வில் வெற்றி பெற்று Sub Divisional Magistrate என்னும் பொறுப்பில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் கீழ் வரும் டெல்லியை அடுத்த நொய்டா என்னும் இடத்தில் பணியிலிருந்தார் துர்கா சக்தி நாக்பல் என்னும் இளம் அதிகாரி. இவருக்கு அந்த மாநில அரசு யமுனை மற்றும் ஹில்டன் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணல் கடத்தலைக் கட்டுக்குள் கொண்டு வரும்படி பணி அளிக்கப் பட்டது. இதைக் கட்சிப் பாரபட்சம் பார்க்காமல் நிறைவேற்றிய துர்கா நூற்றுக்கணக்கான “டிர்க்”குகளைப் பறிமுதல் செய்ததுடன் அவற்றின் பின்னணியில் இருந்த பலர் மீதும் மணல் கடத்தல் குற்ற வழக்குகளைப் பதிவு செய்தார். இதன் பின் விளைவை விரைவில் அவர் அடைந்தார். ஜூலை 27 2013 அன்று ஞாயிற்றுக் கிழமையில் அவர் சம்பந்தப் படாத ஒரு “மசூதி சுவர் இடிப்பு” என்னும் சம்பவத்துக்காக அவர் பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று அந்த கிராமத்து மக்களும் ஊடகங்களும் எடுத்துக் காட்டினர். உபி அரசின் இந்த அடாவடிச் செயலை ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
அரசின் உயர் அதிகாரிகள் அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் செயற்படுவதற்கான சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டிய ஆட்சியாளர்களே அவர்களைக் கட்டாயப் படுத்தும் பயமுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சகஜம் என்பதை இந்தச் செய்தி எடுத்துக் காட்டுகிறது. இளைய தலைமுறையைச் சேர்ந்த இவர் போன்ற நேர்மையான பெண் அதிகாரி தேசிய அளவிலான முக்கியமான பதவிப் பொறுப்புக்குத் தகுதியானவர். தொடர்ந்து இவர் பணி நாட்டுக்கு நலம் பயக்க வாழ்த்துவோம். மக்களின் விழிப்புணர்வுக்கு இவருக்கு நிகழ்ந்தது ஒரு முக்கியமான பாடம். (Image Courtesy: Face Book)