எதிர்பார்ப்புடன் ஒரு பாராட்டு
திருவண்ணாமலையில் ஒரு மருத்துவக் கல்லூரி அதுவும் அரசுக் கல்லூரி வருவது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை. அதை தமிழக முதல்வர் சென்னையில் இருந்தே துவங்கி வைத்திருக்கிறார். பல திட்டங்களை அரசுகள் இவ்வாறு துவக்குவதும் காணொளி மூலம் கூட்டம் போடாமலயே விவாதங்கள் செய்வதும் அரசு தரப்பில் கிட்டத்தட்ட நடைமுறையாகி இருக்கிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பாராட்டு எதற்காக என்பது எல்லோருக்குமே தெரியும். நேரம், எரிபொருள், ஏனைய செலவுகள் இவற்றைத் தவிர்க்க அரசாங்கமே மெனக்கெடுகிறது. ஆனால் தனி மனிதனோ ஒரு திருமணத்தில் தன் வாழ்நாள் உழைப்பை, சேமிப்பைத் தொலைத்து விடுகிறான்.
எதிர்பார்ப்புக்கு வருவோம். அரசு நிறுவனங்கள், அரசு நடைமுறைகள் இன்னும் காகிதத்தை அடிப்படையாக வைத்தே இருக்கின்றன. இந்தக் காகிதம் அசலா இல்லையா என்று ஒரு பிரச்சனை, சந்தேகம் எப்போதுமே உண்டு. மேலும் இதைப் பாதுகாப்பதும் மறுபடி பயன் படுத்துவதும் மிகவும் சிரமம். தீ விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் போயே போய் விடுகின்றன.
காகிதத்துக்கு மாற்றாக மின்னணு அரசாங்கம் இன்னும் கொளையளவில்தான் இருக்கிறது. இது நடைமுறைப்படும் போது ஊழல்களும் பெருமளவு ஒழியும். இணையதளத்தில் விவரங்களை சேமிக்கவும் வழி உள்ளது. எந்தப் பயனாளி அல்லது தொடர்புடையவரும் எளிதில் அவற்றை எடுத்துப் பயன் படுத்த முடியும். அரசுகள் இந்த திசையில் சிந்திக்கும் போது ஒரு பெரிய மாற்றம் வரும். அது மக்கள் நலனுக்கு உகந்ததாகவும் ஊழலுக்கு எதிராகவும் அமையும்.