வலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை
தமிழ் இலக்கியம் மரபுக் கவிதையில் இருந்து புதுக்கவிதையை இலக்கியம் என்று வரித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இயங்கிய முக்கியமான கவிஞர் ந.பிச்சமூர்த்தி. அவர் தம் குடும்ப வாழ்க்கைப் பொறுப்புக்களால் பல முறை வருடக் கணக்கில் எழுதுவதையே நிறுதியவர். இன்று எழுதுபவர்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது ஒரு கரடு முரடான பாதை ந.பி. போன்றோரால் தான் இன்று வழித்தடம் ஆனது என்று புலப்படும்.
நமக்குக் கசப்பான அல்லது பிடித்த அனுபங்கள் எப்போதும் இருக்கின்றன. கசப்புகள் இனிப்புகள் இரண்டும் எதோ ஒரு தருணத்தில் நினைவில் நிழலாடிப் போகிறவை. உலகின் ஓட்டத்தில் ஈடுகொடுக்க நாம் முயலும் சந்தர்ப்பங்கள் தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலமோ நம்மை யந்திரம் போல இயக்கிச் செல்பவை. அந்தக் காலகட்டத்தில் அனுபவம் என்று ஒன்று இருந்ததா என்று கேட்டால் ஒரு அவஸ்தை கடந்து சென்றது என்றே தோன்றும்.
வலி என்பது ஒரு அனுபவம். வலிக்கான காரணம் தென்படும் முன்னும் பின்னும் அது இரண்டு நிலைகளிலான அனுபவம். வலி உடல் சம்பந்தப்படும் போது எப்படியும் அது தீராமல் நாம் இருக்க முடியாது. மனதில் ஏற்படும் வலிக்கான காரணங்கள் எதுவானாலும் அதன் மையமாக இருப்பது சார்பு நிலை. ஒருவரைச் சார்ந்து இருப்பது என்பது எப்போதுமே வலி மிகுந்ததே. ஏனையவரைச் சாராமல் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை இருக்க இயலாது. ஆனால் சார்பின் அளவும் சாரும் காலத்தின் அளவும் வலியைத் தீர்மானிக்கின்றன.
எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் நேசம் அல்லது பாசப்பிணைப்பு எந்த அளவு என்றாலும் உணர்ச்சிபூர்வமான ஆதரவுக்காக ஒருவரைச் சார்ந்திருப்பது வலி மிகுந்தது. வலிக்குக் காரணமும் அதற்கு மருந்தும் அவரிடமிருந்தே வருகின்றன என்பதே உண்மை. மனித உறவின் பல நுட்பங்கள் இந்த வலியின் அடிப்படையில் ஆனவையே. ஒரு பெண் தன் கணவனை உணர்வு பூர்வமாகவும் பொருளாதார அடிப்படையிலும் சார்ந்திருக்கும் போது இந்த வலியின் பரிமாணங்கள் அனேகம்.
வலி சிறுகதை மிகவும் சின்னஞ்சிறிய கதை. இன்றைய காலகட்டத்தில் ஒப்பிட்டாலும் மிகவும் சிறிய கதை. ஈயம் பூசும் தொழில் புரிபவரின் மனைவி காலையில் பாத்திரங்களைத் துலக்கும் போது வெகு நேரமாகியும் எழுந்திருக்காத கணவனையும் முன்னாள் இரவில் உணவு மற்றும் நெருக்கம் இரண்டிலும் அவன் கொண்ட அதீத சந்தோஷத்தால் குழம்பிக் போயிருக்கிறாள். அவனை எழுப்ப அவன் தான் அந்தத் தொழிலை விட்டுவிட்டு எவர்சில்வர் பாத்திரம் செய்யும் தொழிற்சாலையில் தொழிலாளியாக மாறி மாத சம்பளம் வாங்க முடிவு செய்து விட்டதாகக் கூறுகிறான். அதிர்ச்சியும் வலியும் அவளது உடனடி எதிவினையாக இருக்கின்றன. இதை விட அதிக வருமானம் என்று அவன் ஆறுதல் கூறியவுடன் அவள் அவன் மீது ஆசுவாசமாகச் சாய்ந்து கொள்கிறாள். என்ன ஆயிற்று என அவன் வினவ உடம்பில் வலி என்கிறாள். கதைத் துவக்கத்தில் அவள் உடல் வலியை உதறிப் பாத்திரங்களைத் துவக்குவதைக் காண்கிறோம்.
வாழ்க்கை வலியினால் முழுமையடைகிறது. ஆனால் வலி நம்மால் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
(image courtesy:open reading room)