புத்தகப் புழுவாக இருக்க முடியாமற் போனது
எஸ். ராமகிருஷ்ணன் “வாழ்வின் சில உன்னதங்கள்” என்னும் விட்டல் ராவின் புத்தகத்தை விமர்சித்து எழுதியுள்ள கட்டுரையில் புத்தகங்களைத் தேடித் தேடித் தாம் வாங்கிய அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார். இது மனதில் ஆழமாகத் தழும்பாகிப் போன ஒரு காயத்தை நினைவு படுத்துகிறது.
மூர் மார்க்கெட், திருவல்லிக்கேணி நடைபாதை, மைலாப்பூர் நடைபாதை இவற்றில் பழைய புத்தகங்களையும், புத்தகக் கண்காட்சியில் புதிய புத்தகங்களையும் தேடித் தேடி வாங்கி வாசித்து வந்தவன் தான் நானும். நிறையவே சேர்ந்து படிக்க நேரமில்லாமல் போனது. பின் புத்தகங்களை வைத்துப் பாதுகாக்க நினைத்த போது எடுத்துப் படிக்க இடமில்லாமலும் இருந்தது.
இவற்றை நான் சிறிய காரணங்கள் என்றே கூறுவேன். எனக்கு வேறு ஒரு பிரச்சனை வந்தது. இது பல எழுத்தாளர்களுக்கு இல்லாத ஒரு பிரச்சனை. நான் நாவல் எழுதும் காலங்களில் பிறர் எழுதிய நாவல்களைப் படிக்க மாட்டேன். இரண்டு நாவல்களை நான் எழுதி முடிக்க நிறைய வருடங்களே ஆகின. நான் வாசிக்கும் எழுத்தாளரின் எழுத்து என்னை பாதிக்கும் என்று ஒரு பயம். இப்போது நான் இந்த பயத்திலிருந்து வெளியே வந்து விட்டேன். என்றாலும் எழுதவே நேரம் போதவில்லை. வாசிப்பு என்பது குறைந்த பட்சமாகவும் அதுவும் இணையத்தில் வாசிப்பது என்றும் ஆகி விட்டது. பயணத்தின் போது நிறைய படித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் பார்வை (ஓரளவு) பாதிக்கப் பட்ட பின் அது இன்னும் மோசமாக்கிவிடும் என்று ஒரு அச்சம்.
வாசிப்பையும் எழுத்தையும் ஒரே சமயத்தில் ராமகிருஷ்ணன், ஜெய மோகன் இருவருமே செய்கிறார்கள். இது பெரிய சாதனை. எவ்வளவு நேரம் தூங்குவார்கள் என்று கூட நான் ஆச்சரியப் பட்டது உண்டு.
மூர் மார்க்கெட் வளாகம் எரிந்து போன போது மிகவும் மன வேதனை அடைந்தேன். கோட்டூர்புரம் நூலகம் இயங்காது என்று தெரிந்த போதும் அதே போல ஆழ்ந்த வலி ஏற்பட்டது.
புத்தகங்கள் என்னுடைய நீண்டகால சகாக்கள். தமிழ் கூறும் நல்லுலகம் எல்லா நூல்களையும் மின் வடிவில் கொண்டு வந்தால் மிகவும் உதவியாயிருக்கும். Open Readiang Room இந்த திசையில் முன்னோடியாக இருக்கிறார்கள்.
வாசிப்பு அனுபவம் என்பதும் அதன் தொடர்ச்கியாக நம் மனதுள் ஓடும் சிந்தனைத் தொடரும் அற்புதமானவை. அசலான கவிதைகள் என் மன இறுக்கத்தை நீக்கி, பல கவிதைகளை எழுதத் தூண்டுதலாக அமைந்த தருணங்கள் உண்டு.
வாசிப்பு அனுபவம் என்ன என்றே தெரியாமல் சின்னத் திரை பெரிய திரையை வைத்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ள இளைய தலைமுறை முயல்கிறது. பாவம்.
(image courtesy: imagesofasia.com)