எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
இது திருச்சி அருகே பேசப்படும் ஒரு சொலவடை. குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் அனைவருமே ஒன்றுபட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கட்டாயத்தைத் தாண்டிச் செல்வதற்காக ஒரு அவரசச் சட்டமும் வர இருக்கிறது.
சமுதாயத்துக்குப் பணி செய்ய வேண்டியவர்கள் முதலில் மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் பிரதிநிதிகளைப் பணி செய்ய வைக்கும் பலம் சமூக ஆர்வலருக்கும் ஊடகங்களுக்கும் உண்டு. பல காரணங்களால் மக்கள் பிரதிநிதிகள் இன்னும் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
மக்களுக்குப் பணியாற்ற வருபவர்கள் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் என்ன தவறு?
நீதிமன்றங்கள் வெளிப்படையான வாத விவாதங்களுக்குப் பிறகே தீர்ப்பளிக்கின்றன. அப்பீல் என்னும் மேல் முறையீட்டுக்கும் அனுமதி அளிக்கின்றன. அப்படி இருக்கும் போது குற்றவாளி என்று தண்டிக்கப் பட்டவர்கள் எல்லோருமே தவறான தீர்ப்பால் பாதிக்கப் பட்டவர் என்றா இத்தனை அரசியல் கட்சிகளும் கூறுகின்றன?
ஏன் நல்லவர்கள், படித்தவர்கள், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர் மக்கள் பிரதிநிதியாக, கட்சி சார்ந்தோ அல்லது தனி ஆளாக அதாவது சுயேச்சையாக வரக் கூடாது? மக்கள் பணி செய்ய, அவர்களுக்கான திட்டங்களைத் தீட்ட, சட்டங்களை இயற்ற வருபவர்கள் சந்தேகத்துகு அப்பாற்பட்டவர்களாகவும் , தூய பின்னணி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை முறியடிக்க அவசரச் சட்டம் வருகிறது. அரசியல் கட்சிகளின் அவசரம் புரிகிறது. ஊடகங்களின் மௌனம் வருத்தமளிக்கிறது.
(image courtesy: photosearch.com)