தமிழக வரலாறு முழுமையானதா? -ஜெயமோகன் கட்டுரை
23.9.2013 அன்று தமிழ்- ஹிந்து நாளிதழில் ஜெயமோகனின் “வரலாற்று ஆய்வைப் புதைத்து வைப்போம்” என்னும் கட்டுரை வெளியாகி உள்ளது. பண்பாடு மட்டும் வரலாறு ஆகிய களன்கள் ஜெயமோகனின் கவனத்தைப் பெரிதும் பெற்றவை. அவரது பதிவுகளில் வரலாறு மற்றும் வரலாற்று ஆய்வு குறித்த கருத்துக்களைப் பலமுறை வாசித்திருக்கிறேன். இருந்தும் ஆழ்ந்து வாசிக்கவில்லை என்றே கீழ்க்கண்ட பத்தியைப் பார்க்கும் போது தோன்றியது:
“தமிழக வரலாறு என்பது மிகமிகக் குறைவான தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும் ஒன்று. இலக்கியச் செய்திகள் ஓரிரு கல்வெட்டு வரிகளைக் கொண்டு நம் வரலாறை எழுதியிருக்கிறோம். சங்க காலத்து மாமன்னர் பற்றி ஒரு தொல்லியல் ஆதாரம் கூடக் கிடையாது.
இந்தக் குறைவான ஆதாரங்களில் இருந்து ஒரு வரலாற்றை ஊகிக்க முடிந்த நம் முன்னோடி வரலாற்று ஆசிரியர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள். எஞ்சியவற்றை எழுதும் பணி மிச்சமிருக்கிறது”
ஜெயமோகன் ஒரு கசப்பான உண்மையை நம்முடன் பகிர்ந்திருக்கிறார். பல சமயம் ஒரு வலி அல்லது கசப்பான அனுபவம் அதே போன்ற கடந்த கால அனுபவம் ஒன்றை நினைவு படுத்தும்.
பல வருடங்களுக்கு முன் என் பெரியப்பா காலமானார். அப்போது ஈமைக் கடன்கள் முடியும் நாளில் வந்திருந்த புரோகிதர் என் தாத்தாவின் அப்பா பெயரைக் கேட்டார். எங்கள் குடும்பத்திலேயே மூத்தவராக ஒரு பாட்டி இருந்தார். அவருக்கே அவரின் பெயர் தெரியவில்லை. மரியாதை காரணமாக குடும்பத்தலைவரின் பெயர் குழந்தைகள் பெயருடன் இணைத்து மொழியப் படுவது காரணமோ எது காரணமோ தெரியாது. அப்போது எனக்குள் ஒரு மனிதனின் காலம் எந்த அளவு அல்லது எத்தனை காலம் நினைவு கூரப் படும் என்னும் கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கான விடை இன்று வரை கிடைக்கவில்லை.
தமிழக வரலாற்றுக்கான ஆதாரங்கள் இனிமேல் எங்கே கிடைக்கக் கூடும்? ஏடுகளை ஆடிப் பெருக்கில் வீசி எறியும் ஒரு வழக்கம் இருந்தது தான் காரணமா? யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள வரலாற்றின் தெளிவின்மையை சாதியவாதிகள் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்னும் ஜெயமோகன் கருத்தும் சரியானதே.
சரித்திர காலத்தை நோக்கும் போதெல்லாம் நம் மனதுள் எழும் கேள்வி ஏன் இவ்வளவு மிகை என்பதே. எப்படி இப்போதுள்ள சாதாரண மனிதன் முதல் ஆட்சியாளர் வரை அனைவரிடமும் குறை நிறைகள் உண்டோ அதே போல் அன்னாளிலும் குறை நிறை உள்ள ஒரு சமூகம் தானே இருந்திருக்கும்? அன்னாளில் தொடங்கிய ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளும் வன்மங்களும் இன்னும் மாறவில்லையே. இந்தியாவின் மற்ற மொழி பேசும் பகுதிகளில் உள்ள அரசரிடம் இல்லாத குறையோ சிறப்போ இரண்டுமே தமிழ் மன்னரிடம் இருந்திருக்குமா? குறுநில மன்னரும் பெரிய மன்னரும் தமக்குள் சண்டையிட்டதாகவும் அறிகிறோம். சமண பௌத்த மதத்தை அழிக்கும் மத சகிப்புத்தன்மை இல்லாத சூழலைக் காண்கிறோம். சைவ வைணவ சண்டையும் அவ்வாறானதே. எனவே பெருமையோ பெருமை என்று கொண்டாட எதாவது இருக்குமா?
ஆய்வுகள் முனைவர் பட்டம் பெற கட்டாயப் பணிகள் என்பதே உண்மை. பல ஆய்வுகள் வேறு ஒரு அல்லது பல ஆய்வுகளின் மறு சுழற்சி என்பதும் தெளிவு. ஆய்வு உண்மையை நோக்கி அல்லது தெளிவை நோக்கி இல்லாமல் ஒரு யூகத்தை நிறுவும் முயற்சியாகவே அமைகின்றன.
இவைகளை அறிவு தளத்துக்குள் நிலை நிறுத்துங்கள். அதாவது சக ஆய்வாளரிடமும் வல்லுனரிடமும் விவாதித்திடுங்கள். உணர்ச்சிமயமான யூகங்களை சமூக தளத்தில் கொண்டு வராதீர்கள் எனபதே ஜெயமோகன் நிறைவாக கூறுவது.
திருக்குறள் நமக்குள் தெளிவு கொடுக்கும். சங்க கால இலக்கியங்கள் பல இலக்கிய நயத்துக்காகச் சாகா வரம் பெற்றவை. இப்படி நமக்கு வழிகாட்டுதலுக்கு உதவும் நம் பண்பாட்டின் மேல் நிலைக்குத் துணையாகும் அளவு அந்த திசையில் நாம் வரலாற்றுக் காலத்துக்குள் சென்று வந்தால் போதும். இப்போது தீராமல் நாம் வளர்த்து வரும் வியாதிகள் அப்போதும் இதே போலத்தான இருந்திருக்கும். ஐயமில்லை. மேம்பட்ட சமுதாயமாக மனித இனம் பரிணமிக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் போதவில்லையே.
(image courtesy: wiki)