(image courtesy:http://www.google.co.in/)
வைதீகமான குழந்தைத் தொழிலாளி
நான் இருக்கும் திருவான்மியூரில் ஒரு கோயில் இருக்கிறது. (நான் குறிப்பிடுவது மருந்தீஸ்வரர் கோயிலை அல்ல) இதற்கு ஒரு தல புராணம் உண்டு. அதை வேறு ஒரு தொடர்பில் எழுத வேண்டும். சாலையோரத்தில் போக்குவரத்தை பாதிக்கும் தெரு ஓரக் கோயில் இது. இங்கே பதின்களில் காலெடுத்து வைத்துள்ள ஒரு சிறுவன் பூசாரியாக அல்லது அர்ச்சகராகப் பணி புரிகிறான். காலையிலும் இரவு கிட்டத்தட்ட 9 மணி வரையிலும். அவன் பள்ளிக்குப் போகிறானா இல்லையா என்று தெரிய வில்லை.
அவனுடைய நெருங்கிய நண்பனும் ஒரு குழந்தைத் தொழிலாளியே. எங்கள் வீட்டுக்கு செய்தித்தாள் போட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எங்களால் இயன்றது புதிய துணிகள் எடுத்துக் கொடுப்போம். அவனுக்கு அதிக “ஆப்ஸ்” இருக்கும் கைபேசிகளை மாற்றி மாற்றி வாங்கும் அளவு கைபேசிகளின் மீது ஒரு ஈர்ப்பு. என் மகனிடம் அடிக்கடி தனது புதிய கைபேசியைக் காட்டிப் பெருமை பட்டுக் கொள்வான். இன்று நான் தினசரி பார்க்கும் காட்சி கோயிலுக்கு உள்ளேயிருந்து அவனும் வெளியே படிக்கட்டில் இருந்து “வாடா” என்று இவனும் பேசிக் கொண்டிருப்பது. ஒருவன் செய்தித்தாள் போட்டுத் தன் தூக்கத்தைத் தொலைத்துத் தொழிலாளியாக உழல்பவன். மறுபக்கம் கடவுளுக்கு பூசை செய்யும் தொழிலில் இந்தப் பையன். இருவருக்குமே நடப்பது அநீதியே.
நண்பர்களிடமிருந்து, விளையாட்டிலிருந்து பிரித்து ஒரு சிறுவனை அர்ச்சகராக்குவதால் என்ன பயன்? அவனே உயர்நிலைப்பள்ளி அளவிலாவது படித்து விட்டுத் தானே விரும்பி இதைத் தொழிலாக ஏற்றால் அது வேறு விஷயம். அவன் நண்பர்கள் அவனைத் தொட்டுப் பேசினால் கூட பூசை செய்பவருக்கு அது கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பாவமாக இருக்கிறது அந்த சிறுவனைப் பார்த்தால்.
மறுபக்கம் செய்தித்தாள் சிறுவன் அடிக்கடித் தூங்கி விட்டு மிகவும் தாமதமாக செய்தித் தாளைக் கொண்டு வந்து பலரிடமும் திட்டு வாங்குவான். மழை நாட்களில் தொப்பலாக நனைந்து வருவான். அநியாயம் இது.குழந்தைப் பருவம் என்பது என்றைக்குமே திரும்பி வராத குறுகிய காலம். அதைக் குதறிப் போடுவது எந்த அளவு குரூரமானது! வருமானம் வரும் எல்லா இடங்களிலும் மணிக்கணக்கில் வேலை பார்க்க நமக்குக் குழந்தைகள் தேவைப் படுகிறார்கள். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் குழந்தைத் தொழிலாளிகள் உருவாவது ஒரு புதிய அத்தியாயம் அவ்வளவே.
குடும்பச் சூழ்நிலையே காரணம் என்று வாதிப்போர் உண்டு. ஒரு குடும்பம் இந்த விலை கொடுத்துத் தற்காலிகமாகத் தன்னைக் காத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த சிறுவன் அல்லது சிறுமியின் எதிர்காலம் நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு விடுகிறது. அவன் ஒரு நல்ல நிலைக்கு வர முடியாமல் வாழ்நாளெல்லாம் ஒரு கூலி போலவே வாழ்ந்து முடிக்க வேண்டி வருகிறது,
கல்வியின் மகத்துவம் எல்லா நிலைகளிலும், அதாவது எந்த நிலையில் உள்ள எந்த வருமானத்தில் உள்ள யாருக்கும் – புரிய வேண்டும். இன்று குழந்தைத் தொழிலாளியாக இருப்பவருக்குள் ஒரு அப்துல் கலாம் அல்லது நீதியரசர் சந்துரு போன்ற ஒரு தலைமைக் குணமும் அறிவுத் தாகமும் உள்ள எவ்வளவோ பேர் இருக்கலாம். நாம் பாதிப்பது ஒரு குழந்தையை மட்டுமல்ல. ஒரு சமுதாயத்தையே. இதைத்தான் நினைவிற் கொள்ள வேண்டும்.