தமிழ் எழுத்துரு – ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை
தமிழ் எழுத்துருவை அப்படியே ஆங்கிலத்திலேயே நிரந்தரமாகப் புழக்கத்துக்குக் கொண்டு வந்தால் என்ன? குழந்தைகள் சிரமமின்றி ஒரே எழுத்துருவைக் கற்றால் போதுமே என்று தமிழ் இந்து பத்திரிக்கையில் 4.11.2013 அன்று கட்டுரையில் எழுதி இருக்கிறார் ஜெயமோகன்.
பல காலமாக “தாய்மொழியில் கற்பது தான் நல்லது ” என்று எல்லோரும் நிறையவே எழுதி இருக்கிறார்கள். அது போகாத ஊருக்கு வழி (குறிப்பாகத் தமிழ் நாட்டுச் சூழலில்). ஏனென்றால் தமிழ் நாட்டில் நாம் முறையாகக் கற்போறையும் கலைஞர்களையும் மதிப்பதில்லை. இங்கே உணர்ச்சி கொழுந்து விட்டெரியும் விஷயங்களுக்கும் வெட்டி வீராப்பு காட்டும் மொழி சம்பந்தமான சச்சரவுகளுக்கும் மிகவும் வரவேற்பு. விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் நாம் நல்ல தமிழ் நூல்களைக் கொண்டு வரவே இல்லை. இன்று அதைக் கொண்டு வர அப்துல் கலாம் உட்பட தமிழ் மற்றும் விஞ்ஞானம் இரண்டிலும் வல்லுனராக எத்தனையோ பேர் இருந்தாலும் கல்வியாளர் மற்றும் மக்களிடம் இதற்கான வரவேற்பு இல்லை. இந்தி எதிர்ப்பும் ஆங்கில மோகமும் தமிழ் நாட்டின் நிரந்தரக் கொள்கைகள் என்பதே காரணம்.
சரி ஜெயமோகன் விஷயத்துக்கு வருவோம். மொழியைக் கற்பது கையாள்வதும் பெரிய சுமையே அல்ல. நான் வேலை விஷயமாகக் கேரளாவுக்கு அடிக்கடி சென்ற காலத்தில் அவர்கள் பஸ்ஸில் எண்ணும் இருக்காது ஆங்கிலமும் இருக்காது. அப்போது குறுகிய காலத்திலேயே ஓரளவு அவர்களது எழுத்து முறையைப் புரிந்து பேருந்துப் பயணம் மேற் கொண்டேன்.
ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களில் உள்ள தமிழ் அல்லது தென்னகக் குழந்தைகள் தாய்மொழி, ஹிந்தி, ஆங்கிலம் மூன்றிலும் சரளமாக இருப்பதைக் காண முடியும். தமிழ் எழுத்துரு புழக்கத்தில் உள்ள அளவு அவர்கள் அதை எழுத்துக் கூட்டிப் படிக்கிறார்கள். என் குழந்தைகளே உதாரணம்.
எனவே எழுத்துருவைக் கற்றுத் தமிழை வாசிக்கப் போகிறவர்கள் யாருமில்லை. எழுத்துரு தெரிந்தவரகள் சினிமாத் துணுக்கு, சமையல் குறிப்பு மட்டுமே வாசித்தால் அதைப் பார்த்து இலக்கியவாதிகள் மனம் வெதும்ப வேண்டியதே இல்லை.
எழுத்துரு ஒரு தடையே அல்ல. அதைக் கற்பதும் ஒரு சுமை அல்ல. மக்களிடம் வாசிக்கும் பழக்கம் போய் விட்டது ஒரு பக்கம். அச்சுப் பிரதியில் வாசிப்போர் மிகக் குறைவு. மின் நூல்கள் தமிழில் இன்னும் ஏன் புழங்கவில்லை என்பதைத் தான் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால் ஜெயமோகனுக்கு நம் எதிர்வினை இது தான்- தமிழில் எஞ்சி இருப்பது எழுத்துரு ஒன்று தான். அதையும் தொலைக்க வேண்டுமா?
(image courtesy: sentamil.org)
சரியாக சொன்னீர்கள்..
Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்