நல்ல இலக்கியம் எது- வண்ணநிலவன் உடைக்கும் பிரமைகள்


நல்ல இலக்கியம் எது- வண்ணநிலவன் உடைக்கும் பிரமைகள்

தீராநதி டிசம்பர் 2013 இதழில் இலக்கியம் பற்றிய பல பிரமைகளை வண்ணநிலவன் உடைத்தெறிகிறார். வணிகப் பத்திரிக்கைகளால் நிறுவப்பட்டு வெகுஜனங்களிடம் உள்ள சில பிரமைகள்;

1.வட்டார வழக்கில் எழுதப் படுவதெல்லாம் நல்ல இலக்கியம் – இது பிரமையே. வட்டார வழக்கு தரும் கிளுகிளுப்பு ஒரு நல்ல இலக்கியத்துக்கான அடையாளம் கிடையாது.

2.நுணுக்கமான வர்ணனையும் சித்தரிப்பும் நல்ல இலக்கியத்தின் அடையாளம் – கிடையாது. இதைத் தாண்டியது நல்ல இலக்கியம். இந்த வர்ணனை ஜோடனையெல்லாம் தரமான இலக்கியத்தின் அடையாளம் ஆகா.

3.கூர்மையான் உரையாடல்கள் ஒரு படைப்புக்கு இலக்கிய அந்தஸ்து தருவதற்கான லட்சணம் அல்ல.

4.வறுமை, கஷ்டம் , சோகம் இவற்றை மையப்படுத்தினால் அது நல்ல இலக்கியம் என்பது பிரமை.

5.பெண்ணியமோ தலித்தியமோ பிரசார இலக்கியம் நல்ல் இலக்கியமாகாது.

6.வேகமான நடையில்லாமல் மெதுவான நடை இருந்தால் நல்ல இலக்கியம் என்பதும் பிரமையே.

தமிழில் ஒரு சிறிய பட்டியல் தான் வ.நி. காணும் நல்ல எழுத்தாளரின் பெயர்கள். மௌனியின் எல்லாப் படைப்புகளும், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம் மற்றும் க.நா.சு இவர்களின் படைப்புகளில் சிலவும் நல்ல இலக்கியம் என்று காண்கிறார்.

வ.நி. குறிப்பிடும் ஒரே ஒரு அளவு கோல் சமகால வாழ்க்கையைச் சித்தரிப்பதில் காவியத் தன்மை இருக்க வேண்டும் என்பதே. நல்ல இலக்கியம் போன்ற பாவனைகள் உள்ளவற்றை ஐந்துவிதமாக அடையாளப் படுத்தியவர், காவியத்தன்மை என்றால் என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம்.

இனி அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம்.

காவியத் தன்மை என்று வண்ண நிலவன் குறிப்பிடுவது நல்ல இலக்கியம் என்பது ஒரு இனிய வாசிப்பு அல்லது மனக் கிளர்ச்சியும் பரவசமும் தரும் வாசிப்பு அல்ல. எல்லாக் காவியங்களுக்கும் ஒரு பொது குணம் உண்டென்றால் அது தான் மானுட வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆழ்ந்த தரிசனம். பல தலைமுறை ஆண்களையும் பெண்களையும் பற்றிய அவர்களது வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய விடை தெரியாத கேள்விகளை தன் தரிசனத்தில் கண்டு பதிவு செய்யும் ஒரு முயற்சியே காவியம். அந்த முயற்சியில் படைப்பாளி வாசகனின் நிலையில் தான் தானும் இருக்கிறான். ஆனால் பதிவு செய்கிறவனாய் இருக்கிறான். தட்டையாக ஒற்றைச் சொல் விடையில் விண்டு விடக்கூடியாதான கேள்வியாக இல்லை வாழ்க்கை. அது ஒரு புதிராக இருக்கிறது. அந்தப் புதிரில் சில சரடுகள் பிசிறின்றி விடுபடுகின்றன. சில நாம் முயல முயல முறுக்கிக் கொண்டே போகின்றன. நாம் எல்லோருமே சுய விருப்பு வெறுப்பு, பாரம்பரியமும் சமுதாயமும் பல்லாண்டுகளாக நம் மீது சுமத்தி வரும் அடையாளம் சார்ந்த கனவு இவை இரண்டாலுமே ஆட்டுவிக்கப் படுகிறோம். ஆட்டுவிப்பவராகவும் தான். அபூர்வமாக மானுடத்தின், தன் சொந்த வாழ்க்கையின் நிலையாமையின் ஒரு மின்னல் கீற்று போன்ற தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. அந்த தரிசனம் ஒன்றும் புத்தருக்கு கயையிலும், ரமணருக்கு திருவண்ணாமலையிலும் கிடைத்த ஞான ஒளி அல்ல. அந்த தரிசனம் தவிர்க்க இயலாதது. அவ்வளவே. இந்த தரிசனத்தை ஒரு கோட்டோவியமாக ஒரு நேர்முக வர்ணனையாக தருவதல்ல நல்ல படைப்பாளியின் பணி. தான் வழி தவறிய காட்டில் வாசகன் காணக்கூடியவை எத்தனையோ. எனவே வாசகனுக்கு அந்த திக்குத் தெரியாத காட்டில் ஒரு வழிகாட்டியாக உடன் வரப்போவதில்லை அந்தப் படைப்பாளி. அவன் பயணம் தொடர்கிறது. வாசகனுக்கும் தான். இந்த திசை தெரியாத பயணம் ஏன் அலுக்கவில்லை? அப்படி அதில் என்ன இருக்கிறது? ஆன்மீகத் தேடல் உள்ளே இருப்போருக்கு அது காலங்காலமாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. நல்ல இலக்கியம் மொழி தாண்டி மொழி பெயர்ப்பு மூலமும் இந்தத் தேடலின் பதிவாக வாசகன் இதயத்தை ஊடுருவும்.

வண்ணதாசன் உருவம் பற்றியும் , இலக்கியத்தின் மூன்று முக்கிய வடிவங்களான கதை, கவிதை, நாடகம் ஆகியவை பற்றியும் குறிப்பிடாமல் விட்டு விட்டார். கருவே வடிவத்தைத் தீர்மானிக்கிறது. கதை என்னும் வடிவம் நம் மனதின் கேளிக்கை தேடும் பகுதிக்கு வருடிக் கொடுக்காமல் நம் ஆழ் மனத்தில் உள்ள மனித் நேயக் கனவுகளைத் தொடுவது. கவிதை ஒரு குழந்தையின் வியப்போடு உலகை வாழ்க்கையை விழியை அகல விரித்துப் பார்க்கிறது. ஒரு குழந்தையின் தொடர்பில்லாத துண்டு துண்டான பேச்சுக்களே புதுக் கவிதைகள்.
நாடகம் சமுதாயத்தை நான் தினமும் சகித்துக் கொண்டு பழகி விட்ட சமுதாயத்தை ஒரு பிரேத பரிசோதனை மேஜையில் உள்ள உடலை ஒரு மருத்துவர் ஆய்வது போல் ஆய்ந்து ஒரு ஆவணமாகிறது.

வண்ண நிலவன் வணீக எழுத்து இலக்கியம் இரண்டையும் வேறு படுத்தும் புள்ளியை நமக்கு இனம் காட்ட முயன்றுள்ளார். அவருக்கு நன்றி.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s