பாரதியே ஆனாலும் மிகை மிகையே


download
பாரதியே ஆனாலும் மிகை மிகையே

“நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி, என்னை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்”

பாரதி காலம் தொட்டு இந்த தன்னை உயர்த்திக் காட்டி ஒரு பீடத்தில் இருந்து எழுதுவதும் பேசுவதும் பல இலக்கியவாதிகளிடம் உண்டு. “சுடர் மிகும் அறிவு” உடையவர் எவ்வளவோ பேர் இருந்தனர். இன்று அப்படி ஒருவரை அல்ல ஏகப்பட்ட பேரை அப்துல் கலாம் உட்பட நாம் காணலாம். பாரதியாரே கூட அவரது மதிநுட்பத்துக்காகவோ அல்லது மொழியின் மீது கொண்ட ஆளுமைக்காகவோ போற்றப் படவில்லை. அவர் தமது சுதந்திர வேட்கைக்காகவும், இலக்கியத்தில் வசன கவிதை என்னும் புதிய முறையில் புதுக் கவிதைக்கான அடித்தளத்தை இட்டதற்காகவுமே புகழ் பெற்றார்.

தாலாட்டுப் பாடல், கூலிப் பெண்கள் வயல்களில் பாடும் பாடல், ஒப்பாரிப் பாடல்கள், தெருக்கூத்து, வில்லுப் பாட்டு எனப் பல வடிவங்களில் நாட்டுப் புறப் பாடல்கள் இவை இயற்றியவர் பெயர் தெரியாத இலக்கியங்கள்.

இப்போது இலக்கியவாதிகளுக்குள் தனக்கு ஒரு மேலான இடத்தையும், தன் படைப்புகள் கவனம் பெற்றுப் போற்றப் பட வேண்டிய ஏற்பாடுகளையும் ஒரு படைப்பாளி உறுதி செய்தாக வேண்டும் என்று வெளிப்படையாகவே புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் கூறுகின்றனர். தன் நிலையைத் தக்க வைக்கும் மேலே எடுக்கும் பணிகளைச் செய்தும் வருகின்றனர்.

பாரதியாரோ இவர்களோ ஒரே ஒரு உந்துதல் உள்ளே இருந்து வருகிறது. அதாவது ” நான் அறிவிலும் ,தெளிவிலும் , கற்பனை வளத்திலும் உன்னை விட உயர்ந்தவன்; என் தலையைச் சுற்றிய ஒளி வட்டம் உனக்குத் தென்படாதது பரிதாபமே. நான் பரிவுடன் பதிவு செய்பவை உன் நன்மைக்காகவே”.

இலக்கியவாதிகளிடையே அணி சேரும் ஆட்களை சேர்க்கும் பழக்கம் வரக் காரணமே ” என் சுடர் மிகும் அறிவு எங்கே கவனிக்கப் படாமற் போய் விடுமோ?” என்னும் கவலையே.

ஒருவர் படைப்பாளி அல்லது எழுத்தாளர் ஆகும் போது அவருக்கு தன் சிந்தனைகளை, கற்பனைகளை, தரிசனங்களை, கனவுகளை, அழகியல் உணர்வுகளை எழுத்தில் பதிவு செய்யும் முனைப்பும், காலப் போக்கில் அதில் தேர்ச்சியும் உண்டு என்பது மட்டுமே பொருள்.

எழுத்தாளர் ஆகாத எத்தனையோ பாமரரின் சொலவடைகள் அல்லது பேச்சு வழக்குகளில் அங்கதமும் ஆழ்ந்த பொருளும் தென்படுவதுண்டு. “நெஞ்சுக்குள்ள இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்துல சுட்டுத் தின்னு” (பொருள்- மனக்குறையை, பரிவுடன் கேட்பவரிடம் பேசித் தீர்த்துக் கொள்).

பாலிய விவாகத்தை எதிர்த்த வாய்மொழிப் பதிவுகள் இருந்தன – “அம்மா தெரண்டுருண்டு வர்றதுக்குள்ளே அய்யா பெரண்டுருண்டு போயிருவாங்க”.

தனது ஆளுமையை பிரம்மாண்டமாக வளர்த்துக் கொண்டு தனது பதிவுகளுக்கு தனிக் கவனம் கிடைக்க வைக்கும் ஏற்பாட்டு நடவடிக்கைகள் எல்லாமே “என்ன செய்யறது. இதைப் படின்னும் நானே தான் எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கு” என்னும் மன நிலை.

இலக்கியம் என்பதற்கு மூன்று முக்கியமான பங்களிப்பாளர்கள் உண்டு. ஒன்று படைப்பாளி, இரண்டு வாசகர் மற்றும் மூன்றாமவர் விமர்சகர்.

விமர்சனத்தையே தனது ஆர்வமிக்க பணியாகச் செய்வோர் மிகச் சிலரே. எழுத்தாளர்களில் நடுநிலையான விமர்சகராகவும் பணியாற்றுபவர் அரிதாக ஒருவர் இருவர் என மிகவும் குறைவானவரே. எழுத்தாளராகவும் விமர்சகராகவும் இருக்கும் பலர் தன் எழுத்தைத் தூக்கிப் பிடிக்கத் தான் எழுதும் விமர்சனங்களைப் பயன்படுத்துவதைக் காணலாம்.

நல்ல விமர்சகர் மற்றும் நல்ல வாசகர் தேனி போலத் தேடித் தேடிப் படித்து விடுவார்கள். ஒரு நல்ல படைப்புக்கு உரிய இடத்தை அவர்கள் தருவார்கள்.

ஒரு பீடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தன் பிரம்மாண்ட பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் தரும் முனைப்பும் கவனமும் கண்டிப்பாக படைப்பின் ஊற்றுக் கண்களை அடைத்து விடும்.

சிந்திக்கும் ஆற்றல் கற்பனை வளம் அல்லது அறிவு மேம்பட்ட பொறுப்போடு செயற்பட இறைவனால் கொடுக்கப் பட்டது என்றே புரிதல் வேண்டும். தனது கலை அல்லது படைப்பாற்றலுக்கு கவனம் தேடும் அதே அளவு மக்களின் விழிப்புணர்வு தேவைப்படும் விஷயங்களை அவர்களுள் ஒருவராய் நின்று அவர்கள் முன் வைக்கும் மனித நேயமும் சமூக நலன் பேணும் அக்கறையும் தேவை.

“என்னை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது என்பது முக்கியமே இல்லை – அவர்களுத் தெரிந்திருக்க வேண்டிய – அவர்களை பாதிப்பதான- பிரச்சனைகளுள் எத்தனை என்னால் அவர்களுக்கு அருகில் எடுத்துச் செல்லப் பட்டன என்பதே என் கவனம்” என்னும் மனப்பாங்கே ஒரு ஆரோக்கியமான படைப்பாளியின் மனம்.

கலை நயமான, கற்பனையான படைப்புகளுக்கு இணையாக சமூகத்துடன் ஒட்ட ஒழுகி அவர்களுடன் பகிரும் அவர்கள் நலம் தொடர்பான பதிவுகளும் தேவை. எனக்கு இலக்கிய உலகம் எந்த இடம் தந்திருக்கிறது என்பதை நான் கவனிக்கும் அதே நேரம் சமூகத்துக்கு – அதன் சவால்களுக்கு- என் மனதில் என்ன இடம் என்பதையும் கவனிக்கும் அளவு என் மனித நேயம் விழித்திருக்கிறது என்று பொருள்.

மிகை பாரதியோ அல்லது சமகால படைப்பாளியோ யாரிடம் இருந்தாலும் சமூகத்திடமிருந்து அவர் தள்ளி இருக்கவே வைக்கும்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to பாரதியே ஆனாலும் மிகை மிகையே

  1. தன்னை முன்னிறுத்தி, தன் எழுத்து வன்மையை மக்கள் மத்தியில் பதியச் செய்து, மற்றவர்களை விட ஒருபடி மேலானவன் என்ற பெயர் பெற்றாலொழிய, ஓர் எழுத்தாளனின் சமூகச் சிந்தனை கவனிக்கப்படாமலே போய்விடும். அருந்ததி ராயின் சமூகநலக் காரியங்கள் பேசப்படுகிறது என்றால், அவர் தன்னுடைய எழுத்தால் ஒரு முக்கிய இடத்தை அடைந்தார் என்பதுதான் காரணம். ‘காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’ வந்திருக்காவிட்டால் அவரது இந்நாள் கருத்துக்கு யாரும் செவி சாய்ப்பார்களா?

    அது மட்டுமல்ல, மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்பவன் தான் எழுத்தாளன் என்பது எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடு அல்ல. அது அவனுடைய கடமையும் அல்ல. மக்களின் பிரச்சினைகளைத் தான் அவன் எழுதவேண்டும் என்றால் அதற்கு அவன் எழுத்தாளனாகவேண்டிய அவசியமே இல்லை. அரசியல்வாதியாக இருந்தாலே போதுமே!

    எழுத்தாளனைப் பொறுத்தவரை ‘மிகை’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தன் திறமையை அவன் உணர்ந்திருப்பது தவறில்லையே! அதை வாசகர்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று முயல்வதில் தவறில்லையே!

    பாரதி பற்றிய தங்கள் மதிப்பீடு அடிப்படையிலேயே பிறழ்வானது என்று தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s