கூட்டுக் குடும்பமா? தனிக் குடும்பமா?
தமிழ்த் தொலைக்காட்சிகள் அனைத்திலும் தீபாவளி அல்லது பொங்கலில் ஒரு வருடம் இல்லாவிட்டாலும் இன்னொரு வருடம் வரும் பட்டிமன்றத் தலைப்புதான் இது. கூட்டுக் குடும்பம்தான் நல்லது என்று நடுவர் தீர்ப்பும் தருவார்.
பெரும்பான்மையோர் மனதில் கூட்டுக் குடும்பம் என்பதே ஒரு உன்னதமான் அமைப்பு ஆனால் நிறைவேறாத கனவு என்னும் எண்ணமும் இருக்கிறது.
நாம் மிகவும் மதிக்கும் என் குடும்ப நண்பரான ஒரு சகோதரி தம் தமக்கை பற்றி நிறையவே கவலைப் பட்டார். சமீபத்தில் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது தமது மகன், மருமகள் பேரன் என்று அவர்களுக்கு உணவு அவர்களது வீட்டு வேலை என 60 வயசுக்குப் பிறகும் அவர் ஓய்வின்றி உழைப்பதாகக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து நாம் கூட்டுக் குடும்ப விஷயத்தில் எடுக்கும் இரு முரணான நிலைப்பாடுகளை நான் கண்டேன்.
முதியோர் இல்லங்களில் பெரியவர்களைக் காணும் போது நாம் மிகவும் வருத்தப் படுகிறோம். அவர்களைக் கைவிட்டு விட்டார்களே என்போம். அதுவே அவர்கள் கூடி வாழ்ந்தால் அவர்கள் வேலை வாங்கப் படுகிறார்கள் என்றெல்லாம் பேசுவோம்.
இன்றைய நிலவரத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகாமல் பள்ளிக்கான கட்டணத்தைக் கூடச் செலுத்த முடியாது.
எந்த ஒரு தாய் தகப்பனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கும் வரை பட்ட பாடு கொஞ்ச நஞ்சமாயிருக்காது. குடும்பத்தை நடத்தி குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அடுத்த தலைமுறைக்கு உண்டு. அவர்களுக்கு அந்த நிலையிலும் ஆதரவு தரவே பெற்றோர் விரும்புவர். 20-25 வருடம் தனது குழந்தையே உலகம் என்று வாழ்ந்த பெற்றோர் திடீரென அவர்களது குழந்தையும் வாழ்க்கைத் துணையும் தமக்கு பாரம் என்று உதற முடியுமா? உதற வேண்டுமா?
கூட்டுக் குடும்பத்தையே விட்டு விடுங்கள். வாடகை அதிகமான நகரங்களில் சிறிய வீடுகளில் அடை படும் போது தனிமை அல்லது அந்தரங்கம் என்னும் உரிமை அனேகமாக அனைத்து குடும்ப நபர்களுக்குமே பறி போகிறது இல்லையா?
எனவே பொருளாதாரம் பல விஷயங்களை முடிவு செய்கிறது. ஓரளவு வருவாய் உள்ள பல குடும்பங்களில் அருகருகில் உள்ள குடியிருப்புகளில் பெரியவரும் அடுத்த தலைமுறையும் வசிப்பதைக் காண்கிறோம். இது இரு தரப்புக்கும் உகந்த ஒரு நடுவழியாகப் பல குடும்பங்களில் உள்ள நிலையே.
மாத வருவாய் ஒரு புறம் பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது. பெற்றோரின் ஓய்வூதியத்தையும் சேர்த்து மகன் திட்டம் இட வேண்டி இருக்கலாம். மகனை நம்பியே ஓய்வூதியம் இல்லாத பெற்றோரும் இருக்கலாம்.
எது எப்படி இருந்தாலும் தனது இடம் இது. தனது முன்னுரிமை இது. தனக்கு முக்கியமானது இது. தனக்கு ஏற்புடையது இது. தனக்கு ஏற்பில்லாதது இது என பெற்றோர் மகனுடன் அல்லது மகளுடன் வாழ்நாளும் நெருங்கிய தொடர்பில் இருக்கவே வேண்டும். அது அவர்களின் கடமை கூட.
சகோதரர்களுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பாமாக இருப்பது நல்லதே அல்ல. குழந்தை வளர்ப்பு குறித்த கருத்துக்கள் பெற்றோருக்குப் பெற்றோர் கண்டிப்பாக மாறுபடும். உண்மையில் சில இடங்களில் மிகவும் பிற்போக்கான குறுகிய சிந்தனை உள்ள தாத்தா பாட்டியின் வளர்ப்பு குழந்தைகளுக்குக் கெடுதலாகவே முடியும். அருகருகே இருக்கும் ஏற்பாடு உகந்தது. ஒரே வீட்டில் பொருளாதாரக் காரணங்களுக்காக இருக்கலாம்.
நீண்ட நாள் அடிப்படையில் எல்லா இடத்திலுமே தன் இடம் இது என நிலைநாட்டி அதே சமயம் தன் பங்கு இது என்பதைக் கண்டிப்பாக நிறைவேற்றும் கடமை உணர்வும் சமமாக இருந்தால் பல மனித உறவுகள் உறுதி பெறும்.
பெண்ணடிமை, ஜாதி வெறி இவை மேலோங்கிய பழமை வாதிகளின் பரிந்துரை கண்மூடித்தனமான கூட்டுக் குடும்பம். இளைய தலைமுறை எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய இடம் இது.
(image courtesy:fotosearch.com)