நாதெள்ள சத்யா- இந்தியாவின் பெருமையா? அமெரிக்காவின் பெருமிதமா?
கட்டுரையின் துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒட்டுக் கேட்பது, உளவு பார்ப்பதில் தொடங்கி, வளைகுடா நாடுகள், வியட்நாம் உள் விவகாரங்களில் தலையிட்டு பல அத்துமீறல்களான விவகாரங்கள் என அமெரிக்காவின் மட்டமான பண்பு நாம் ஏற்பதற்கே இல்லை. வணிகத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ‘விண்டோஸ்’ பிரபலமாக ஆக அதை ஏகபோகமாக, போட்டிக்கு வழியில்லாமல் உபயோகிப்பாளரை அடிபணிய வைக்கும் விதமாகவே சந்தையில் நிறுத்தியது. Linux, Ubandu ஆகிய அனைவருக்குமான பயன்பாட்டு முறை வந்தது ஒரு பக்கம். மறுபக்கம் பல வழக்குகள் அதன் ஏகபோக வணிக முறையை எதிர்த்துத் தொடரப்பட்டது மறுபக்கம் என்னும் நிலையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொஞ்சம் தன் போக்கை மாற்றிக் கொள்ளத் துவங்கியது. (அதன் அதிபர் பில் கேட்ஸ் பெரிய வள்ளல். பல சமூகப் பணிகளைச் செய்கிறார் – அது வேறு விஷயம்.) இன்றும் பல அமெரிக்க மருந்து நிறுவனங்கள், குளிர்பான மற்றும் தயார்-உணவு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் மிகப்பெரிய முறைகேடுகளை செய்து வருகின்றன. அமெரிக்க மக்களின் பண்பாட்டில் குடும்ப வாழ்க்கைக்கு மைய இடம் இல்லை. இதுவும் நாம் ஏற்க இயலாததே.
உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் மைக்ரோஸாப்ஃட். இதன் தலைமைப் பொறுப்பு இந்திய வம்சாவளியினரான நாதெள்ள சத்யாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவுக்குப் பெருமை கண்டிப்பாக இல்லை. இந்தியாவில் இருந்து திறமைசாலிகள் வெளியேறினாலே அவர்களை சபித்து விட்டு நாம் எஞ்சியிருக்கும் திறமையைப் பயன்படுத்தும் திட்டம் ஏதும் இல்லாமல் இருப்பது இன்று வரை நடைமுறை.
ஆனால் அமெரிக்காவின் மிகப் பெரிய பெருமிதங்களான கருத்துச் சுதந்திரமும் திறமைக்கு வரவேற்பும் மறுபடி நிரூபணமாகின்றன. திறமைசாலிகள் அங்கே மேற்படிப்பு – வேலை வாய்ப்பு இவற்றிற்கான உத்தரவாதம் இருப்பதை அறிகிறார்கள். இதுவே பெரிய ஈர்ப்பாகும். பல விளையாட்டு வீரர்களை இப்படி ஈர்த்துத்தான் அமெரிக்கா உலக அரங்கில் பல வெற்றிகளை நிகழ்த்தி வருகிறது.
கருத்துச் சுதந்திரம் அமெரிக்காவின் மிகப்பெரிய பெருமிதம். இந்தியாவில் ஏட்டளவில் தான் கருத்துச் சுதந்திரம் உண்டு. சமூக வலைத்தளத்தில் எழுதியவர்களை காவல்துறை துரத்திக் கொண்டு போகும் அவலம் இங்கே. ஆனால் அமெரிக்காவில் உண்மையிலேயே கருத்துச் சுதந்திரம் உண்டு. ஊடகங்களுக்கும் தனி மனிதருக்கும் மிகவுமே சுதந்திரம் உண்டு. இது அறிவுஜீவிகளை மிகவும் உகந்த இடம் இது என்று எண்ண வைக்கிறது. கம்யூனிச நாடுகளால் வேட்டையாடப்பட்ட பல எழுத்தாளர்கள், ஆய்வாளர்க:ள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். (அமெரிக்காவின் முதலாளித்துவம் நெறிகளும் மனிதநேயமுமற்றதே. அது வேறு).
எந்த ஒரு நாட்டின் பிரஜையும் கல்வி, தொழில் இந்த அடிப்படையில் அமெரிக்காவில் வளர முடியும். காலப்போக்கில் குடியுரிமை கிடைத்தால் மக்களின் பிரதிநிதியாகக் கூட முடியும்.
வரையறையாக எழுதப்பட்ட அரசியல் நிர்ணய சட்டம் இல்லாமல், பல மாநிலங்களில் பல வித்தியாசமான சட்டங்கள் இருந்தும் அமெரிக்கா தனது மிகப்பெரிய பலமான திறமைசாலியை வரவேற்கும், கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டும் மாண்புகளால் உலகின் எல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி பிரகாசிக்கிறது.
இந்த மாண்புகளைக் கண்டிப்பாக அமெரிக்காவைப் போல் அனைவரும் வளர்த்துக் கொண்டால் கருத்துச் சுதந்திரம் பெரிய பலம் மக்களாட்சிக்குத் துணையாகும்.
உங்களைப் போல் நன்மை தீமைகளைத் தொகுத்து ஆராயும் எண்ணம் தமிழர்களுக்கு இனியும் வரவில்லை என்று எண்ணுகிறேன்.
தமிழகத்தின் எல்லாத் தவறுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் காரணம் என்று கருத்து வெளியிடுபவர்களை நமது வலைப்பதிவுகளில் நீங்கள் எப்போதும் பார்க்கலாம். அதுவும் மிகத் தரமற்ற முறையில்.
அந்த சாதியினர் தங்கள் வீட்டுப் பெண்களுடன் படிப்பறிவினால் உழைத்து உயர்ந்தார்கள் என்று இவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். . ஒருசாதியினரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காமல் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி உயரலாமே. இங்குள்ள பலரும் அம்பேத்கரை விடவும் பெரியாரைத்தான் உயர்வாகக் கருதுகிறார்கள். (தமிழகத்துக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்ததே பெரியார்தான் என்பது போல்). தனது அறிவை கல்விமூலம் உயர்த்தி பிறகு வளர்ப்பவர்கள்தான் முன்னேறுகிறார்கள்.
இங்கு உள்ள சூழ்நிலையால் பலர் வெளிநாட்டில் வேலைதேடிப் போனார்கள். போய் உயர்ந்தார்கள்.
நேரு MADRAS IS THE INTELLECTUAL CAPITAL OF INDIA என்று கூறியதை நினைவு கூற விழைகிறேன்.
என் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக எழுதியுள்ளேன்.
மிக்க நன்றி
கே. கோபாலன்
நீங்கள் நினைப்பது போல இது மேல் ஜாதி பிற ஜாதிப் பிரச்சனையே இல்லை. இன்று அரசுத் துறையில் உள்ள மெத்தனப் போக்கு மேல் ஜாதியினர் அடித்தளம் வகுத்த ஒன்றே. அறிவு கூர்மையும் திறனும் ஜாதி அடிப்படையில் ஆனது அல்ல. என் சக ஊழியர்களில் தலித்துகளின் வாரிசுகள், தனியார் துறையில் நல்ல சாதனைகளுடன் பணி புரிந்து வருகிறார்கள். மருத்துவத்துறையில் 99% மேல் ஜாதி ஆதிக்கம் தாம். மக்களுக்காக என்ன செய்து கிழித்தார்கள் இவர்கள்?
பிரச்சனை வேறு. நம் கல்வித்தரம் பள்ளிக் கல்வியில் தொடங்கி பல நிலைகளில் மிகவும் பின் தங்கியது. இரண்டாவது நாம் ஆராய்ச்சிக்காகவும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் செலவு செய்வது அற்பமான தொகை. சாதிக்கும் ஆசையும் கனவும் திறமையும் உள்ளவர்களை உற்சாகப் படுத்தும் போக்கு அரசு மற்றும் தனியார் துறையில் வரும்போது தான் ஒரு திருப்பம் வரும். கல்வித் தரம், அரசு தனியார் சேவையில் தரம், நமக்கு சந்தையில் கிடைக்கும் பொருட்களின் தரம் இவையும் உலக அளவில் மேம்பட வேண்டும். இதற்குத் தேவையான விழிப்புணர்வை, சட்டங்களை எதிர்ப்பது மேல்ஜாதியினரும், மிகவும் வருவாய் உள்ளவருமான வியாபாரிகள் குழுக்களும் அரசியல்வாதிகளுமே.
ஜாதி அடிப்படையிலான சிந்தனையே பல நூற்றாண்டுகளாக நம்மை முடிக்கிப் போட்டது.