“க்வீன்” திரைப்படம் காட்டும் தலை நிமிர்ந்த ‘புதுமைப் பெண்’


QueenMoviePoster7thMarch

“க்வீன்” திரைப்படம் காட்டும் தலை நிமிர்ந்த ‘புதுமைப் பெண்’

என் மகளின் பரிந்துரை காரணமாக நான் ‘க்வீன்’ (ஹிந்தி) திரைப்படத்தைப் பார்த்தேன். இன்றைய பெண் தலை நிமிர்ந்து எழுவாள் என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவாகத் தெரிவிக்கும் படம் இது.

ஒரு பெண்ணைப் புதுமைப் பெண்ணாகக் காட்டுவது எளிதல்ல. அவளை ஒழுக்கரீதியான தண்டவாளத்தின் மீது தடம் புரளாமல் காட்ட வேண்டும். அதே சமயம் சுதந்திர உணர்வு உள்ளவளாகவும் காட்ட வேண்டும்.

வணிக ரீதியாகவோ அல்லது கலைப்படம் என்னும் அடிப்படையிலோ கூட அதிகப் படங்கள் இப்படி வந்ததில்லை. ஏனென்றால் அதில் இரண்டு சவால்கள் உண்டு. முதலாவது மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்ற பயம். அடுத்தது ஆணாதிக்கம் என்னும் மிகப் பெரிய “கட்டாய நெறி”யை உடைக்கிற சவால். ஆணாதிக்க மனப்பான்மை உள்ளவர்களே எழுத்தாளர்களும் சினிமா இயக்குனர்களும். எனவே அவர்களுக்கு ஒரு பெண் ஓடு போல் தேய்ந்து அல்லது கண்ணாடி போல் உடைந்து அல்லது நார் நாராய்க் கிழிந்து போவதைக் காட்டுவது மிகவும் வசதியானது.

பெண்ணைப் பரிதாபத்துக்கு உரியவளாகவும், ஆண் மற்றும் குடும்பத்தைச் சார்ந்தவளாகவும் காட்டுவதே நமக்கு மிகவும் பிரியமானது. ஐஏஎஸ் அதிகாரியாய் இருந்தாலும் ஆணுக்கு அடிமையாகவே இருந்தாள். தேர்தலில் வென்றாலும் கணவனே அவளுக்கு தெய்வம் போன்ற சினிமாக்களே நாம் திரும்பத் திரும்பப் பார்ப்பவை.

‘க்வீன்’ திரைப்படத்தின் கதை மிகவும் சுருக்கமானது. ஒரு சிறுகதை என்று கூடச் சொல்லி விடலாம். ஒரு இளம் பெண். கல்லூரி மாணவி. பஞ்சாபி ஹிந்து டெல்லியில் வாழும் நடுத்தர வர்க்கப் பெண். குடும்ப நண்பர் ஒருவரது மகன் அவளைக் காதலிக்கிறான். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடாகிறது. திருமணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு அவன் அவளை ஒரு கோப்பைத் தேனீர் சாப்பிடும் சூழலில் அமர வைத்து, மிகவும் நிதானமாகத் திட்டவட்டமாகத் தெளிவாக “நீ என் வியாபார சுறுசுறுப்பு வாழ்க்கையுடன் ஒட்ட மாட்டாய். இந்தத் திருமணம் வேண்டாம்” என்று கூறுகிறான். அதை அவள் எப்படி எதிர் கொள்கிறாள். இரண்டே வாரத்தில் அவன் திரும்பவும் வந்து “உன்னை மிகவும் நேசிக்கிறேன். என்னை ஏற்றுக் கொள். நீ இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை” என்று கதறும் போது அவள் எப்படி நிமிர்ந்து நின்று அவனை நிராகரிக்கிறாள் என்பதே கதை. அவன் திருமணத்தை ரத்து செய்த போது மிகவும் சாதாரணமான ஒரு பெண்ணாக அவள் அழுது கெஞ்சிக் கதறுகிறாள். அவன் வலுக்கட்டாயமாக “பிறகு உன்னை மொபைல் போனில் அழைக்கிறேன்” என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அனுப்பி வைக்கும் வரை அவனை மன்றாடுகிறாள். பின்னர் படிப்படியாக அவள் நொறுங்கிப் போன நிலையில் இருந்து மீண்டு எப்படி நிமிர்ந்து நிற்கிறாள் என்பதே இரண்டரை மணி நேரம் ஓடும் படம். திருமணம் ரத்தானாலும் தேனிலவு போக இருந்த இடங்களுக்கு ஒரு இளம் பெண் தனியாகப் போய் வருகிறாள் என்னும் வித்தியாசமான கதையம்சம் இதன் பெரிய பலம்.

முதலில் இது ஒரு வணிகப் படம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வணிகப் படங்களின் மிகப் பெரிய பலம் அது வெற்றி படமாகும் பட்சத்தில் ரசிகர்களில் பெரும்பான்மையினரின் கவனிப்பைப் பெறுகிறது என்பதே. அப்போது ஏற்கனவே உள்ள நம்பிக்கைகளை, குறுகிய நோக்கங்களைக் கேள்விக்கு ஆளாக்காமல் அவற்றைப் பூடகமாகப் பயன்படுத்திச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஆனால் இந்தப் படம் நம் பிரமைகள் பலவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பாரிஸீல் அவளுக்கு உதவுபவள் ஒரு தங்குமிட சிப்பந்தி. அவள் திருமணமாகாமல் குழந்தை பெற்றவள். உடலுறவில் சுதந்திரமானவள். ஆனால் இவளுக்கு உதவும் இவளுக்கு ஆறுதலாகும் மனித நேயம் கொண்டவள்.

ஆம்ஸ்டர்டாமில் மூன்று இளம் ஆண்களுடன் அவள் ஒரே அறையைப் பகிர்கிறாள். ஒருவன் ஜப்பானியன். சுனாமியில் குடும்பத்தையே இழந்தவன். மற்றொருவன் ஓவியக் கலைஞன். மூன்றாமவன் கருப்பு இனப் பாடகன். முதல் நாள் இரவு அவர்களை அஞ்சி இவள் வெளியே வராந்தாவில் படுக்க முயலும் போது மூவரும் வெளியே படுத்து இவளை உள்ளே தூங்க வைப்பது நாம் வெளி நாட்டு ஆண்களைப் பற்றி வைத்துள்ள பிரமைகளைக் கேள்விக்குள்ளாக்கும். ஆம்ஸ்டர்டாமில் இவள் சந்திகும் கீழை நாட்டுப் பெண் விபசாரம் செய்து தன் நாட்டில் உள்ள தன் சகோதரிகள் மற்றும் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். பொருளாதார மந்த நிலையின் ஒரு விளைவாக இது காட்சிப்படுத்தப் படுகிறது. நவீன ஓவியக் கலையை நமக்கு அருகில் கொண்டு செல்லும் ஒரு முயற்சி இந்தப் படத்தில் உண்டு. பாரிஸை விட்டுக் கிளம்பும் முன் அவள் தம் தூரத்து உறவினரை சந்திக்கும் போது அவர்கள் இந்தியப் பண்பு மாறாமல் அவள் காயங்களைக் கிளறும் காட்சி இந்தியப் பெருமிதங்களைக் கேள்விக்குள்ளாக்கும்.

ராணி என்னும் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கணா ராவத் தனது நடிப்புத் திறமையால் நம் மனதை மிகவும் கவர்கிறார். ஜப்பானியராக நடித்திருப்பவர் நம் மனதில் நிற்கிறார்.

நுட்பமான பல வசனங்கள் படத்தில் காணக் கிடைக்கின்றன. தற்செயலாக மது அருந்தியவள் நிறையவே அருந்தி விக்குகிறாள். “இந்தியாவில் பெண்ணுக்கு விக்கும் உரிமை கூடக் கிடையாது” என்று விரக்தியாக சிரிக்கும் காட்சி நம் மனதைத் தைக்கும். பெண்ணைப் பற்றிய கண்ணோட்டம் மாற வேண்டும் என்னும் செய்தியும் நன்றாகவே நம் மனதைத் தைக்கிறது. இயக்குனர் விகாஷ் பஹலுக்கு நம் பாராட்டுகள்.

(image courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s