இடைவிடாத இன்பத்துக்கு வழி – திருக்குறள்
இன்பம் இடையறா தீண்டும் – அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
பொருள்:
துன்பங்களிலெல்லாம் துன்பமானது பேராசை என்னும் துன்பமே. அதை அழித்தொழித்தால் இடைவிடாத இன்பமே.
அவா அறுத்தல் என்னும் அதிகாரத்தில் வரும் திருக்குறள் இது. அவா என்பது ஆசை என்னும் சிறிய பொருளைச் சுட்டுவதாக இந்தக் குறளில் வரவில்லை. அது பேராசை என்னும் கொடிய மனநிலையைச் சுட்டுகிறது.
ஆசையில்லாவிட்டால் வாழ்க்கை ருசிக்குமா? ருசிக்காது தான். ஆசைக்கு அளவில்லாமல் போகும் போது அது பேராசை ஆகிறது. இலக்கற்ற ஆசை அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆசை பல திசைகளில் மனதை அலைபாய வைத்துத் துன்பமே கொடுக்கிறது.
ஒரு பள்ளிக் கூடம் சரியில்லை. அதில் ஆசிரியர்களே இல்லை. இருக்கும் ஓரிருவரும் தண்டத்துக்கு வந்து போகிறார்கள். ஊரில் ஒரு சமூக ஆர்வலர் அதன் நிலையைச் சீர்செய்ய முயல்கிறார். இது ஒரு நியாமான ஆசை. பல ஆண்டுகள் போராடி வெற்றியடைகிறார். ஊரே போற்றுகிறது. இன்னொரு ஊரில் வழி காட்டுதல் கேட்கிறார்கள். இவர் தானே தலைமை ஏற்று அவர்களின் பள்ளியையும் நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறார். புகழ் இன்னும் கூடுகிறது. ஒரு பேரியக்கத்தைத் தொடங்கித் தமிழ் நாட்டின் தலை எழுத்தையே மாற்றுங்கள் என்று சில நண்பர்கள் ஏற்றி விடுகிறார்கள். மாநிலம் அளவு சிந்தித்ததோ அல்லது ஒரு பேரியக்கத்தை நடத்துவதோ இந்த நல்ல மனிதரின் பட்டியலில் இருந்ததே இல்லை. இருந்தாலும் புகழாசை உந்த பல முயற்சிகள் எடுக்கிறார். நிறைய சமாதானங்கள் செய்து அரசியல்வாதியாகிறார். அவப்பெயர் தரும் பல வழிகளுக்குத் துணை போக நேர்கிறது. தவறான பாதையில் வெகு தூரம் வந்து விட்டது தெரிகிறது. சக்கிர வியூகம் போலத் திரும்பிப் போக வழி தெரியவில்லை. அவப்பெயரும் அவமானமுமாக ஊர் திரும்புகிறார்.
இப்படி ஒரு உதாரணத்தை கற்பனை செய்யலாம். நல்ல நோக்கமோ பொது நலமோ மக்கள் விழிப்புணர்வு மக்கள் சக்தி என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்கலாமே ஒழிய, தன் இறுமாப்பு என்னும் பாதை பேராசைக்கு அடித்தளம். இதே பேராசை தன் வெற்றி, தனக்கு செல்வம், குடும்பத்துக்குப் பணம் என்றெல்லாம் போகும் போது தவறான பாதைகளுக்கு அளவே இருக்காது.
தான் என்னும் அகமும் தனக்கு என்னும் பற்றையும் விட்டு விட்டுக் கடமை எந்த அளவோ, நல்ல நோக்கத்துக்கு எந்த அளவு உந்தும் ஆசை தேவையோ அந்த அளவு காலை அகட்டுவது சரி. அதைத் தாண்டினால் துன்பமே.
(image courtesy:tamildictionary.in)
Reblogged this on vadivelkannu (வடிவேல்கண்ணு) and commented:
ஆசையில்லாவிட்டால் வாழ்க்கை ருசிக்குமா?