மகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய்
Samereh Alinejad என்னும் பெயருடைய ஒரு தாய் தன் மகனைக் கொன்ற Balal என்னும் இளைஞன் தூக்கில் தொங்கும் முன் அவனைக் காப்பாற்றினார். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த அந்தத் தாய் அவனை மன்னிக்கும் படி வேண்ட அவன் தூக்கிலிருந்து தப்பினான். ஈரானின் Nowshasr நகரத்தில் இது நடந்துள்ளது. இரண்டு குழந்தைகள் அந்தத் தாய்க்கு தமது மற்றொரு மகனை அவர் ஒரு விபத்தில் இழந்து விட்டார். “வெறுமையான வீடு எவ்வளவு துக்கமானது என்பது எனக்குத் தெரியும். எனவே அவனை மன்னியுங்கள்” என்று அவர் கூடி நின்றவர்களிடம் தெரிவித்தார்.
தாய்மை என்பதும் தாயன்பு என்பதும் தன் குழந்தைகளிடம் மட்டும் பாசம் காட்டுவது அல்ல. அதே போல் வன்மமும் பழி தீர்க்கும் எண்ணமும் தாயன்புக்கு அன்னியமானவை. இவை இரண்டையும் இந்தத் தாயின் மூலம் நான் தெரிந்து கொள்கிறோம்.
தூக்கு தண்டனையை ஆதரிப்பவர்களின் மதங்கள் வேறு படலாம். ஆனால் அவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை மத ரீதியான அற நெறிகளைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது என்பதே. மதத்தின் மீது மிகவும் பிடிமானமுள்ள ஒரு முஸ்லீம் தாய் இப்படி ஒரு முன்னுதாரணம் கொடுத்த பின்னேனும் மதரீதியாக மட்டுமே சிந்திப்போரின் அணுகுமுறை மாற வேண்டும்.
இன்று மனித குலம் மதங்கள் ஆண்ட காலத்தைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டது. மன்னிக்கும் பண்பாடு ஜைனர்களும் கிறிஸ்துவரகளும் மட்டும் போற்றும் ஒன்றாக நின்றுவிடக் கூடாது. எல்லா மதத்தவரும் மன்னிக்கும் மாண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறருக்குத் தீங்கு நினைக்காத அறத்தை வலியுறுத்த எத்தனை பேர் முன் வருகிறார்கள்? வன்முறை இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்று விரும்பும் அறிவு ஜீவிகளே மிகக் குறைவு.
ஒரு பக்கம் ஆயுதம் ஏந்துவது, கொலை மற்றும் வன்முறையை நாம் மறைமுகமாக ஆதரிக்கிறோம். அதன் பின்விளைவாகக் கொலைகள் நடக்கும் போது சமூகமே சேர்ந்து கொலையாளியைத் தூக்கில் போட்டு நியாயம் வழங்கி விடுகிறோம். குரூரம் தனிமனிதன் செய்தாலும் சட்டத்தின் பெயரில் சமூகமே செய்தாலும் ஒன்றே. நாம் இரட்டை நிலைப்பாடு எடுக்க முடியாது.
கடுமையான சிறை தண்டனை, விடுதலையே இல்லாத சிறை தண்டனை இவற்றை வழங்கி நாம் கண்டிப்பாக ஒரு அச்சுறுத்தலை வைக்கலாம். ஆனால் மரண தண்டனை என்று ஒன்று இருக்கவே கூடாது. அது மனித நேயத்துக்கு முற்றிலும் அன்னியமானது.
(comments may be sent to sathyanandhan.writer@gmail.com
(image & news courtesy: AFP)