பர்ஃபி திரைப்படம் நுட்பமான வணிகம்
என் மகன் பரிந்துரையில் பர்ஃபி திரைப்படம் பார்க்க முடிவு செய்தேன். எனக்காக அவன் தொலைக்காட்சியிலிருந்து அதை தரவிறக்கம் செய்து கொடுத்தான். அப்போதும் என்னால் தொடர்ந்து பார்க்க நேரமில்லை. இரண்டு மூன்று பகுதிகளாகப் பார்த்து முடித்தேன்.
ஒரு படம் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்னும் கட்டாயம் இருக்கிறது. அதனால் எல்லா வயதுக்காரர்களையும் எல்லாத் தரப்பினரையும் திருப்தி படுத்த வேண்டும் இல்லையா?
நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது ‘கோஷிஷ்’ என்று ஒரு படம் வந்து மிகவும் கொண்டாடப் பட்டது. எங்கள் ஊரில் ஹிந்தி படம் வருவது அரிது. நான் அதை இது வரை பார்க்கவில்லை. சஞ்சீவ் குமார் மற்றும் ஜெயா பச்சன் மிகவும் தத்ரூபமாகக் காது கேளாத வாய் பேசாத கதா பாத்திரங்களில் நடித்தார்கள் என்று கேள்விப் பட்டேன். அதன் தழுவல் தமிழில் கமலஹாசன், சுஜாதா நடிப்பில் வந்தது. சமீபத்தில் மொழி என்று ஒரு படம் ஜோதிகாவின் பக்குவமான நடிப்பில் வந்தது. இந்தப் படங்களைப் பார்க்கும் போது நாம் மாற்றுத் திறனாளிகளின் உலகை ஒரு கணம் நினைவு கூருகிறோம். முடிந்தால் இன்னும் அருகில் சென்று புரிந்து கொள்கிறோம்.
முதலில் விசு மற்றும் கிரேஸி மோகன் காது கேட்காத மாற்றுத் திறனாளிகளைக் கொச்சைப் படுத்தி எடுக்கும் நாடகங்கள் படங்கள் இவற்றோடு நான் மேலே குறிப்பிட்ட படங்களை ஒப்பிடுவோம். கண்டிப்பாக இந்தப் படங்கள் அவர்களது படங்களை விட மேலானவையே. வணிகத்துக்காக விசு கிரேஸி மோகன் மனிதாபிமானமே இல்லாமல் மாற்றுத் திறனாளிகளை நக்கல் அடிப்பது கேவலம்.
பர்ஃபிக்கு வருவோம். சினிமாத்தனமான காட்சிகள் ஏகப்பட்டதோடு வருவது இந்தப் படம். காது கேட்காத, வாய் பேச இயலாத ஒரு மாற்றுத் திறனாளியான இளைஞன் அதே போன்ற ஒரு இளம் பெண்ணைக் கடத்தி விடுகிறான். அது அவளுக்கு உதவியாகவே அமைகிறது. அவளைத் தேடிக் கண்டுபிடித்து மணக்கிறான். இருவரும் ஒன்றாகவே (வயதாகி) உயிர் நீக்கிறார்கள். சாதாரணமான ஒரு பெண் அவனைக் காதலிக்கிறாள். ஆனால் கைப்பிடிக்க முடியவில்லை. இறுதி வரை அவனுக்கு அருகாமையில் இருக்க முயலுகிறாள்.
டார்ஜிலிங் மற்றும் கொல்கத்தாவின் பின் புலத்தில் எடுக்கப் பட்ட படம் இது. கதாநாயகனான இளைஞன் கதாநாயகியை விட அறிவுத் திறனும் செயற்திறனும் உள்ளவனானக் காட்டப் படுகிறான். கதாநாயகியாக நடித்திருக்கும் பெண்ணின் நடிப்பு மிகவும் நம் மனதில் நிற்கிறது. உண்மையில் அவள் மூலமாகவே நாம் மாற்றுத் திறனாளிகளின் வித்தியாசமான உலகைப் புரிந்து கொள்கிறோம். சினிமாவின் உத்திகளில் இது போன்ற கதைத் தேர்வும் இருப்பது ஒரு நல்ல அம்சமே. மாற்றுத் திறனாளிகள் குறித்த அணுகு முறையில் கண்டிப்பாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய படம். பாராட்டுகள்.
(image courtesy: wiki)