இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு- ஜெயமோகன் துவக்கிய விவாதம்


Godess Andal

இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு- ஜெயமோகன் துவக்கிய விவாதம்

எத்தனையோ ஆழ்வார்கள், நாயன்மார்கள் இருந்தாலும் ஆண்டாளின் இடம் ஏன் இன்று வரை தனித்தன்மையாக இருக்கிறது? அவர் பெண் என்பதே. அவரது பாசுரங்கள் இன்றும் பெண் உலகு பற்றிய நம் மேம்பட்ட புரிதலுக்குப் பாலமாகின்றன.

“பெண்கள் இலக்கிய உலகில் இயங்கும் போது அவர்கள் பங்களிப்பு இன்னும் அதிகம் தேவை – எல்லாவிதமாகவும் தேவை ” என்னும் கருத்தை முன் வைத்து ஜெயமோகன் இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார். முதல் கட்டுரைக்கு இரண்டு பெண் படைப்பாளிகள் கடுமையான எதிர்ப்பை முன் வைத்து அதை தினமலரில் செய்தியாக்கிய நிலையில் அவர் இரண்டாம் கட்டுரையை எழுதியுள்ளார். அதன் ஒரு பகுதி இங்கே:

“இந்தப்பெண் படைப்பாளிகள் எதையாவது வாசிக்கிறார்களா? எதையாவது தெரிந்துகொள்கிறார்களா? எந்த இலக்கியப்படைப்பப் பற்றியாவது எழுதியிருக்கிறார்களா? அதைத்தான் கேட்கிறேன். ஒரு விமர்சகனாக. மிகமரியாதையான சொற்களில், எந்தத் தனிப்பட்ட எழுத்தாளர் பெயரையும் சுட்டாமல் அதை முன்வைக்கிறேன். அப்படி கறாரான பார்வையை முன்வைக்கும்போதே குறிப்பிடும்படி எழுதியிருக்கும் அத்தனை படைப்பாளிகளையும் சுட்டிக்காட்டி அக்கட்டுரையிலேயே எழுதியிருக்கிறேன். சென்ற இருபதாண்டுக்காலத்தில் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதிய அத்தனை பெண்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.பாராட்டியிருக்கிறேன்.”

முதல் கட்டுரையில் மிகவும் நாசுக்காக சில மூத்த பெண் எழுத்தாளர்களைப் பட்டியலிட்ட ஜெயமோகன் இந்தக் கட்டுரையில் நேரடியாக எழுதியுள்ளதை நான் வரவேற்கிறேன். கண்டிப்பாக விவாதத்துக்கு உட்பட்டதே பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு. அடுத்தது அவர் கருத்து தவறென்றால் சமகாலப் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பைக் குறிப்பிட்டு எதிர் வாதம் செய்ய வேண்டுமே ஒழிய இந்த விவாதத்தைத் துவக்கியதே குற்றம் என்று தாக்குவது முறையானதே அல்ல. ( ஜெயமோகனின் பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாகத் தமிழ் எழுத்துரு பற்றிய அவரது பரிந்துரையால் மிகவும் மனம் காயப் பட்டேன். அது வேறு விஷயம். இலக்கியம் என்று வரும் போது விவாதங்களில் நிலைப்பாட்டை மட்டுமே நாம் காண வேண்டும்)

இலக்கியவாதிகளில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரை மிகவும் தீவிரமான பங்களிப்புக்காகவே நாம் மிகவும் பாராட்ட வேண்டும். அடிப்படையில் கடுமையான வாசிப்பு என்னும் பின்புலம் உள்ளவர்கள். இலக்கிய அமர்வுகள், நூல் விமர்சனங்கள், மற்றும் அவர்களின் புனை கதைப் பங்களிப்புகள் என அவர்கள் இருவரும் செய்து வரும் பணி பிரமிக்க வைப்பது. தமிழ் இலக்கியத்துக்கு அரிய தொண்டு. இதில் ஐயமேயில்லை. (மனுஷ்ய புத்திரனை சேர்த்துக் கொள்ளலாம். அரசியல் சார்பு மிகப் பெரிய பலவீனம்)

இவர்கள் மற்றும் மூத்தவர்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் இவர்களையும் நாம் சேர்த்துப் பார்க்கும் போது தீவிரமாகவும் பன்முகமாகவும் இயங்கியதைக் காணலாம்.

விமர்சனம், இலக்கிய அமர்வுகள் என புனை கதையைத் தவிர்த்தும் இவர்கள் தொடர்ந்து பங்காற்றியதால் மட்டுமே என்னையும் சேர்த்து எத்தனையோ எழுத்தாளர்கள் ஈர்க்கப் பட்டு உருவானார்கள். இன்னும் ஆகி வருகிறார்கள்.

ஒரு பெண் அரசுத் துறையிலோ தனியார் துறையிலோ பணிபுரியும் போது ஆண்கள் வெட்கப் படுமளவு அரிய சாதனைகளைச் செய்து காட்டுகிறார். அப்போது அவர் எதனால் பாராட்டுப் பெறுகிறார்? தமது பணியில் அவர் செய்த சாதனைகளுக்காகத் தான். அவர் பெண் என்பதால் மட்டுமல்ல.

இதைத் தான் இலக்கிய உலகிலும் ஜெயமோகன் எதிர்பார்க்கிறார். நியாயமான எதிர்பார்ப்பு. கொஞ்சம் எழுதினாலும் கவனிப்பும் பாராட்டும் கிடைக்கும் சூழலில் கூட ஏன் பெண் எழுத்தாளர்கள் ஆமை போல ஒரு ஓட்டுக்குள் அடைபட்டுக் கொள்கிறார்கள்?

கருத்துத் தளத்தில் ஏன் பின்வாங்கி விடுகிறார்கள்? இன்று நாடெங்கும் பாலியல் வன்முறை குறித்து மிகப்பெரிய அதிர்ச்சியும் வருத்தமும் கலந்த விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண் படைப்பாளிகள் கத்தி போல பேனா என்னும் ஆயுதத்தைச் சுழற்றி இருக்க வேண்டாமா?

இந்த உலகம் அடிப்படையில் பெண்களின் உலகம். என் மகன் என்னிடமும் தன் தாயிடமும் பழகுவதில் உள்ள வேறுபாட்டை நான் கூர்ந்து கவனிக்கிறேன். நானுமே எத்தனையோ விஷயங்களை என் தாயின் கண்ணோட்டத்தில் தான் பார்க்கத் துவங்கினேன் என்று நினைவு கூறுகிறேன். குடும்பத்தில் மற்றும் உறவு ஊர் மத்தியில் நிகழும் பரிமாற்றங்கள் பெண்களின் வடிவமைப்பே. ஆண்களின் உலகம் நிறமற்றது. தட்டையானது. பெண்களின் உலகம் நிறங்களும் கனவுகளும் நிறைந்தது; மென்மையும் நுட்பமும் கொண்டது. விடாப் பிடியான பற்றுதல்களுடன் வலிமையான உறவுத் தளத்தை ஆக்கும் வல்லமை கொண்டது.

இந்த இடத்தில் தான் பெண் இலக்கியவாதியின் தனித் தன்மை இருக்கிறது. கணவன் மனைவி, குடும்ப உறவுகள், சமூக அவலங்கள், பெண்ணின் இடம் சமூகத்தில் இவற்றை ஆண் எழுத்தாளர் காண்பது ஒரு ஆணில் வரையறுக்கப்பட்ட பார்வையுடன் மட்டுமே. அதையே ஒரு பெண் காண்பது இன்னும் துல்லியமாக, இன்னும் பல பரிமாணங்களில். ஆனால் பெண் எழுத்தாளரோ தன் பங்களிப்பு தேவை என்று இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை. இது உள்ளங்கை நெல்லிக்கனி.

பெண்கள் தமிழ் இலக்கியத்துக்கு இன்னும் வளம் சேர்க்கும் கற்பனையும் வல்லமையும், பொறுப்பும் உடையவர்கள். இன்று வரை அதை உணராதவர்களாகவே இருக்கிறார்கள். இதை ஒரு விவாதமாகத் துவக்கி இருக்கும் ஜெயமோகனைப் பாராட்ட வேண்டும் . வசை பாடுவது குறுகிய அணுகு முறை.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு- ஜெயமோகன் துவக்கிய விவாதம்

  1. johan paris says:

    துவக்கிய ” சமீப காலமாக இச் சொல் ஆரம்பம் எனும் பொருள் தரும் இடங்களில் வருகிறது.
    ஆனால் “தொடக்கம்” எனவே நான் படித்தேன், எழுதினேன்.
    துவக்கம், துவக்கி – இவை கொச்சையான உச்சரிப்பாகக் கணிக்கப்பட்டது. (அம்மாவைக் கொம்மா என்பது போல்-மிகக் கிராமிய பேச்சு வழக்கு- இப்போ இப்படிப் பேசுவோர் இல்லையெனலாம்) அதனால் எழுத்து வழக்கில் இல்லாதது.ஆனால் அச்சூடகங்கள், இணையம் எங்கும் பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது. தவறானாலும் அது பல இடங்களில் பதிவாகும் போது, சரியெனக் கொள்ள ஏதுவாகிவிடும் ஆபத்துண்டு. அதனால்
    தயவு செய்து இதில் எது சரியானது, தொடரப்பட வேண்டியது எனக் கூறவும்.

    • “தொடங்கி வைத்த, துவக்கி வைத்த” இவை இரண்டையும் அதே போல் “தொடங்கிய துவக்கிய” இவை இரண்டையும் மாற்றிப் பயன்படுத்தலாம் என்பதே என் கருத்து. நான் தமிழ் எழுத்தாளர். பேராசிரியர் அல்லேன். பேராசிரியர்களுக்கு என்னை விடத் தெளிவான புரிதல் இவை பற்றி இருக்கும். அன்பு சத்யானந்தன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s